வெள்ளி, 22 ஜனவரி, 2016

சவுக்கு :வீழ்ச்சியிலிருந்து நீதித்துறையை....ஒவ்வொரு குடிமகனும் மனதுக்குள் விஜயகாந்தைப் போலவே “தூ” என்று துப்பிக்கொண்டு

c8savukku.com :குற்றவாளி ஜெயலலிதா அல்ல 3 : ஆருஷி தல்வார் கொலை வழக்கைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.    இந்திய நீதித்துறை வரலாற்றில் வழங்கப்பட்ட மிக மோசமான தீர்ப்புகளில் அது ஒன்று.     புலனாய்வு செய்த அமைப்பான சிபிஐ தனது அறிக்கையில், இந்த வழக்கில் யார் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாது என்று கூறியிருந்தபிறகும், விசாரணை நீதிமன்றம், அந்த அறிக்கையை தள்ளுபடி செய்து, ஆருஷியின் பெற்றோர் மீது வழக்கு நடத்தியது.    அவசர அவசரமாக நடத்தப்பட்ட அந்த வழக்கு விசாரணையில், எதிர் தரப்பு சாட்சியங்களில் உள்ளவர்களை முழுமையாக விசாரிக்க அனுமதிக்காமல், தேவையான ஆவணங்களை முழுமையாக தராமல் நடத்தி முடிக்கப்பட்டது அந்த வழக்கு.   சந்தேகத்தின் பலன் குற்றவாளிக்குத் தரப்பட வேண்டும், சந்தேகத்திற்கு இடமற குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற குற்றவியல் நடைமுறையின் அடிப்படைகள் காற்றில் பறக்க விடப்பட்ட வழக்கு அது.
ஆருஷி வழக்கில் நீதிமன்றம் வெளிப்படுத்திய ஆர்வத்தில் 25 சதவிகித ஆர்வத்தை ஜெயலலிதாவின் வழக்குகளில் காண்பித்திருந்தால் கூட இந்நேரம் அவர் சிறையில் இருப்பார்.   ஆனால், ஒரே ஒரு நீதிமன்றம் கூட அவ்வாறான ஆர்வத்தை காண்பிக்கவில்லை.  மாறாக, ஜெயலலிதாவை காப்பாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட்டன.


பிறந்தநாள் பரிசு வழக்கு :   1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தார்.  1992ல் 57 நபர்களால் 87 டிமான்ட் ட்ராப்டுகள் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கப் படுகின்றன.   அந்த 87 டிமான்ட் ட்ராப்டுகளும் பல்வேறு நபர்களால் வழங்கப் படுகின்றன.   இது தவிர ரொக்கமாக ஒரு 15 லட்சம் வழங்கப் படுகிறது.     வெளிநாட்டில் இருந்து வந்த 3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கான டிமான்ட் ட்ராப்டும் அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்கப் படுகிறது.  3 லட்சம் அமெரிக்க டாலர்களை நியூயார்க் நகரத்தில் உள்ள பேங்கர்ஸ் ட்ரஸ்ட் கம்பேனி என்ற நிறுவனம்,  ஏ.என்.இஸட்.க்ரின்ட்லேஸ் வங்கியின், செயின்ட் ஹீலியா, ஜெர்சி, சேனல் தீவுகள், என்ற இங்கிலாந்தில் உள்ள கிளையில்  எடுக்கப் பட்டிருக்கிறது.  அமெரிக்காவில் இருந்து ஜெயலலிதாவுக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர்களை டிமான்ட் ட்ராப்டாக அனுப்பியவர் கே.டி.பி.மேனன் என்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்.   அவர் 1992லேயே இறந்து விடுகிறார்.
இந்தப் பணத்தை, ஜெயலலிதா மைலாப்பூர் கனரா வங்கியில் உள்ள தனது சேமிப்புக் கணக்கில் (எஸ்.பி.அக்கவுன்ட் 23282) போட்டுக் கொள்கிறார்.  இந்த 3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு அப்போது அமலில் இருந்த வெளிநாட்டிலிருந்து பணம் வருவது தொடர்பான சட்டத்தின் கீழ், வருமான வரி விலக்கு கோருகிறார்.  இதையடுத்தே இந்த விவகாரம் சூடு பிடிக்கிறது.
சிபிஐ விசாரணையில் தெரிய வந்த விஷயம் 89 டிமான்ட் ட்ராப்டுகளை எடுத்துக் கொடுத்த 57 பேர்களில் 12 பேர் போலியானவர்கள்.  அப்படி ஒரு நபரோ முகவரியோ இல்லை.   மற்றொரு 12 பேர் எங்களுக்கும்  இதற்கும் சம்பந்தமே இல்லை, நாங்கள் டிமான்ட் ட்ராப்ட் எடுக்கவில்லை என்று கூறி விட்டனர்.  மீதம் உள்ள 33 பேர் யார் என்று பார்த்தால் அத்தனை பேரும், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மந்திரிகளாகவும், வாரியத் தலைவர்களாகவும் இருந்தனர்.  ஆக, மந்திரியாக இருப்பதற்கும், வாரியத் தலைவராக இருப்பதற்கும் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப் பட்ட லஞ்சமே அந்த பரிசுத் தொகை என்று சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ததது.
ஜெயலலிதா தரப்பு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இந்த வழக்கின் விசாரணை தொடங்கப்படாமலேயே தாமதப்படுத்தப்பட்டது.   இறுதியாக வழக்கு 2011ல் விசாரணைக்கு வந்தது.   அப்போது இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆகையால் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா மனு தாக்கல் செய்கிறார்.
“இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யவே 4 ஆண்டுகள் தாமதம் ஆனதோடு மட்டுமல்லாமல் புலனாய்வை முடித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது.   இந்த தாமதத்திற்கு சிபிஐ தரப்பு போதுமான காரணங்களை எடுத்து வைக்கவில்லை.  இந்த தாமதத்தால், மனு தாரர்கள் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இதனால் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21 உத்தரவாதப் படுத்தியுள்ள அடிப்படை உரிமையான வாழும் உரிமையை பறிக்கப் பட்டள்ளது. மேலும், மனுதாரர் தானாக முன் வந்து, வருமான வரித் துறையினருக்கு பரிசு விவகாரத்தை தெரிவித்துள்ளார்.  அவருக்கு மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இந்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதித்தால், அது நீதிப் பிறழ்வாகும்.”   என்று கூறி, ஜெயலலிதா மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்தார்.
வழக்கு விசாரணை நடந்து அதிலிருந்து விடுதலை பெறுவது என்பது வேறு.  ஆனால் பிறந்தநாள் பரிசு வழக்கில் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.    லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 13 (1) (d) என்ன கூறுகிறது என்றால், ஒரு பொது ஊழியர், பொது நலனுக்காக அன்றி, எது பெற்றாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது.   500 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள் வருடக்கணக்கில் நீதிமன்றங்களுக்கு இன்னமும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால்,   10 ஆண்டுகள் தாமதமானதால், ஜெயலலிதாவின் வாழும் உரிமை பறிக்கப்பட்டு விட்டது என்று நீலிக்கண்ணீர் வடித்து, வழக்கையே ரத்து செய்தார், நீதிபதி கே.என்.பாஷா.
கே.என்.பாஷாவின் இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ செய்த மேல் முறையீடு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
டான்சி வழக்கு :   1991ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது முதலாகவே, அவருடைய ஆருயிர் தோழில் சசிகலாவோடு சேர்ந்து, தமிழகத்தில் உள்ள நிலங்களையெல்லாம் அபகரிப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டனர்.   அப்படி அபகரிக்கப்பட்ட நிலங்களில் ஒன்றுதான் டான்சி.     டான்சி நிறுவனம், தமிழக அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனம்.   அந்த நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை, தமிழ்நாடு சர்க்கரை நிறுவனத்துக்கு விற்பனை செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.   அப்படி எடுக்கப்பட்ட முடிவு, திடீரென்று ஏலத்தின் மூலம் விற்பனை செய்வது என்று மாற்றப்பட்டது.   ஏல அறிவிப்பு வெளியானதும், அந்த ஏலத்தில் பங்கெடுத்து அந்த நிலத்தை சந்தை விலையை விட குறைவான விலைக்கு வாங்கியது, ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரராக இருந்த சசி என்டர்பிரைசஸ் நிறுவனம்.     30 செப்டம்பர் 1992 அன்று கிண்டியில் இருந்த டான்சி நிலத்தை ஜெயலலிதா வாங்கினார்.   இந்த விஷயம் வெளியில் கசிந்த உடனே, திமுக இவ்விவகாரத்தை கையில் எடுத்தது.
16 செப்டம்பர் 1992ல்,  திமுக தலைவர் கருணாநிதி, ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று, ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க அனுமதி கோரினார்.    அவர் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளில் டான்சி நில பேரமும் ஒன்று.   1993ல், திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.சாய்பாரதி,  சென்னை உயர்நீதிமன்றத்தில் டான்சி நில பேரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தார்.  1993ம் ஆண்டிலேயே, சுப்ரமணிய சுவாமியும், ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க ஆளுனரிடம் மனுத் தாக்கல் செய்தார்.  இந்த வழக்குகளெல்லாம் நீதிமன்றத்தில் வந்து, அதற்கு தீர்வு கிடைக்கும் முன், மக்கள் மன்றத்தில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
1996ல் திமுக பதவியேற்றதும், டான்சி நில பேரம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.   ஜெயலலிதா, சசிகலா, டான்சி மேலாண் இயக்குநர் டி.ஆர்.சீனிவாசன், ஊரக தொழில் அமைச்சர் முகம்மது ஆசிப், துணை ஆட்சியர் நாகராஜன் மற்றும் ஜெயலலிதாவின் கூடுதல் செயலர், கர்பூரசுந்தரபாண்டியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது 19 ஜுலை 1999 அன்று குற்றச்சாட்டகள் பதிவு செய்யப்பட்டன.   ஜெயலலிதாவை எல்லா வழக்குகளிலும் விடுதலை செய்த அதே தங்கராஜ் நீதிபதி 13 ஜனவரி 2000 அன்று, ஜெயலலிதா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான முகாந்திரம் இல்லையென்று, குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்தார்.     உச்சநீதின்றத்தில் செய்த மேல் முறையீட்டில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்ந்தது.
9 அக்டோபர் 2000 அன்று, ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்த நீதிபதி அன்பழகன், அனைத்து குற்றவாளிகளுக்கும் தலா  மூன்று ஆண்டுகள் தண்டனை விதித்தார்.   2001ல் நடைபெற்ற தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெற்றது.    தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தும், ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் அப்போதைய ஆளுனர் பாத்திமா பீவி.      ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் வெற்றி பெற்ற இறுமாப்பில்தான்,  நள்ளிரவு கைது, பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் என்று அராஜகத்தில் இறங்கினார் ஜெயலலிதா.
4 டிசம்பர் 2001 அன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.தினகர், ஜெயலலிதா அப்பழுக்கற்றவர்.   டான்சி நிலம் வாங்கியதில் எவ்விதமான முறைகேடும் இல்லை என்று அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சுப்ரமணிய சுவாமி ஆகியோர் தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.     ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜரானார்.    26 செப்டம்பர் 2002 அன்று வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்தி வைத்தது, நீதிபதிகள் ராஜேந்திர பாபு மற்றும் வெங்கட்ராம ரெட்டி அடங்கிய அமர்வு.      நவம்பர் 2003ல் இவ்வழக்கின் தீர்ப்பு வந்தது.
விசாரணையை முடித்து, தீர்ப்பு வழங்க பதினாலு மாதங்களா என்று யாரும் கேள்வி எழுப்ப முடியவில்லை.   சாவகாசமாக தங்கள் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், ஜெயலலிதா செய்தது தவறாக இருந்தாலும், அவர் வாங்கிய நிலத்தை திருப்பி அளித்து விட்டார்.   அவர் செய்ததை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை.   அவர் செய்த காரியம் சரியா இல்லையா என்பதை அவர் மனசாட்சிக்கே விட்டு விடுகிறோம் என்று தீர்ப்பளித்தனர்.
இது போன்ற வெட்கக்கேடான தீர்ப்பை பார்க்க முடியுமா ?   அரசு நிலத்தை முதல்வராக இருக்கும் ஒருவர் அடிமாட்டு விலைக்கு வாங்குகிறார்.   விசாரணை நடந்த சமயத்தில், அவரது ஆடிட்டர் அவரது பி.ஏ, அமைச்சரவை சகாக்கள் ஆகியோர் பார்த்து அடையாளம் காட்டிய அவரது கையெழுத்தை இது என்னுடைய கையெழுத்து இல்லை என்று நீதிமன்றத்தில் பொய் சாட்சி கூறுகிறார்.   ஆனால், இவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படவில்லை நீதிமன்றத்தால்.    நீதிபரிபாலனம் செய்ய வேண்டிய நீதிமன்றம், ஜெயலலிதா மனசாட்சியிடம் முறையிட்டது.
இந்த வழக்குகளைத் தவிர, நீதிமன்றப் படியே ஏறாத வழக்குகள் பத்துக்கும் மேற்பட்டவை உள்ளன.   அந்த வழக்குகளின் புலன் விசாரணை 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் வரை முடியாமல் இருந்ததால், 2001ல் ஆட்சிப் பொறுப்பேற்றதும், அத்தனை வழக்குகளையும் ஒரு ஆழமான குழியில் போட்டுப் புதைத்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவால் எப்படி இத்தனை வழக்குகளில் இருந்தும் விடுதலை பெற முடிந்தது என்பது நீதித்துறைக்கு மட்டுமே தெரிந்த மர்மம்.   இது குறித்து பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர் “ஜெயலலிதாவை இந்த வழக்குகளில் இருந்தெல்லாம் காப்பாற்றியது அவரது ஜாதியும் பணமுமே.    நீதித்துறையின் இண்டு இடுக்களில் புகுந்து வெற்றிகரமாக வெளியேற இந்த இரண்டும் அவருக்கு பேருதவி புரிந்தன.
கடந்த 23 வருடங்களாக, ஜெயலலிதாவுக்காக ஆஜராகாத உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களே இல்லை எனலாம்.    மூன்று முன்னாள் சட்ட அமைச்சர்களான ராம் ஜெத்மலானி, அருண் ஜெய்ட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் அவருக்கு ஆஜராகியுள்ளனர்.  மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சரான கபில் சிபல்லும் அவருக்காக ஆஜராகியுள்ளார்.  மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சரான சித்தார்த் சங்கர் ரே வை ஒரு சாதாராண மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக வைத்தவர்தான் ஜெயலலிதா.   இது வரை ஜெயலலிதா வழக்கறிஞர்களுக்காக செலவழித்த தொகையை கணக்கிட்டாலே 150 கோடியைத் தாண்டும்.   இப்படி இத்தனை மூத்த வழக்கறிஞர்களை தனக்காக வாதாட வைத்த ஒரே அரசியல்வாதி ஜெயலலிதா மட்டுமே.
இந்திய நீதித்துறையில் உச்சநீதிமன்றம் முதல், நடுவர் நீதிமன்றங்கள் வரை புரையோடிப் போயுள்ள ஊழலின் அறிகுறியே ஜெயலலிதா.  ஜெயலலிதா நோயல்ல.  அவர் நோயின் அறிகுறி.
ஜெயலலிதா சந்தித்த ஊழல் வழக்குகளை யாராவது ஒரு சட்ட மாணவர் ஆராய்ச்சி செய்தாரென்றால் இந்திய நீதித்துறையின் சீரழிவை அடையாளம் கண்டு கொள்ளலாம்.” என்றார்.
அவர் கூறுவது உண்மையே.   இத்தனை ஊழல் வழக்குகளில் இருந்தும் ஜெயலலிதா தப்பித்ததற்கு முழுக்க முழுக்க உடந்தையாக இருந்தது நீதிமன்றங்களே.    ஜெயலலிதாவை பல்வேறு வழக்களில் விடுவித்த நீதிபதி தங்கராஜ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்படையாகவே ஊடகங்களில் வந்தன.  இணைப்பு ,  ஆனால் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியாகவே உள்ளார்.    இது போல பல்வேறு வழக்குகளில் ஜெயலலிதாவை விடுவித்த நீதிபதிகளும் எவ்விதமான விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டதில்லை.
அரசு நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டால், ஜெயலலிதாவின் மனசாட்சியிடம் அது குறித்து கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் ராஜேந்திர பாபுவும், வெங்கட்ராம ரெட்டியும் வழங்கிய தீர்ப்பு இறுதியாகியது.    இந்நாள் வரை, அத்தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்படவில்லை.    இந்தத் தீர்ப்பை வழங்க இந்த இரு நீதிபதிகளும் எடுத்துக் கொண்ட கால அவகாசம் 14 மாதங்கள்.
ஆனால் குமாரசாமி அப்படியெல்லாம் அதிக காலத்தை எடுத்துக் கொள்ளவில்லை.   வெகு விரைவாக தீர்ப்பை வெளியிட்டார்.   அவர் எழுதிய தீர்ப்பா என்ன !!!               குமாரசாமியின் தீர்ப்பு எத்தகையதொரு பிழைனான தீர்ப்பு என்பதை நாடே அறியும்.    ஆனாலும் இத்தீர்ப்பு வெளியாகி எட்டு மாதங்கள் கடந்த பின்னும் அது தடைசெய்யப்படாமல் நீடித்துக் கொண்டிருக்கிறது.
2013 நவம்பர் மாதத்தில் கவுகாத்தி உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது.   அத்தீர்ப்பில், சிபிஐ அமைப்பு உருவாக்கப்பட்டது சட்டத்தின் அடிப்படையில் இல்லை.  அதற்கு வழக்குகளை புலனாய்வு செய்ய அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது.   நாடே பரபரப்பானது.  மத்திய அரசு ஆடிப்போனது.   சிபிஐ அப்போது 2ஜி உள்ளிட்ட பல்வேறு முக்கியமான வழக்குகளை புலனாய்வு செய்து வந்தது.  உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகிய மத்திய அரசு, கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை கேட்டது.   நீதிமன்றமும் உடனடியாக தடை விதித்து.
அப்படியொரு அவசரமான வழக்குதானே ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கும் ?    சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் அனைத்துக்கும் வருமான வரி கட்டினால் அது சட்டபூர்வமாக ஆகி விடும் என்கிற தீர்ப்பு, இந்தியா முழுக்க நிலுவையில் உள்ள லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்குகள் அனைத்தையும் பாதிக்கக்கூடிய ஒரு தீர்ப்பு.    கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை காரணம் காட்டி இதர குற்றவாளிகள் விடுதலை பெறுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.    இப்படிப்பட்ட சூழலில், உச்சநீதிமன்றம் இதற்கு உடனடியாக தடை விதித்திருக்க வேண்டாமா ?  தானாக முன்வந்துதான் தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், கர்நாடக அரசு மேல் முறையீடு செய்த பிறகாவது தடை விதித்திருக்க வேண்டாமா ?   ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதி மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “உங்களுக்கு வேண்டுமானால் இந்த வழக்கு முக்கியமான வழக்காக இருக்கலாம்.  ஆனால் எங்களுக்கு இது மற்ற வழக்குகளைப் போல சாதாரணமான வழக்குதான்” என்றார்.
இப்படித்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க கணிதப் பிழையை உச்சநீதிமமன்றம் அணுகுகிறது.     கர்நாடக உயர்நீதின்றத் தீர்ப்புக்குப் பிறகு, பெரும்பாலான வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் நியாமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையை அறவே இழந்து விட்டார்கள்.     தமிழகம் மற்றும் டெல்லியில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்களிடம் பேசினால், இவ்வழக்கில் ஜெயலலிதா நிச்சயம் விடுதலை பெறுவார் என்றே சொல்கிறார்கள்.     பொதுமக்கள் கருத்தை கேட்கவே வேண்டாம்.    100 சதவிகிதம் ஜெயலலிதா விடுதலை பெறுவார் என்றே கூறுகிறார்கள்.
அந்த அளவுக்கு, ஜெயலலிதாவுக்கும், இந்திய நீதித்துறைக்குமான உறவை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.    ஜெயலலிதாவை எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்க முடியாது என்ற நம்பிக்கையே பரவலாக நிலவுகிறது.  அந்த அளவுக்கு மக்கள் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள்.
நீதிமன்றங்களின் மீதான இந்த அவநம்பிக்கைக்கு காரணம் நீதிமன்றங்களே.     ஜெயலலிதா அல்ல.      வேதனை தரும் இந்த போக்கை எதிர்த்து கேள்வி கேட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை காண்பித்து பயமுறுத்துகின்றன நீதிமன்றங்கள்.  கவிஞர் வைரமுத்து, சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசுகையில் “நீதிபதிகள் வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருந்து விட்டு, ஓய்வுப்பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகி விடுகின்றனர்” என்று பேசியதற்கு,  சென்னை உயர்நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.   நடந்த உண்மையை சொன்னதற்காக இப்படி ரோஷப்படும் நீதிமன்றங்கள், தங்கள் முன் உள்ள வழக்குகளில்  நீதிபரிபாலனம் செய்வதில் இந்த வேகத்தைக் காட்டுவதில்லை என்பதுதான் வேதனை.
ஆனால், பொதுமக்களின் பார்வையில் இந்த, நீதிமன்றங்களும் சுத்தமாக மரியாதையை இழந்து நிற்கின்றன என்பதுதான் உண்மை.    அவமதிப்பு வழக்குக்கு பயந்து அவர்கள் வெளிப்படையாக பேசுவதில்லையே தவிர, ஒவ்வொரு குடிமகனும், தங்கள் மனதுக்குள் விஜயகாந்தைப் போலவே “தூ” என்று துப்பிக்கொண்டுதான் உள்ளனர்.
இந்த மோசமான வீழ்ச்சியிலிருந்து நீதித்துறையை மீட்டெடுப்பது உச்சநீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது.    மீட்டெடுக்குமா, கோட்டை விடுமா என்பது பிப்ரவரியில் தெரியும்.   காத்திருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக