ஞாயிறு, 17 ஜனவரி, 2016

இந்துத்துவா...ராதா ராஜனின் ஜல்லிக்கட்டு தடை பின்னணி...

மனிதர்கள் கொல்லப்படுவதை இத்தனை வன்மமாக ஆதரிக்கும் ராதா ராஜன், காளைகள் ஜல்லிக்கட்டில் துன்புறுத்தப்படுவதாக விலங்கு நல ஆர்வலராக இந்துத்துவத்தைக் காப்பாற்ற கிளம்பியிருப்பது கசப்பான முரண் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பார்களே..அதுதான் ராதா ராஜனின் விலங்கு நல ஆர்வலத்தின் பின்னணி வெளிவந்த கணம் நினைவுக்கு வந்தது. இவரது பேச்சில் எத்தனை வன்மம், குரூரம்! தீவிரவாதத்தை முன்னெடுக்கும் சாமியார்களின் பேச்சைவிட மிக வன்மமாக இருக்கிறது இவருடைய பேச்சு. பகுத்தறிவாளர்கள் கோவிந்த் பன்சாரே கொலைக்குற்றத்தில் கைதான சனாதன் சன்ஸ்தா அமைப்பின் சமீர் கெய்வாட்டுக்கு ஆதரவாக இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ எத்தனை காழ்ப்பை வெளிப்படுத்துகிறார் ராதா ராஜன் என்பதை நீங்களும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

வீடியோ இணைப்பு கீழே..
ராதா ராஜன் என்ன பேசியிருக்கிறார் என்பதன் சுருக்கம் இங்கே…
“கோவிந்த் பன்சாரே கொலையில் தொடர்பு உள்ளதாகக் கூறி சமீர் கெய்வாட்கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்துக்களுக்கு எதிராக சாட்சியம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுத்திருப்பது இது இரண்டாவது முறை.  முன்பு அசிமானந்தா, பிரக்யா சிங் மீது சாட்சியமே இல்லாமல்,  குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படாமல் வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது. அதுபோலத்தான் இந்த வழக்கியிலும் சமீர் கெய்வாட் மீது எந்தவித சாட்சியமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சரி, யார் இந்த இவர்கள்? நரேந்திர தபோல்கர், கல்புர்கி,  கோவிந்த் பன்சாரே பகுத்தறிவாளர்கள் என்ற போர்வையில் இந்து மதத்துக்கு எதிரான கருத்துக்களை சொல்லிவருகிறார்கள். சமீபத்தில் கூட ஐஐடியில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் முழுக்க,   இந்துக்கள் மத நம்பிக்கையை மட்டும் கேலிக்கு உள்ளாக்கினார்கள். இவர்கள் கருத்துப்படி இந்து மதம் மூடநம்பிக்கையை பரப்புகிறது; இந்துமத கருத்துக்கள் தவறானவை என்பதே ஆகும். இப்படி தொடர்ந்து பேசிவருவதால்தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
அரசுகள் இந்து மதத்தைக் காப்பாற்ற முன்வராதபோது இந்துக்களாக முன்வந்து, மற்றவர்களை பயத்தைக் கொடுக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.
இது இந்து பூமி. இது இந்து தேசம். அரசு மதசார்பற்றதாக இருக்கலாம். ஆனால், இங்கே 80 சதவீத மக்கள் இந்துக்கள். இந்து மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வருவார்கள். இந்து பூமியில் இந்து தீவிரவாதிகள் என்று யாரும் இருக்க முடியாது. இந்துக்கள் தாங்களாக முன்வந்து தங்களுடைய பாரம்பரியத்தைக் காப்பாற்ற முன்வந்திருக்கிறார்கள்”
என்று பேசியிருக்கிறார் ராதா ராஜன்.
மனிதர்கள் கொல்லப்படுவதை இத்தனை வன்மமாக ஆதரிக்கும் ராதா ராஜன், காளைகள் ஜல்லிக்கட்டில் துன்புறுத்தப்படுவதாக விலங்கு நல ஆர்வலராக இந்துத்துவத்தைக் காப்பாற்ற கிளம்பியிருப்பது கசப்பான முரண்!
ராதா ராஜன் தூக்கி நிறுத்தும் சனாதன் சன்ஸ்தா எப்படிப்பட்ட அமைப்பு என்பது பற்றி இங்கே விரிவாகப் படிக்கலாம்…
‘இந்துராஷ்டிரம் அமைக்க யுத்தத்தில் போராடுகிறவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள். அவர்களை இந்த உலகம் என்றென்று நினைவுகொள்ளும்’ சனாதன் சன்ஸ்தா என்கிற அமைப்பு தன்னுடைய இணைய பக்கத்தில் சொல்கிறது இப்படி. காவி பயங்கரவாதத்தில் இந்துத்துவ அமைப்புகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது சனாதன் சன்ஸ்தா. இதன் தனிச்சிறப்பே தடயமே இல்லாமல் ‘எதிரி’களை அழிப்பதுதான்.
கடந்த 2013ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் நரேந்திரே தபோல்கர் மகாராஷ்டிராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த பிப்ரவரியில் மூடநம்பிக்கை எதிர்ப்பாளரும் இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்டவருமான கோவிந்த பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டார். சென்ற மாதம் கர்நாடகத்தைச் சேர்ந்த பேராசிரியரும் பகுத்தறிவாளருமான கல்பர்கி சுட்டுக் கொல்லப்பட்டார். மூவரின் கொலையும் திட்டமிடப்பட்டு, தடயங்களே இல்லாமல் கச்சிதமாக ஒரே முறையில் செய்யப்பட்டிருந்தன. கோவிந்த் பன்சாரே வழக்கில் சமீர் கெய்வாட் என்ற நபரை கைது செய்தது சிபிஐ. இவரிடம் கைப்பற்றப்பட்ட டைரிகளில், இந்த மூன்று கொலைகளுக்குமான தொடர்பு நூல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலம் ராம்நதி என்கிற கிராமத்தில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் சனாதன் சன்ஸ்தா என்கிற அமைப்பு இந்த கொலை வழக்குகளை இணைக்கும் நூலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெயந்த் அத்வாலே, குந்தா அத்வாலே என்ற மருத்துவம் படித்த தம்பதி 1995-ஆம் ஆண்டில் தொடங்கியதே சனாதன் சன்ஸ்தா. இந்த அமைப்பு கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மையமிட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ‘இந்து ராஷ்டிரம்’ என்பதே லட்சியம் என தன்னுடைய இணைய பக்கத்தில் அறிவிக்கிறது சனாதன் சன்ஸ்தா. சமூக விரோதிகளை அழிக்க மூன்றாம் உலகப் போரை 2016லிருந்து 2018 வரை நடத்தும் என்றும் 2019-2022 வரை கடவுளின் ராஜ்ஜியத்தை அமைப்பது குறித்து ஒத்திகைகள் நடத்தும் என்றும் 2023-ஆம் ஆண்டு இந்து ராஜ்யம் அமையும் என்று உறுதியாக அறிவிக்கிறது.
சிறு தெய்வங்களை, உருவமற்ற கடவுளர்களை வணங்கிய மக்களை ‘இந்து’க்களாக மாற்றிய வழியைப் பின்பற்றி இந்த ஸ்லோகம் சொன்னால் மனநிம்மதி கிடைக்கும், இந்த ஸ்லோகம் சொன்னால் பொன்னும் பொருளும் கிடைக்கும். இந்த யாகம் செய்தால் பிள்ளைகள் படிப்பில் கொடிகட்டிப் பறப்பார்கள்’ என்கிற ஆரம்பக்கட்ட வலையை வீசி, படிப்படியாக இந்து, பாரதம், இந்துராஷ்டிரம் போன்றவற்றை தேசப்பற்றுடன் தொடர்புபடுத்தி பக்தர்களை மூளைச் சலவை செய்யும் பணிகளைச் செய்துவருகிறது இந்த அமைப்பு. இந்த ஆசிரமத்துக்குள் முன் அனுமதி இல்லாமல் யாரும் செல்ல முடியாது.
சனாதன் சன்ஸ்தா வெளியீடுகளைப் படிப்பவர்கள் யார் தங்களுடைய எதிரிகள் என்று அறிவார்கள் என்று தன்னுடைய எதிரிகள் என கைக்காட்டுவது கடவுள் மறுப்பு பேசுகிறவர்கள், சிறுபான்மையினர். வெள்ளை காலர் கொலைகள் என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் கைத் தேர்ந்த கொலையாளிகளைப்போல் செயல்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவா, மகாராஷ்டிராவில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புள்ளதாகக்கூறி 2011-ஆம் ஆண்டு இந்த அமைப்பைத் தடை செய்ய பரிந்துரைத்தது காங்கிரஸ் தலைமையிலான மகாராஷ்டிர அரசு. ஆனால், அப்போது உள்துறைச் செயலாளராக இருந்த ஆர்.கே.சிங் இதை நிராகரித்தார். அரசு பணியில் இருந்த ஆர்.கே.சிங், தற்போது பாஜக எம்பியாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
“முஸ்லிம் உதிரிக் கோஷ்டிகளை மட்டும் தீவிரமாய்க் கண்காணிக்கிறது உளவுத்துறை. ஆனால், இந்து உதிரிக் கோஷ்டிகள் உளவுத்துறைக் கண்காணிப்பின் கீழ் இன்னும் வரவில்லை; அதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லை. பயங்கரவாதத்தில் மத வேறுபாடு காட்டுகிற உளவுத்துறை இருந்தால் இந்த தேசம் உருப்படுமா? தபோல்கர், பன்சாரே, கல்புர்கி என்று வரிசையாகப் பகுத்தறிவாளர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். மாதங்கள் பல ஓடியும் இன்னும் குற்றவாளிகள் அனைவரும் பிடிபடவில்லை என்பதற்கும் உளவுத்துறையின் இந்தப் பாரபட்சமான போக்கிற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு” என்று இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார் பேராசிரியர் அருணன்.
ஆரம்பக்கட்டத்திலேயே இதுபோன்ற அமைப்புகளை கண்காணித்திருந்தால் மூன்று பகுத்தறிவாளர்களின் படுகொலை தடுக்கப்பட்டிருக்கும் என்பதோடு, காவி பயங்கரவாதமும் வளர்ந்திருக்காது. இந்திய உளவு அமைப்பு, இந்துத்துவத்தின் முன் தோற்றுவருகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன இந்தச் சம்பவங்கள்.
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் பகுத்தறிவாளர் கொலை வழக்கில் சனாதன் சன்ஸ்தா என்ற இந்து அமைப்பின் பங்கை கண்டறிந்துள்ளது காவல்துறை. பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே கொலைவழக்கில் கைதான சமீர் கெய்வாட்டுக்கு நரேந்திர தபோல்கர், கல்புர்கி ஆகியோரின் தொடர்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சார்ந்த சனாதன் சன்ஸ்தா அமைப்பு தடை செய்யப்படுமா என்கிற கேள்விக்கு இந்திய உள்துறை அமைச்சகம் முடியாது என தெரிவித்துள்ளது.  //thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக