திங்கள், 18 ஜனவரி, 2016

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவன் தற்கொலை... நெஞ்சை பிழியும் தற்கொலை கடிதம்

காலை வணக்கம்! இந்தக் கடிதத்தை நீங்கள்
படிக்கும் தருணத்தில் நான்
உங்களுடன் இருக்க மாட்டேன். அதற்காக என் மீது ஆத்திரம் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள், என்னை நேசித்தவர்கள், என்னை நன்றாக நடத்தியவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. எப்போதுமே என்னால் மட்டும்தான் எனக்கு பிரச்சனை. என்னுடைய ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் நான் ஒரு ராட்சசனாக மாறி விட்டதாகவும் உணர்கிறேன்.  நான் ஒரு எழுத்தாளராக இருக்கவே எப்போதும் விரும்பினேன். கார்ல் சாகனைப் போல் ஒரு அறிவியல் எழுத்தாளராக... இறுதியில், இதோ இந்த ஒரு கடிதத்தை மட்டுமே என்னால் எழுத முடிந்துள்ளது.
எனக்கு அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை அத்தனையும் பிடிக்கும். மக்களையும்.... அவர்கள் இயற்கையிடமிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டார்கள் என்பது புரியாத போதும். நமது உணர்வுகள் இரண்டாம் பட்சமானவை. நமது அன்பு கட்டமைக்கப்பட்டது. நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நமது சுயத்தன்மை செயற்கையான கலவையின் மூலமாகவே மதிக்கப்படுகிறது.


ஒரு மனிதனின் மதிப்பு வெறும் உடனடியான ஒரு அடையாளத்திற்குள்
சுருக்கப்பட்டுவிட்டது. ஒரு ஓட்டாக, ஒரு நம்பராக... கல்வி பயிலும் இடம், தெருக்கள், அரசியல் எங்கும் யாரும் மனிதனை அவனது மனதுக்காக மதிப்பதில்லை. வாழ்விலும் சாவிலும் கூட.... ஒருபோதும் நட்சத்திர துகள்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஒளி படைத்த மனிதனாக அவனை நடத்துவதில்லை. காயப்படாமல் அன்பு செலுத்துவதென்பது கடினமாக இருக்கிறது.

இதுபோன்ற ஒரு கடிதத்தை இப்போதுதான் நான் முதன்முறையாக எழுதுகிறேன். இதுவே கடைசியாகவும் அமைந்து விட்டது. எனது கருத்துகள் அர்த்தமற்றதாக இருந்தால் அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

என்னுடைய பிறப்பு மோசமான ஒரு விபத்து, என்னுடைய குழந்தைப்பருவ தனிமையிலிருந்தே நான் இன்னும் மீளவில்லை. நான் யாராலும் பாராட்டப்படாத ஒரு குழந்தை, ஒரு வேளை, இந்த உலகத்தை நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். அன்பை, வலியை, வாழ்க்கையை, மரணத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். ஒரு அவசரமும் இல்லை. ஆனால் நான் எப்போதும் அவசரகதியிலேயே இருந்தேன்.

இந்தநொடி நான் காயமடைந்தவனில்லை. நான் சோகமாக இல்லை. வெறுமையாக இருக்கிறேன். என்னைப் பற்றிய அக்கறை சிறுதும் அற்றவனாக இருக்கும் இந்தநிலை மிகவும் பரிதாபகரமானது. அதனால்தான் நான் இதைச் செய்கிறேன்.

மக்கள் என்னை கோழை என்று அழைக்கலாம். சுயநலக்காரன் மற்றும் முட்டாள் என்று கூட. ஆனால், நான் போன பிறகு நீங்கள் என்னைப் பற்றி சொல்வது குறித்து எனக்கென்ன அக்கறை?. இறப்புக்கு பிறகான கதைகள், பேய்கள் அல்லது ஆவிகள் குறித்தெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அவற்றின் மூலம் நட்சத்திரங்களுக்கு பயணித்து வேறு உலகங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் என நம்புகிறேன்.

இந்தக் கடிதத்தை படிக்கும் உங்களில் யாராவது, எனக்கு ஏதாவது செய்ய முடியுமானால், ஒரு சிறிய வேண்டுகோள்.

எனக்கு பல்கலைக்கழகத்திலிருந்து ஏழு மாதங்களாக வர வேண்டிய கல்வி உதவித் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிலுவையில் உள்ளது. அந்தத்தொகை எனது குடும்பத்தாருக்கு கிடைக்க வழிசெய்யுங்கள். என் நண்பன் ராம்ஜிக்கு நான் 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். அவன் அதை திருப்பிக் கேட்கக் கூடியவன் இல்லைதான். இருந்தாலும், தயவு செய்து அவனுக்கு அந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள்.

என்னுடைய இறுதிஊர்வலம் அமைதியாகவும் ஆர்ப்பாட்டமின்றியும் இருக்கட்டும். நான் தென்றலைப் போல வந்து தென்றலைப் போல போய்விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். உயிரோடு இருப்பதை விட சாவதே எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

“ நிழல்களிலிருந்து நட்சத்திரங்களை நோக்கி”

உமா அண்ணா, உன்னுடைய அறையில் தற்கொலை செய்து கொண்டதற்காக என்னை மன்னித்துக் கொள்.

அம்பேத்கர் மாணவர் பேரவை குடும்பத்தினருக்கு,

உங்களை எல்லாம் ஏமாற்றியதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் என் மீது தீவிரமான அன்பு செலுத்தினீர்கள். உங்கள் எதிர்காலத்திற்கு  வாழ்த்துக்கள்  maalaimalar.com

கடைசி முறையாக, ஜெய்பீம், அம்பேத்கர் வாழ்க!

(இதுபோன்ற தற்கொலைக்கடிதங்களில்) வழக்கமாக எழுதும் ஒன்றை நான் மறந்து விட்டேன்...!

என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணமல்ல. தங்களது செயலாலோ வார்த்தைகளாலோ என்னை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை. இது என்னுடைய முடிவு, இதற்கு நான் மட்டுமே பொறுப்பு. நான் போன பிறகு என்னுடைய நண்பர்களை தொந்தரவு செய்யாதீர்கள். எதிரிகளையும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக