ஞாயிறு, 13 டிசம்பர், 2015

திருப்பூருக்கும் நேரிடும் சென்னை கதி? நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

திருப்பூர்,:திருப்பூரில் குளம், குட்டை, ஓடை என நீர் நிலைகளை ஆக்கிரமித்து, அதிகளவு அரசு அலுவலகங்கள், கட்டடங்கள் உள்ளன. சென்னையை போல், கனமழை பெய்தால், கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.திருப்பூர் நகரின் பரப்பளவு, 169 சதுர கிலோ மீட்டர். நொய்யல் ஆறு, நல்லாறு, ஜம்மனை பள்ளம், சங்கிலிபள்ளம், கள்ளப்பாளையம், சபரி ஓடைகள், மொத்தம் 41.95 கி.மீ., நீளம் உள்ளன. மழை நீரை சேமிக்க, 60க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் இருந்தன.ஆக்கிரமிப்பு மற்றும் நகர வளர்ச்சி, போக்குவரத்துக்கான சாலை வசதி, என பல காரணங்களால் இவை, கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. பல ஓடைகள் மாயமாகிவிட்டன. ஆறு, ஓடைக கழிவு நீர் வாய்க்கால்களாக மாறியுள்ளன.   எந்த ஒரு ஒழுங்கும் இல்லாமல் மிக வேகமாக முன்னேறிய நகரங்களில் திருப்பூரும் ஒன்று... வளர்சியை ஒருங்கிணைப்பது அரசின் கடமை... அதுதான் எப்படி நட்க்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்...


நீர் நிலைகளை, தனியார் பலர் ஆக்கிரமித்துள்ள நிலையில், அதனை அகற்றி, காப்பாற்ற வேண்டிய அரசு நிர்வாகமே, அவற்றை ஆக்கிரமித்துள்ளதுதான் கொடுமை. கடந்த 2011ல், நொய்யலில் வெள்ளப்பெருக்கு பாதிப்பு தந்த எச்சரிக்கையை உதாசீனம் செய்து, அரசு அதிகாரிகள் தொடர்ந்து, நீர் நிலைகளை அழித்து வருகின்றனர்.இப்போதுள்ள கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகம் ஆகியவை, சில ஆண்டுகளுக்கு முன் வரை நீர் தேங்கிய குளம் ஆகும். தெற்கு எம்.எல்.ஏ., அலுவலகம், ஒரு காலத்தில் குட்டையாக இருந்தது. பெய்யும் மழை நீர் இங்கு தேங்கி, உபரி நீர் கலெக்டர் அலுவலக குளத்துக்கு செல்லும்.

முருகம்பாளையம், பல்லடம் பகுதிகளில் பெய்யும் மழை நீர், வீரபாண்டி ஓடை வழியாக வந்து, நொய்யல் ஆற்றில் கலக்கும். ஒரு காலத்தில் பிரமாண்டமாக இருந்த ஓடையை ஆக்கிரமித்து, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்திற்காக, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, பம்பிங் ஸ்டேஷன் ஆகியவை கட்டப்பட்டன.மாநகராட்சி துவக்கப்பள்ளி துவங்கி, மேல்நிலைப்பள்ளி வரை ஓடையை மறித்து கட்டப்பட்டுள்ளது. மின் வாரிய உதவி பொறியாளர் அலுவலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவை உள்ளன. கடந்த 2011ல் பள்ளி, ரேஷன் கடை ஆகியன வெள்ளத்தில் மூழ்கின.

ஏறத்தாழ, 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சந்திராபுரம் பகுதியில், பெரிய அளவில் குட்டை இருந்தது. அது ஆக்கிரமிக்கப்பட்டு, அம்மா உணவகம் கட்டப்பட்டது. இப்போதும் கூட, மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் தேங்குகிறது.பி.என்.ரோடு வழியாக வந்த மந்திரி வாய்க்கால் ஓடை, முழுமையாக மாயமாகி, தற்போது கழிவு நீர் சாக்கடையாக மாறி விட்டது. இதன் மீதுதான் ரேஷன் கடை, மின் வாரிய அலுவலகம் உள்ளது. ஓடை இருந்ததற்கும், மழை நீர் வடிவதற்கும், இரட்டைக்கண் பாலம் மட்டுமே சாட்சியாக உள்ளது.

திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, நான்கு ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் இருந்தது. ஜம்மனை அணையிலிருந்து, ராஜவாய்க்கால் வழியாக, இந்த குளத்துக்கும், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் நந்தவனம் வழியாக, நொய்யல் ஆற்றில் கலக்கும் வகையில், நீர் வழித்தடம் இருந்தது. தற்போது, குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, பூ மார்க்கெட்டாக மாற்றப்பட்டுள்ளது. சிறிய மழைக்கே, இப்பகுதி சாலை, வெள்ளக்காடாக மாறி விடுகிறது.
இதே போல், ஆறுகள், ஓடைகளை ஆக்கிரமித்து, ஏறத்தாழ, 6 ஆயிரம் வீடுகள் உள்ளன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக, மாநகராட்சி சார்பில், ரோடுகள், குடிநீர் தொட்டி, கழிப்பிடம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, ஏராளமான, குளம், குட்டை, ஓடைகள் அழிக்கப்பட்டுள்ளன.

நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசே, ஆக்கிரமிப்பாளர் ஆக மாறியுள்ள இந்நகருக்கு, எப்போது வேண்டுமானாலும் சென்னையைப் போல் வெள்ள பாதிப்பு வரலாம். அதற்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், திருப்பூர் பின்னலாடை தயாரிப்பு பேரிழப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக