புதன், 27 ஜனவரி, 2016

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் :விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம்:

நெல்லை மாவட்டம் அம்பையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெல்லை வந்தார். அவர் நெல்லையில் உள்ள ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட ஓரிரு நாட்களில் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. பொது தொகுதியில் போட்டியிட ரூ.5 ஆயிரமும், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் போட்டியிட ரூ.2,500 விருப்ப மனு கட்டணமாக பெறப்படும். ஒரு வாரம் வரையிலும் விருப்ப மனுக்கள் பெறப்படும்.

நெல்லை மாவட்டத்தில் அரசு பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய சான்றிதழை போலியாக கொடுத்து பணியில் சேர்ந்த 108 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆனால் இதுவரையிலும் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தாமல், யாரை காப்பாற்ற முயற்சிக்கிறது? மின்சாரத் துறையில் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை நிர்ணயித்து வசூல் செய்யப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வசூல் செய்யும் பணியில் அரசு ஈடுபடுத்துகிறது.
அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்க 36 நாட்கள் பேச வேண்டும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார். இது வேடிக்கையாக உள்ளது. அவரது அரசின் லஞ்ச, ஊழல் பற்றி 365 நாட்கள் பேசலாம். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் கூறுகின்றனர். எனக்கு கருத்து கணிப்பில் நம்பிக்கை இல்லை. விரைவில் கூட்டணி பற்றி முடிவு செய்து அறிவிப்போம்.
234 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட ஆசைதான். ஆனாலும் தோழமை கட்சிகளுடன் இணைந்து, காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் போட்டியிடுவோம். தற்போது 12 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து உள்ளேன். தமிழக மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக