வியாழன், 3 டிசம்பர், 2015

தொலைந்த பொருட்கள், சிதைந்த கட்டிடங்கள், புதைந்து போன வாழ்வாதாரங்கள்...வெள்ளம்!

இது போன்றதொரு இயற்கை பேரிடரை இதுவரை பார்த்திருப்போமா என்று எண்ணும் அளவுக்கு அதி உக்கிரமானதொரு மழைப்பொழிவைக் கண்டிருக்கிறது தமிழகம். சென்னை நகரமும், இதர தமிழக பிரதேசங்களும் தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கின்றன. எத்தனை உறவுகள், நண்பர்கள், முகமறியா நண்பர்கள், மற்றும் ஏனைய ஜீவராசிகள் அல்லலுறுகின்றனர் என்பதற்கு கணக்கேயில்லை. >மனித யத்தனத்தில் சாத்தியப்பட்ட அத்தனை வசதிகளையும், வலிமைகளையும், பாதுகாப்புகளையும் தவிடுபொடியாக்கிக் கொண்டிருக்கிறது இயற்கை. மழையே இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இனி அதனால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து போக, அதன் பின்னர் அந்த சேதங்கள் செப்பனிடப்பட்டு வாடிக்கைக்கு திரும்ப எத்தனை நாட்களோ.


திரும்பும் பக்கமெல்லாம் துயரச்செய்திகள். தொலைந்த பொருட்கள், சிதைந்த கட்டிடங்கள், புதைந்து போன வாழ்வாதாரங்கள் என்று பல கதைகள் காதுகளுக்கு வந்தவண்ணம் இருக்கின்றன. சான்றிதழ்கள் எல்லாம் பாழ் என்று ஒருவர் சொன்ன போது இன்னமும் பகீரென்றிருந்தது. எல்லாவற்றுக்கும் ஆதாரமான அரசு ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே. பல வங்கிகள், அரசு நிறுவனங்கள் தகவல் (data) பாதுகாப்பைப் பற்றி லவலேசமும் அக்கறை கொள்ளாமல் இருந்ததை கண்கூடாகப் பார்த்த அனுபவத்தில் ஏற்பட்ட திகில்.

இயற்கையை, அன்னையாக போற்றி வந்த நம்முடைய தொல்குடி மூதாதையர் அவைகளையே முதன்மை வணக்கத்துக்குரியவைகளாக வைத்திருந்தனர். மாரியம்மா, கடலம்மா, பூமாதேவி என்றெல்லாம் வாஞ்சையுடன் போற்றுவதன் பொருள், அவை தம் வலிமையை உள்ளடக்கிக் கொண்டு மனித இனத்தை செழித்தோங்கச் செய்கின்றன என்பதால் இருக்கலாம்.

போற்றிப் பாதுகாத்த பல பொக்கிஷங்கள் பொருளற்றுப் போக, கைப்பற்ற கிடைத்த ஒரு கரம் எவ்வளவு வலிமையை கொண்டு வருகிறது. பெருமளவில் வம்பளப்பிற்கும், குழு அரசியலுக்கும், சுய லாபத்திற்கும், கேளிக்கைக்கும் பயன்பட்டு வந்த சமூக வலைத்தளங்கள் பேரிடரை சமாளிக்கும் பெரும் சக்தி கேந்திரங்களாக மாறியதைப் பார்க்கும்போது நாளைய தலைமுறையைப் பற்றிய நம்பிக்கை வருகிறது.

எத்தனை முகமறியா மனிதர்கள் தாமாக முன்வந்து 'இந்தப் பகுதியில் மீட்புப்பணிக்காக என் நண்பர்கள் / உறவுகள் காத்திருக்கிறார்கள். தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ளவும்' என்று தன்னார்வ உழைப்பை தளங்களில் பகிர்ந்திருக்கிறார்கள்.

எத்தனை நிறுவனங்கள் அவதியுறும் பொதுமக்களின் தேவைக்காக தங்கள் இடங்களை கொடுத்து உதவியிருக்கிறார்கள். வேற்று மாநிலங்கள், நகரங்களிலிருந்து உதவிகளை கொண்டு வந்து சேர்க்க முனைப்போடு பகிர்ந்த நல்லுள்ளங்கள் எத்தனை. தன்னார்வத் தொண்டுகளுக்காக, மனிதர்களைத் தொடர்ந்து திரட்டி, முறைமைபடுத்தி, மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தும் செயல்வீரர்கள் எவ்வளவு பேர்.

நீரும், காற்றும், பூமியும் மட்டுமல்ல. நாமும், நம்முடைய நகரமும் இந்த இயற்கையின் பகுதிதான். இதே பூமியில்தான் நாம் நிலைகொண்டு, இதே காற்றை சுவாசித்துக் கொண்டு, இதே நீரைப் உயிர்த்தலின் ஆதாரமாகக் கொண்டு பல்கிப் பெருகி வாழ்ந்து வருகிறோம். ஊர்களும் நகரங்களுமாக தழைத்தோங்கியிருக்கிறோம். ஒளிமயமான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஒருபொழுதை, பேரிடரை, கடந்து வரும் வலிமையுள்ளவர் என்பதால்தான் பல யுகங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மீண்டு வருவோம்!.sridharblogs.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக