திங்கள், 7 டிசம்பர், 2015

ரூ.100 கோடி உணவுப்பொருட்கள் வீண்....விரக்தியில், வீதியில் கொட்டினர். வணிகர்கள்

வானத்து சுனாமி'யாக விடாது கொட்டிய கன மழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள், வீணாகி விட்டன. மழை விடும் சமயம், கடைகளை திறந்த வியாபாரிகள், உள்ளே இருக்கும் வீணான உணவு பொருட்களை, விரக்தியில், வீதியில் கொட்டினர். வணிகர்கள் கண்ணீர்:தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, கடுமையாக பெய்து வருகிறது. ஏரிகள் நிரம்பியதால், உபரி நீர் திறக்கப்பட்டன; இதனால், சென்னை நகரம், கடல் போல மாறியது. வெள்ளத்தில், ஏராளமான வணிக நிறுவன கட்டடங்களும் மூழ்கின. இரண்டு நாட்கள் மழை விட்டு, சற்று வெள்ளம் வடிந்த நிலையில், வணிகர்கள், கடைகளை திறந்தனர். கடைகளில் இருந்த, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தண்ணீரில் நனைந்து, வீணாகிவிட்டன. இதைப்பார்த்து கண்ணீர் வடித்த வணிகர்கள், வீணான பொருட்களை, சாலைகளில் கொட்டுகின்றனர்.தி.நகர், ஜாபர்கான் பேட்டை, கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.,நகர் என, பல பகுதிகளிலும், சாலையோரங்களில், உணவுப்பொருட்கள் கொட்டப்பட்டிருந்தன.


இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது: வரலாறு காணாத மழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த பொருட்கள், முற்றிலும் மூழ்கி விட்டன. கிடங்குகள், சிறு கடைகள் என, வணிகர்களுக்கான பாதிப்பு அதிகம். இதுவரை, 100 கோடி ரூபாய் உணவுப் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

சிறப்பு கவனம்:

மக்கள் நிவாரணத்திற்குக் தர முடியாத அளவில் சேதமாகிவிட்டதால், வேறு வழியின்றி, சாலைகளில், உணவு பொருட்கள் கொட்டப்படுகின்றன. கடை, வீடுகளை முற்றிலும் இழந்து, 220 வியாபாரிகள் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர். மழையால் பாதித்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கவனம் செலுத்தும் அதே வேளையில், வீழ்ந்து விட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மத்திய, மாநில அரசுகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக