வியாழன், 28 ஜனவரி, 2016

ஜாதி சங்கங்கள் தேர்தல் வசூலுக்கு தயாராகின்றன....

தேர்தலில் மல்லுக்கட்ட தயாராகி வரும் பிரதான கட்சிகள் மத்தியில், 'கல்லா  
கட்டும்' திட்டத்துடன், தமிழக ஜாதி அமைப்புகள் ஜோராக களம் இறங்கி உள்ளன. மாநாடுகள் நடத்தி, தீவிர வசூல் வேட்டை நடத்தவும், ஓட்டுக்காக வளைக்க விரும்பும் கட்சிகளுடன் பேரம் பேசவும் காத்திருக்கின்றன. தேர்தல் களம் காணும் முன், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கட்சியின் பலத்தை வெளிப்படுத்தவும், பிரதான கட்சிகள், மாநாடு நடத்துவது வழக்கம். சிறிய கட்சிகள், 'சீட்' பேரத்துக்காக, மாநாடுகளை நடத்தி, கூட்டத்தைக் கூட்டுவது உண்டு.இப்போது, ஜாதி கட்சிகளும் அதை பின்பற்றத் துவங்கி விட்டன. ஒவ்வொரு பகுதியிலும், சில ஜாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அப்பகுதிகளில், தங்கள் ஜாதிக்கு பிரதிநிதித்துவம் பெறவும், யாருக்கு ஆதரவு என்பதை வெளிப்படுத்தவும், மாநாடுகளை நடத்துகின்றன.சாதி அமைப்புக்கள் நடத்த பணம் வேண்டும் 'அதை இந்த தேர்தல் நேரத்தில் தான்  கட்சிகளை மிரட்டி சம்பாதிக்கலாம்

அடுத்த மாநாடு தயார்:
சமீபத்தில், மொழிவாரி சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த, ஒரு ஜாதியினர், மாநாடு நடத்தினர். அடுத்து, இதே பிரிவைச் சேர்ந்த, இரு சமூகத்தினர் மாநாடு நடத்த தயாராகி வருகின்றனர். தங்களின் அரசியல் பாரம்பரியம் மற்றும் தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து, மாநாட்டில் அறிவிக்க திட்டமிட்டு உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து, பெரும்பான்மை பலம் படைத்த ஜாதியினர், வரிசையாக மாநாடுகள் நடத்த
உள்ளனர். வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் செல்வாக்கு பெற்ற, இந்த ஜாதியினருக்கு போட்டியாக, பிற சமுதாயத்தினரும், தேர்தல் நேர மாநாடுகள் நடத்தி, அரசியல் ஆதாயம் தேட முடிவு செய்துள்ளனர். கட்சிகளின் ஆட்டம் துவங்கும் முன், அதாவது, மார்ச் இறுதிக்குள், இது போன்ற மாநாடுகளை நடத்தி முடிக்க, பல ஜாதி சங்கங்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
இதன் பின்னணி குறித்து, அரசியல் தலைவர் ஒருவர் கூறியதாவது:தமிழகத்தைப் பொறுத்தவரையில், நிறைய ஜாதி சங்கங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை, தேர்தல் கால ஆதாயத்துக்காகவே இயங்குகின்றன; ஒரு சில ஜாதி சங்கங்கள் மட்டும், மக்களுக்காக உள்ளன.ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும், ஜாதி பெயர்களால் உள்ள அமைப்புகள், பெரிய கட்சிகளோடு பேரம் பேசி, முடிந்த வரை, வசூல் வேட்டை நடத்துகின்றன. இதற்காக, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஆட்களை கூட்டி வந்து, மாநாடு என்ற பெயரில், பலம்காட்டுகின்றன. சமீப காலத்தில் அதிகம் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காவிட்டால், தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்ற பயத்தில், கட்சிகள், 'கவனித்து' விடுகின்றன. இது, சமீப காலமாக அதிகரித்து விட்டது; தவிர்க்கவும் முடியவில்லை. பெரிய கட்சிகள் தேர்தல் செலவுகளுக்காக, பட்ஜெட் போடும் போது, ஜாதி அமைப்புகளுக்கும் சேர்த்தே போடுகின்றன. இது போன்ற ஜாதி அமைப்புகளின் ஆதரவு அவசியம் என்பதால், ஓட்டுக்காக வளைக்க விரும்புகின்றன. அதற்காகவே காத்திருக்கும் ஜாதி அமைப்புகள், எந்த கட்சியில் பேரம் படிகிறதோ, அங்கே போகின்றன.இவ்வாறு அவர் கூறினார். எல்லாருக்கும் பிரதிநிதித்துவம்!
பிற்படுத்தப்பட்டோர் இன மக்கள் கூட்டமைப்பு பிரதிநிதி ஒருவர் கூறியதாவது:சில ஜாதியினர், மாநிலத்தில் கணிசமாக உள்ளனர். ஆனால், இவர்கள் மாநிலம் முழுவதும் பரவலாக இருப்பதால், ஒரு தொகுதியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இல்லை. இதனால், இந்த ஜாதியினரை, கட்சிகள் கண்டு கொள்வதே இல்லை.இது போன்ற மக்களின் மொத்த ஓட்டை கணக்கிட்டு, அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை அளிக்க வேண்டும் என, கட்சிகளை வலியுறுத்தவே, மாநாடுகளை நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக