புதன், 16 டிசம்பர், 2015

வீதிக்கு வாருங்கள் முதல்வரே! வானத்தில் வாக்காளர்களை சந்திக்கமுடியாது...விகடன்

அடி முதல் நுனி வரை சூறையாடப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா கொஞ்சமும் கவலைப்பட்டவராகவே தெரியவில்லை. ‘மூன்று மாதங்கள் பெய்யவேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும்போது இப்படிப்ட்ட பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது’ என்று சொல்லத்தெரிந்த ‘மக்கள்’ முதல்வருக்கு, ‘இந்தப் பேரிடர் காலத்தில் எப்போதும் நான் மக்களுடன் இருப்பேன்’ எனக் காட்ட முடியவில்லை. யாரோ கொடுக்கும் நிவாரணப் பொருட்களில் தன் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் ஆற்றல்படைத்த முதல்வரே... ‘பேரிடர் நேரத்தில் எங்களைக் கைவிட்டவர்’ என, மக்கள் மனங்களில் பதிந்திருக்கும் உங்கள் சித்திரத்தை என்ன செய்வீர்கள்? அதை மறைக்க எந்த ஸ்டிக்கரை ஒட்டுவீர்கள்? பதில் சொல்ல ஓர் அதிகாரி இல்லை; விளக்கம் கூற ஓர் அமைச்சர் இல்லை. ஊடக கேமராக்களைக் கண்டால் எல்லோரும் ‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ அலறி ஓடுகின்றனர்.
வரலாறு காணாத பேரழிவு மாநிலத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த நேரத்தில், தினம் ஒருமுறையேனும் முதலமைச்சர் மக்களைச் சந்தித்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் ஊடகங்களை அழைத்து ‘இதுதான் உண்மை நிலவரம். இன்னென்ன மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன’ என நிலைமையை விளக்க வேண்டாமா? ஒரே ஒருமுறை ஹெலிகாப்டரில் பறந்து வான்வழியாக சென்னையின் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டதைத் தவிர, ஜெயலலிதா செய்தது என்ன?

‘ஒரு குடும்பத்துக்கு ஐந்தாயிரம் பணம் தந்துவிட்டால் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிடலாம்’ என ஜெயலலிதா நினைக்கிறார். அதில் தேர்தல் கணக்கும் இருக்கிறது. ஆனால், அது தப்புக்கணக்கு. ஏனெனில், மக்களிடம் இப்போது இழப்பதற்கு எதுவும் இல்லை. இருந்ததை இழந்தது யாரால் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். 

அரசியல், அதிகாரக் கூட்டின் லாபவெறிப் பேராசைக்கு, தங்கள் வாழ்வு பலி கொடுக்கப்பட்டிருக்கும் உண்மையை வீதிக்கு வீதி, வீடுக்கு வீடு  பேசுகின்றனர். அந்த உண்மையின் சூட்டை எதிர்கொள்ள ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வீதிக்கு வர வேண்டும். ஏனெனில், அங்குதான் ‘வாக்காளப் பெருமக்கள்’ எனும் மக்கள் வசிக்கிறார்கள். வீதிக்கு வாருங்கள் தமிழக முதல்வர் அவர்களே! vikatan.comm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக