வியாழன், 10 டிசம்பர், 2015

அடுக்குமாடிகளில் குடியிருந்தவர்களும் படுமோசமாக பாதிக்கபட்டுள்ளனர்.

மழை, வெள்ளத்தின் போது எந்த தொடர்பும் இல்லாமல், மீட்பு உதவியும் இன்றி, இருட்டுக்கு மத்தியில் அந்தரத்தில் இரண்டு நாட்கள் தவித்தோம்' என, பழைய மாமல்லபுரம் சாலையில், அதிக தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்கியவர்கள் கூறியுள்ளனர்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழை, வெள்ளம், எந்த பிரிவு மக்களையும் விட்டு வைக்கவில்லை. ஏரிகள் உடைப்பு, அதிகபட்ச உபரி நீர் திறப்பு போன்றவற்றால், பெரும்பாலான கட்டடங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், சில கட்டடங்களில் மக்கள், மூன்றாம் தளத்தில் அல்லது மொட்டை மாடிகளில் தஞ்சம் புக நேரிட்டது. சிறிய கட்டடங்களின் பாதிப்பு இப்படி என்றால், ஆடம்பர வசதிகளுடன் அதிக தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டடங்களில் வீடு வாங்கியவர்களும், கடுமையாக பாதிக்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.   சிங்கப்பூர் போல உயரமான கட்டிடங்கள் கட்டினால் மட்டும் போதாது - போதிய தண்ணீர் வசதி செய்ய வேண்டும்.... இல்லை என்றால் நாறி விடும்...


உயரமான கட்டடங்கள் :

சென்னை புறநகர் பகுதிகளில், நாவலுார், ஏகாடூர், கழிபட்டூர், படூர், கேளம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாம்பரம் - ஒரகடம் சாலை போன்ற இடங்களில், அதிக தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இப்பகுதிகளில், 30 தளங்கள் கொண்ட, ஆறு கட்டடங்கள்; 28 தளங்கள் கொண்ட, ஆறு கட்டடங்கள்; 20 தளங்கள் கொண்ட, எட்டு கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இக்கட்டடங்களில் போதிய தண்ணீர் வசதி இல்லை என்பதால், பராமரிப்புக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலையில், வீடு வாங்கியவர்கள் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், அண்மையில் பெய்த மழையின்போது, இந்த குடியிருப்புகளில் மேல்தளங்களில் வசிப்பவர்களும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏகாடூரில்... :

ஏகாடூர் அருகே, தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குமரன் என்பவர் கூறியதாவது:ஏராளமான ஆசைகளுடன், ஏகாடூரில், 26வது மாடியில் வீடு வாங்கினோம். பால்கனியில் இருந்து வேடிக்கை பார்க்கும் போது, எவரெஸ்ட் சிகரத்தின் மேல் இருப்பது போல் பெருமை பட்டோம். ஆனால், அண்மையில் கொட்டிய மழை, இந்த எண்ணங்களை அடியோடு ஒழித்துவிட்டது. மின்சாரம் துண்டிப்பு, 'லிப்ட்' நிறுத்தம், 'இன்வெர்ட்டர் சார்ஜ்' தீர்ந்தது, தொலைபேசி தொடர்பு இல்லை போன்ற காரணங்களால், இருளில் தத்தளித்தோம். எங்கள் தளத்தில் மற்ற வீடுகளை வாங்கியவர்கள் இன்னும் குடியேறாததால், தனிமையில் சிக்கித் தவித்தோம். 'நாங்கள் இங்கு இருக்கிறோம்; எங்களை மீட்டுச் செல்லுங்கள்' என்று தகவல் தெரிவிக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம். இரண்டாவது அல்லது மூன்றாவது தளங்களில் வீடு வாங்கி இருந்தால் கூட இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்க மாட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

படூரில்...:

படூரில் வசிக்கும் ராஜ் குரூப் என்பவர் கூறியதாவது:மிக உயரமான கட்டடம் எது என, இணையதளத்தில் தேடி, இந்த திட்டத்தில், 25வது மாடியில் வீடு வாங்கினோம். வசதிகளை போன்று பராமரிப்பு கட்டணம் அதிகம் என்றாலும், பரவாயில்லை என்று இருந்தோம்.ஆனால், ஊர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கும்போது, வீட்டிற்குள் நீர் புகவில்லை என்ற வகையில் வேண்டுமானால் நாங்கள் ஆறுதல் அடைந்து கொள்ளலாம். ஆனால், யாரையும் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளும் பூட்டிக் கிடக்க, செய்வதறியாது தவித்து விட்டோம்.மழை நின்றவுடன் விரைவாக கட்டடம் இயல்பு நிலைக்கு வந்து விட்டாலும், வெளியில் வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில் சில நாட்களை கழித்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக