வெள்ளி, 22 ஜனவரி, 2016

குடிகாரர்கள் குஷி...அமைச்சர் நத்தம் விசுவநாதன் குடிமகன்களின் வயிற்றில் பால்/நஞ்சு வார்த்தார்


சென்னை: ''தமிழகத்தில் மது விலக்கை
அமல்படுத்தவே முடியாது,'' என, சட்டசபையில் நேற்று, அந்தத் துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால், 'குடி'மகன்கள் அனைவரும், குஷி அடைந்துள்ளனர். மது விலக்கை வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் அடைந்தன.
தமிழகத்தில் மது விலக்கை வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாக ஏராளமான போராட்டங்கள் நடந்தன. ஆளுங்கட்சியைத் தவிர்த்து, மற்ற கட்சிகள் எல்லாமே, இதை ஆதரித்து குரல் கொடுத்தன. தேர்தல் நெருங்கும் நேரத்திலாவது, இதற்கு அரசு செவி சாய்க்கும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடத்திலும் இருந்தது.    மது உற்பத்தி தொழில்சாலையே அக்கா ,தங்கை மேற்பவையில் நடக்கிறது மது கொள்முதலும் அவர்கள் தொழில் சாலையில் நடக்கிறது அப்படி இருக்கையில் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளி போட்டு கொள்வார்களா ?


இந்நிலையில், இந்தப் பிரச்னை நேற்று சட்டசபையில் ஒலித்தது. தே.மு.தி.க., உறுப்பினர் பார்த்தசாரதி இதை கிளப்பினார். அதற்கு ஆதரவாக, தி.மு.க., - மா.கம்யூ., கட்சி உறுப்பினர்களும் பேசினர்.அது பற்றிய பரபரப்பு விவாதம் வருமாறு:

தே.மு.தி.க., - பார்த்தசாரதி: 'பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்' என, அனைத்து கட்சிகளும், கோரிக்கை விடுத்துள்ளன; ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. மதுக்கடைகளை மூடி, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, தமிழகம் ஏன் இருக்கக் கூடாது?

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: யார் தான் இந்தக் கோரிக்கையை வைப்பது என்ற விவஸ்தை இல்லையா; இது தொடர்பாக, சட்டசபையில் பல முறை பேசி உள்ளேன். நடைமுறை சூழ்நிலையில், தமிழகத்தில், மது விலக்கு சாத்தியமல்ல. மது விற்பதில், எங்களுக்கும் உடன்பாடு இல்லை. ஆனாலும், வருத்தத்தோடு தான் இதை செய்கிறோம். இந்தப் பிரச்னைக்கு பதில் அளிக்க, கருணாநிதி கூறிய கருத்தை இரவல் வாங்குகிறேன். 'எரிகிற நெருப்பு ஜூவாலைக்கு மத்தியில், கற்பூரம் பாதுகாப்பாக இருக்க முடியாது' என, அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

தி.மு.க., - துரைமுருகன்: மது விலக்கை அமல்படுத்த முடியுமா, முடியாதா; அதை கூறுங்கள்.நத்தம் விஸ்வநாதன்: மத்திய அரசு, அனைத்து மாநிலங்களிலும், மது விலக்கை அமல்படுத்தினால், அதை ஆதரிக்கும் முதல்ஆளாக, முதல்வர் ஜெயலலிதா இருப்பார்.

மார்க்சிஸ்ட் கம்யூ., - சவுந்திரராஜன்: மது விலக்கை அமல்படுத்தினால், வருவாய் இழப்பு ஏற்படும் என, பயப்படுகிறீர்கள்.

விஸ்வநாதன் : அது, ஒரு காரணம். மதுக்கடைகளை மூடினால், தமிழகத்திற்கு வர வேண்டிய வருவாய், பக்கத்து மாநிலங்களுக்கு சென்று விடும். 'நம் வீட்டு கோழி, பக்கத்து வீட்டில் முட்டையிட எப்படி அனுமதிக்க முடியும்' என, கருணாநிதியே கேட்டிருக்கிறார்.

துரைமுருகன்: இந்த அரசு, மது விலக்கை கொண்டு வராது.விஸ்வநாதன் : மத்திய அரசு அமல்படுத்தினால், மாநில அரசும் அமல்படுத்தும்.தி.மு.க., - ஸ்டாலின்: உடனடியாக, அனைத்து கடைகளையும் மூட முடியாவிட்டால், படிப்படியாக குறைக்கலாம்; அதை அரசு செய்யுமா?

விஸ்வநாதன்: மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில், கடை மூடப்படுகிறது. சவுந்திரராஜன்: சேலம் பகுதியில், கடையை மூடும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மூடப்படவில்லை.

விஸ்வநாதன்: அரசிடம் சொன்னால், நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா போன்ற மாநிலங்களில், மார்க்சிஸ்ட் ஆட்சியில் இருந்தபோது, மது விலக்கை அமல்படுத்தவில்லை. அங்கு ஒரு கொள்கை, இங்கு ஒருகொள்கையா?

மார்க்சிஸ்ட் கம்யூ., - பாலபாரதி: அங்கு, அரசு மதுபானங்களை விற்கவில்லை.விஸ்வநாதன்: தனியார் கொள்ளை அடிக்கக் கூடாது என்பதற்காக, பொதுஉடைமை கொள்கைப்படி, அரசே கடைகளை நடத்துகிறது.

பார்த்தசாரதி: மது விலக்கை அமல்படுத்த முடியுமா, முடியாதா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள். அதை விடுத்து, விவஸ்தை இல்லை என்று சொல்லாதீர்கள். நீங்கள் எல்லாம்
உத்தமர்களா? இவ்வாறு விவாதம் நடந்தது.

மது குடிப்போர் சங்கம் வரவேற்பு
நத்தம் அறிவிப்புக்கு, மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இச்சங்க தலைவர் செல்லபாண்டியன் அறிக்கை:தமிழகத்தில், 37 சதவீத ஆண்கள், 8 சதவீத பெண்கள் என, மொத்தம், 45 சதவீதம் பேர், மது குடிக்கின்றனர். எங்களால் அரசுக்கு நாள்தோறும், 70 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. எல்லா கட்சிகளும் மது விலக்கு கேட்கின்றன. முதலில், அவர்கள், தங்கள் கட்சியில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மது குடிக்கும் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நீக்க வேண்டும்; அதன்பிறகு, மது விலக்கு கேட்க வேண்டும்.
கடந்த, 1963 ஜன., 21ல், மதுவுக்கு ஆதரவாக கும்பகோணத்தில், ஈ.வெ.ரா., மாநாடு நடத்தினார். அதே நாளான இன்று, மது விலக்கை அமல்படுத்த முடியாது என அமைச்சர், சட்டசபையில் அறிவித்துள்ளார். இதன்மூலம், ஈ.வெ.ரா., வழியில் நத்தம், எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார். இந்த அறிவிப்பு மூலம், மது குடிப்போரின் ஒட்டு மொத்த ஆதரவை, அ.தி.மு.க.,வுக்கு அவர் பெற்று தந்துள்ளார். மது குடிப்போருக்கு தனி மருத்துவமனை; தனி வாகன எண் போன்ற, எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளையும், நத்தம் விரைவில் நிறைவேற்றுவார் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.< தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக