புதன், 27 ஜனவரி, 2016

வாசன் திமுகவுக்கு அல்லது அதிமுக கூட்டணிக்கு செல்கிறார்......பதவி வேணுமே?

அணி சேர அழைப்பு விடுத்து, எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கு, த.மா.கா., தலைவர் வாசன், 'டாட்டா' காட்டி உள்ளார். பிரதான கட்சிகளான, தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வுடன் சேரப் போவதாக, சூசகமாக தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றாக, மக்கள் நலக் கூட்டணியை, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியில், தே.மு.தி.க., - த.மா.கா.,வை இடம்பெற வைக்க, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விரும்பினர். இதற்காக, விஜயகாந்தையும், வாசனையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா., அலுவலகத்திற்கு, வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சென்று, 'அ.தி.மு.க., - தி.மு.க.,வை வீழ்த்தியாக வேண்டும்; அதற்காக, நாங்கள் ஏற்படுத்திய மக்கள் நலக் கூட்டணியில், நீங்களும் சேர வேண்டும்' என, அழைப்பு விடுத்தனர்.
நம்பிக்கை: அப்போது அவர்களிடம், 'அதே எண்ணத்தில் தான் த.மா.கா.,வும் உள்ளது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கும் முன், கூட்டணியை இறுதி செய்ய முடியாது. உங்கள் எண்ணத்தைமனதில் வைத்து, கட்சியினரிடம் ஆலோசிக்கிறேன்' எனக் கூறி அனுப்பினார். அழைப்பை மறுக்காமல், வாசன் பேசியதால், மக்கள் நலக் கூட்டணியினர் நம்பிக்கையுடன் திரும்பினர். மேலும், இந்தச் சந்திப்பின் போது, தி.மு.க., - அ.தி.மு.க., செயல்பாடுகள் மீது, தனக்கு இருந்த அதிருப்தியையும், வாசன் வெளிப்படுத்தி உள்ளார். அதனால், 'எப்படியும் வாசன் வருவார்' என, அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். >எதிர்காலத்துக்கு...:
இந்நிலையில், கூட்டணி குறித்து, கட்சியினரிடம் கருத்து கேட்க, வாசன் முடிவு செய்தார். சென்னை ஓட்டலில் நடந்த கூட்டத்தில், 'தி.மு.க., அல்லது அ.தி.மு.க., கூட்டணியில் தான் இடம்பெற வேண்டும்; அது தான், கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது' என, கட்சியினர் வலியுறுத்தினர்.இதனால், மக்கள் நலக் கூட்டணியில் சேரப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ள வாசன், அதை நேற்று, கட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் வெளிப்படுத்தினார். தமிழகத்தின் பிரதான கட்சிகளான, தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வுடன்,
கூட்டணி சேரப் போவதாக, சூசகமாக தெரிவித்தார். >உங்கள் எண்ணப்படி நான்... :  
த.மா.கா., அலுவலகத்தில் நேற்று தேசியக் கொடி ஏற்றிய பின், கட்சியினர் மத்தியில், வாசன் பேசியதாவது:சட்டசபை தேர்தலில், யாருடன் கூட்டணி என்ற கேள்வி, நம் முன் உள்ளது. எப்போதும், உங்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் நான், இப்போதும் அப்படியே செய்யப் போகிறேன். பலரும், தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைக்கின்றனர்; அதற்கு, நன்றி சொல்வோம். இருந்தாலும், உங்கள் விருப்பப்படி, தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றுடன் தான் கூட்டணி ஏற்படுத்தப்படும். நாம் இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க.,விடம் 'சீட்' கேட்க முடிவு: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு அளிக்க, அகில இந்திய தேசிய லீக் முடிவு செய்துள்ளது.கட்சி அலுவலகத்தில், தலைவர் இனாயத்துல்லாஹ் தலைமையில், செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு அளிப்பது, அகில இந்திய தேசிய லீக் போட்டியிட, அ.தி.மு.க.,விடம், 'சீட்' கேட்டுப் பெறுவது என, தீர்மானிக்கப்பட்டது. மேலும், சமச்சீர் கல்வியில், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட சிறுபான்மை தாய்மொழி பாடங்களை கட்டாய பாடமாக்கி, அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

- நமது சிறப்பு நிருபர்   தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக