வியாழன், 3 டிசம்பர், 2015

கமலஹாசன்: எங்கள் வரிப்பணத்தை என்ன செய்தீர்கள்? மக்கள் பணம் எங்கே போனது? சென்னையில் அரச நிர்வாகமே இல்லை ...

சென்னை: வெள்ள நிவாரணத்திற்காக மக்களிடமிருந்தே பணம் கேட்கிறது அரசு, இதுவரை வரியாய் செலுத்திய மக்கள் பணம் எங்கேபோனது என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையின் சொகுசு ஏரியா ஒன்றான எல்டாம்ஸ் ரோடு பகுதியில் கமல் வசித்து வந்தாலும், நகரின் பிற பகுதிகளில் மக்கள் படும் துன்பங்களால் சற்று கோபமடைந்துள்ளார். இதுகுறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கமல் கூறியுள்ளதாவது: இந்த சேதத்தை, இயற்கை பேரிடர் என்று கூறுவது மிகவும் குறைவான வார்த்தை.
சென்னைக்கே இந்த நிலை சென்னைக்கே இந்த நிலைமை எனில், தமிழகத்தின் பிற பகுதிகளின் நிலைமையை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். ஏழைகளும், மத்திய வர்க்கத்தினரும் கடுமையான அச்சத்திலுள்ளனர்.
நிர்வாகமே இல்லை நான் பெரிய பணக்காரன் கிடையாது. ஆயினும், எனது ஜன்னலை திறந்து பார்க்கும்போது, மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து வெட்கப்படுகிறேன். சென்னையில் ஒட்டுமொத்த, நிர்வாகமும் உருகுலைந்து கிடக்கிறது. மீண்டும் சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் தேவைப்படும்.
வரி செலுத்தினோமே.. மக்கள் செலுத்திய வரிப் பணம் அனைத்துக்கும் எங்கு சென்றது? நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை. நான் ஒழுங்காக அனைத்து வரிகளையும் செலுத்தி வருகிறேன். எனக்கு அரசு நிர்வாகம் செய்தது என்ன? எனது சக மக்களுக்கு செய்தது என்ன?
கோடிகளை எங்களிடம் தாருங்கள் ஆளும் அரசாங்கங்கள், அது எந்த கட்சியுடையதாக இருந்தாலும், ஒரு கார்பொரேட் திட்டத்திற்கு ரூ.4000 கோடியை செலவிட முடிகிறது. இந்த நாட்டில் 120 கோடி மக்கள் இருக்கிறோம். அந்த 4000 கோடியை எங்கள் மத்தியில் வினியோகித்திருந்தால், எத்தனையோ இந்தியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியிருக்க முடியும்.
மக்களிடமே பணம் கேட்கிறது நான் முற்றிலுமாக கவலையில் ஆழ்ந்துள்ளேன். நான் வசதியான ஒரு வீட்டில் உட்கார்ந்திருப்பதற்காக வெட்கப்படுகிறேன். அரசுடன் ஒப்பிட்டால் எனது வருமானம் மிகவும் சொற்பம். ஆனால், அரசோ, வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம்தான் பணம் கேட்கிறது. பிறகு அரசு என்னதான் செய்யும்? இருப்பினும், நான் பணம் கொடுக்கவே செய்வேன். ஏனெனில், அரசு நிர்வாகத்தை நான் மதிக்கிறேன்
நாடகங்கள் நான் பணக்காரன் என்று நினைத்துக்கொண்டு பணம் கொடுக்கப்போவதில்லை. நான் எனது மக்களை நேசிக்கிறேன். பணக்காரன், ஏழை என நன்கொடைக்காக இப்போது பேசப்படும் அனைத்துமே நாடகம்தான். அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும்வரை சமூக ஏற்றத்தாழ்வை நீக்குவோம் என்றுதான் பேசிக்கொண்டிருக்க போகிறார்கள். இவ்வாறு கமல்ஹாசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக