சனி, 12 டிசம்பர், 2015

சிம்பு, அநிருத் ....தமிழ் சினிமாவின் மகா கேவலமான காவாலிகள்...தூஷனத்தையே பாட்டாக பாடிய கொடுமை

சிம்பு, அநிருத் இருவரின் காவாலித்தனம் என்றுதான் மேலே தலைப்பு கொடுத்தேன்.  பிறகு நீண்ட நேரம் யோசித்தேன்.   ஏனென்றால், யாரையும் ஒருபோதும் திட்டக் கூடாது என்று உண்மையிலேயே சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் சமூக விரோத செயல் என்று மாற்றினேன்.  ஆனாலும் அவர்கள் செய்திருப்பது பச்சையான காவாலித்தனம்தான்.இந்தப் பாடலுக்குப் பெயர் Beep Song.  சினிமா வசனத்தில் கெட்ட வார்த்தைகள் வரும் போது பீப், பீப் என்று வரும் அல்லவா, அதுதான்.  சிம்பு அந்தக் கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திப் பாடுகிறார்.  என்னப்  …டைக்கு லவ் பண்றோம், என்னப்  ….டைக்கு லவ் பண்றோம் என்று திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்.  பாடலின் இடையேயும் …டை வருகிறது.  ”பு” என்ற எழுத்துக்கும் ”ன்” என்ற எழுத்துக்கும் பீப் ஒலி வந்தாலும் பீப் ஒலியையும் மீறி பூவும் இன்னும் டையும் காதில் விழுகின்றன.
என்னுடைய ஆட்சேபம் இந்த வார்த்தையைப் பிரயோகித்துப் பாடியதற்காக அல்ல.  இதை நான் அடிக்கோடிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.  எல்லா வார்த்தைகளையும் போல அதுவும் ஒரு வார்த்தை.  அதையும் அவர்கள் பீப் சத்தம் போட்டு மறைத்து விட்டார்கள்.  கேட்டால் நாங்கள் சண்டையை அல்லவா சொன்னோம் என்பார்கள்.  ஆனால் அந்த இரண்டு இளைஞர்களின் காவாலித்தனம் என்னவென்றால், இவர்கள் இந்தப் பாடலை வெளியிட்டிருக்கும் தருணம்.  மக்கள் எல்லாம் தண்ணீரில் தங்கள் உடைமைகளையும் தங்களுக்குப் பிரியமான உறவுகளையும் பறி கொடுத்து விட்டு அழக் கூட முடியாமல் அதிர்ச்சி அடைந்து கிடக்கிறார்கள்.   charuonline.com
எத்தனை எத்தனை சோகக் கதைகள்.  ஒரு ராணுவ கர்னல்… என் நண்பரின் உறவினர்.  70 வயது இருக்கும்.  அவர் மனைவி.  இருவரும் டிஃபென்ஸ் ஆபீஸர்ஸ் காலனியில் வசிக்கிறார்கள்.  தரைத்தளம்.  தண்ணீர் முழங்கால் அளவு ஏறி விட்டது.  வீட்டை உள்ளே பூட்டியிருக்கிறார்கள்.  மாடிக்குப் போகலாம் என்றால் மாடி வீட்டுக்கு வெளியே இருக்கிறது.  போகலாம் என்றால் முடியாது.  வீட்டை உள்ளே பூட்டியிருக்கிறார்கள்.  திறந்து கொண்டு போகலாமே?  முடியாது.  சாவியைத் தேட முடியவில்லை.  வீடு முழுவதும் இருள்.  மின்சாரம் இல்லை.  எங்கே வைத்தோம் என்று ஞாபகம் இல்லை.  தண்ணீர் முழங்கால் வரை வந்து இடுப்பு வரை வந்து கழுத்து வரை வந்து… இருவரின் பிணம் தான் கிடைத்தது.  ராணுவத்தில் கர்னல்.  இப்படி ஆயிரம் கதைகள்.  சிம்பு என்னப் …டைக்கு லவ் பண்றோம் என்று பாடுகிறார்.  அநிருத் என்ற பையன் இசை அமைக்கிறார்.  ஏன் தம்பிங்களா நீங்கள் சென்னையில்தான் இருக்கிறீர்களா அல்லது அமெரிக்கத் தமிழர்களா?  அமெரிக்காவில் போய் கண்ட் கிண்ட் என்று பாட வேண்டியதுதானே?
இது போன்ற வார்த்தைகளை நானும் என் நாவல்களில் கதைகளில் பிரயோகித்திருக்கிறேன்.  ஆனால் அதை 18 வயதுக்கு உட்பட்டவர்கள் படிக்க மாட்டார்கள்.  ஆனால் இது சினிமா ஹீரோ பாடியது.  இந்தப் பாடலை நாளை விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாலு வயதுக் குழந்தை பாடப் போவதை எண்ணியே நான் பயப்படுகிறேன்.
சென்னையே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.  இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை.  ஆயிரக் கணக்கான மக்கள் முகாம்களில் இருக்கிறார்கள்.  கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்ட முன்னணி நடிகர்கள் ஏதோ சில லட்சங்களை பைல்ஸ் வந்தவன் முக்குவது போல் முழு மனசில்லாமல் முக்கி முக்கிக் கொடுத்து விட்டுப் பதுங்கி விட்டார்கள்.  களத்தில் இறங்கி வேலை செய்ததெல்லாம் பாலாபிஷேபகத்துக்கு ஆட்படாத சித்தார்த், விஷால், கார்த்தி, ஆர்ஜே பாலாஜி, பார்த்திபன் போன்ற நடிகர்கள்தான்.  அரசியலிலும் சினிமாவிலும் தமிழர்கள் யாரையெல்லாம் கொண்டாடினார்களோ அவர்கள் வீட்டுக்குள் பதுங்கி விட்டார்கள்.  முகம் தெரியாத அத்தனை பேரும் இறங்கி வேலை செய்தார்கள்.
என் வீட்டுக்குள் தண்ணீர் வந்தால் என்னைக் காப்பாற்ற ஆண்டவனாலும் முடியாத நிலை.  பிற மனிதர்களைக் கண்டாலே பேயாட்டம் ஆடும் ஐந்தடி நீளமும் மூன்று அடி உயரமும் கொண்ட ஸோரோ (எடை 60 கிலோ) என்ற க்ரேட் டேன் என்ற நாயுடனும், நடக்க முடியாத கால்களைக் கொண்ட பப்பு என்ற 40 கிலோ லாப் நாயுடனும் முழங்கால் அளவு தண்ணீரில் வீட்டுக்குள் முடக்கப்பட்டேன்.  நாய்களை விட்டு விட்டு வெளியேற முடியாது என்று முடிவு செய்து விட்டேன்.  மொட்டை மாடிக்குப் போக படிகள் இல்லை.  பப்புவை மிகவும் சிரமப்பட்டு மாடிப்படி ஏற்றினோம் நானும் அவந்திகாவும்.  இரண்டு பேரும் சாகத் தயாராக இருந்தோம்.  பப்புவும் ஸோரோவும் எங்களுக்கு இரண்டு குழந்தைகள்.  படகே வந்தாலும் ஸோரோ படகைச் சாய்த்து விடும்.  பிற மனிதர்களைக் கண்டால் ட்ராகுலாவாகவே மாறி விடும்.  க்ரேட் டேன் ஜாதி அப்படித்தான்.   பழகியவர்களோடு மட்டுமே குழந்தை மாதிரி பழகும்.
என் வீட்டில் தண்ணீர் ஏறியிருந்தால் இந்நேரம் எனக்கு இரங்கல் கட்டுரைகள் வந்திருக்கும்.  தண்ணீர் முழங்காலோடு நின்று விட்டது.  தண்ணீரில் மின்சாரம் பாய வாய்ப்பு இருந்ததால் மின்சாரத்தை நிறுத்தி விட்டோம்.  அதைக் கூட நீ நிறுத்தாதே நான் நிறுத்துகிறேன் என்று சொல்லி ஒரு மரக்கட்டையால் நிறுத்தினாள் அவந்திகா.
இதெல்லாம் ஜுஜுபி.  ஆயிரக் கணக்கான கதைகள்.   தண்ணீரில் தன் சொந்தங்கள் பிணமாய் மிதப்பதைப் கண் கொண்டு பாத்தவர்களின் கதைகள் இருக்கின்றன.  சிம்பு பாடுகிறார், என்னப் … டைக்கு லவ் பண்றோம்?
ஆபாசம் என்றால் என்ன? என் அப்பனும் ஆத்தாளும் உறவு கொண்டுதான் என்னைப் பெற்றார்கள்.  மனிதன் மிருகம் எல்லாம் அப்படித்தான்.  ஆனால் எதை எங்கே செய்ய வேண்டும் என்று வரைமுறை இருக்கிறதுதானே?  கக்கூஸில் மலம் கழிக்கலாம்.  அங்கே போய் சாப்பிடலாமா?  படுக்கை அறையில் உள்ள சமாச்சாரம் பூஜை அறைக்கு வரலாமா?  ஆணுறையை உங்கள் குழந்தைக்கு விளையாடக் கொடுப்பீர்களா?  இதைத்தான் சிம்புவிடமும் அநிருத்திடமும் கேட்கிறேன்.  இங்கே இணையத்தில் என்ன சென்ஸாரா இருக்கிறது?  சோறு தட்டில் இருந்தால் சாப்பாடு.  தரையில் கிடந்தால் குப்பை.  அதே தான், சிம்பு பாடியிருக்கும் பு வார்த்தை சரியான இடத்தில் இருந்தால் பூஜைக்குரியது; ஏனென்றால் அது நாமெல்லோரும் இந்த உலகத்துக்கு வரக் காரணமாக இருந்த இடம்.  நமது ஜென்ம ஸ்தானம்.  ஆனால் அதையே சிம்பு  பாடலில் பயன்படுத்தியிருப்பதால் காவாலித்தனமாக மாறி விட்டது.  தட்டில் இருந்தால் சோறு.  தரையில் கிடந்தால் குப்பை.
எல்லோரையும் அவமானப்படுத்தி விட்டார்கள் சிம்புவும் அநிருத்தும்.  சமீபத்தில் நயன் தாரா பெயரில் ஒரு படம் வந்தது அல்லவா?  அது நம் சமூக மதிப்பீடுகளின் வீழ்ச்சியின் குறியீடு என்று எழுதியிருந்தார் சமஸ். நம் சமூகம் முழுமையாக சீக்குப் பிடித்து விட்டது என்பதன் குறியீடு சிம்புவின் பாடல்.  புண் இருந்தால் சீழ் வரும் அல்லவா, நம் சமூகத்தின் புண்ணாக மாறி விட்ட சினிமாவிலிருந்து வடிந்திருக்கும் சீழ் தான் சிம்பு அநிருத்தின் பாடல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக