செவ்வாய், 29 டிசம்பர், 2015

தமிழகத்திலும் பீகார் கூட்டணி உருவாகி விட்டது....?

சென்னை:''சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த பேச்சில், காங்கிரஸ் கட்சியை விலக்கி வைக்க வில்லை என்றும், அக்கட்சிக்கு கூட்டணியில் இடம் உண்டு,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து, மத்திய அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும். மாணவர்கள், வணிகர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில், தி.மு.க., தேர்தல் அறிக்கை இருக்கும். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த பேச்சில், காங்கிரஸ் கட்சியை விலக்கி வைக்கவில்லை. கூட்டணி என வரும்போது, காங்கிரஸ் கட்சிக்கும் இடம் உண்டு.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
சரிவில் தொழில்வளர்ச்சி: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 'அந்தத் தொழில்களுக்கு எல்லாம் ஒரே மாதத்தில் அனுமதி கொடுக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், தொழில்கள் துவங்கவில்லை. மாறாக, ஏற்கனவே நடைபெற்று வந்த தொழில்களுக்கு மூடுவிழாதான் நடைபெற்றுள்ளது.

தொழில் வளர்ச்சி 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைந்து விட்டது.தமிழக அரசின் கடன் சுமை 4 லட்சம் கோடி ரூபாய். தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் 31ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஜெயலலிதா ஏற்றி வைத்துள்ளார்.எந்தக் கோப்பு பற்றியும் முதல்வரிடம் சுதந்திரமாகப் பேசவோ, விவாதிக்கவோ அதிகாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் என்பது, இந்த ஆட்சியில் அரிதாகி விட்டது. தற்போது அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெறுவதில்லை. ஒருவேளை, முதல்வர் தனக்கு தெரியாததையா அமைச்சர்கள் கூறி விடப் போகின்றனர் என, எண்ணுகிறாரோ என்னவோ. அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு என்பதையே அவர் மறந்துவிட்டார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக