புதன், 20 ஜனவரி, 2016

தற்கொலை என்ற பெயரில் தலித் கொலைகள்...மதிமாறன்

ஒப்பாரிகளே போராட்ட முறை-பிணத்தை அடக்கம் செய்வதே லட்சியம்
அம்பேத்கர் இந்து. அவர் இந்து மதத் தலைவர்’ என்ற போது நமக்குக் கோபம் வர வில்லை. ஆனால், அவனே தான் டாக்டர் அம்பேத்கர் பெயரில் அமைப்பு வைத்தால் அடித்து ஆளையே கொலை செய்கிறான். இந்து அமைப்புகளுக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் பெயரில் இயங்கும் தலித் இளைஞனை கொலை செய்வதும்,
டாக்டர் அம்பேத்கரை இந்து என்று சொல்வதும் வேறு வேறு அல்ல. இந்து, பார்ப்பனிய எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு என்ற டாக்டர் அம்பேத்கரின் போர்குணத்தோடு இயங்குபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கிறது. அதனாலேயே அவர்கள் மீது வன்முறை நடக்கிறது. (ஹைதராபாத் பல்கலை கழகத்திலும் Rohith Vemula உட்பட அய்ந்தே மாணவர்கள் தான் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு பெயரில் இயங்கியதால் தண்டிக்கப் பட்டவர்கள்.
இந்து அமைப்புகள் மட்டும் டாக்டர் அம்பேத்கரின், இந்து – பார்ப்பனிய எதிர்ப்பை இருட்டடிப்பு செய்யவில்லை. இந்து அமைப்புகளின் எதிர்ப்பாளர்களாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற பலரும் திட்டமிட்டு அதையேதான் செய்கிறார்கள். அவர்களும் இந்து அமைப்புகளைப் போலவே தன்னை அம்பேத்கரின் ஆதரவாளர்களாகதான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்திய சமூகம் 24 மணி நேரமும் தலித் விரோதத்தோடுதான் இயங்குகிறது. ஆனால், அதை அலட்சியம் செய்கிற அரசியல் எல்லோரிடமும் இருக்கிறது. அதைப் பேச வேண்டுமென்றால், இங்குப் பலருக்கும் ஒரு சாவு வேண்டும். அதுவும் ஊடங்களால் பிரபலப்படுத்தப்பட்ட மரணமாக இருக்க வேண்டும்
பிறகு ஒப்பாரிகளே வழிமுறைகளாக ஒலிக்கிறது. அதுவும் ஒரு கடிதம் கிடைத்துவிட்டால் அதை வைத்துக் கொண்டு, செண்டிமென்ட் புலம்பல்களே அரசியல் கண்ணோட்டமாக மாற்றப்படுகிறது.
புலம்பல்கள் போராட்டங்கள் அல்ல, மரண ஊர்வலங்களே வழி முறைகளுமல்ல. பிணத்தை அடக்கம் செய்யும் வரை ஒப்பாரி வைப்பதே லட்சியம் அல்ல.
இந்து, பார்ப்பனிய, ஆதிக்க ஜாதிகளின் தலித் விரோத வன்முறைகளுக்கு எதிராக மட்டுமல்ல, கண்ணோட்டங்களுக்கு எதிராகவே உரத்த குரல்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்குப் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் போர் குணத்தை ஆழ கற்று, துணிச்சலோடு உயர்த்திப் பிடிக்க வேண்டும். அது ஒன்று தான் தற்கொலை என்ற பெயரிலும் நடக்கும், இது போன்ற தலித் கொலைகளைத் தடுக்கும்.
Rohith Vemula

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக