புதன், 4 நவம்பர், 2015

கோவன் கைதை கண்டித்து THE HINDU தலையங்கம்

கார்ட்டூன் : நன்றி அசீம் திரிவேதி
தேசத் துரோக வழக்குறுபடியும் ஒருமுறை தேசதுரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முறை அது தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது. தேசதுரோகம் மற்றும் வன்முறையை தூண்டுதல் ஆகிய குற்றங்களை சுமத்தி ஒரு தீவிர இடதுசாரி குழுவை சேர்ந்த நாட்டுப்புறப் பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குற்றம்: முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது அரசின் மது விற்பனைக் கொள்கையை இரு பாடல்களில் பழித்து பரப்பியது. அந்த பாடல் வரிகளின் மிக தூரமான பொருளில் கூட அரசு மற்றும் அரசு நிறுவனத்துக்கு எதிராக என்று எதுவுமில்லை. அரசின் கொள்கைக்கெதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அரசு நடத்தும் மதுக்கடைகளை மூட வலியுறுத்துவதற்கு அப்பால், வன்முறையை தூண்டும்படி ஏதுமில்லை. சமூக வலைத்தளங்களில் அது மிகவும் பரவி அதன் கருப்பொருள் நிறைய பேரின் மனதோடு உறவு கொண்டிருக்கிறது. மது விற்பது என்ற அரசின் கருத்தையும் அதே நேரத்தில் இலவசங்கள் மூலம் மக்களை குளிப்பாட்டுவதையும் தேர்ந்த நகைமுரணுடனும், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் சுரத்துடனும் பாடல் விரித்துரைக்கிறது. மக்களின் அறியாமையில் நம்பிக்கை வைத்து ஆட்சி நடத்தும் அதிமுக அசைக்கமுடியாத மெஜாரிட்டி இருந்தும்  ஒரு பாடலுக்கு இவ்வளவு பயம் கொண்டுள்ளது  ஏன்?

இன்னொரு பொருளில், அரசியல் பொருளாதாரத் துறையின் மானிய வழங்கல் கொள்கையை பாடல் விமர்சிக்கிறது. ஆளும் கட்சி, நலத்திட்டங்களை வாரி வழங்குகின்ற பாவனையில் மக்களை மதுக்குடியையும், அரசின் பிச்சையையும் சார்ந்திருக்கச் செய்திருக்கும் நிலைமையை படம் பிடித்து காட்டுகிறது. சிவதாஸ் என்ற இயற்பெயரை கொண்ட கலைஞன் கோவன் இந்த எதார்த்தத்தை தனது பாடல்களில் வசப்படுத்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டு பாடல்களில் ஒன்றின் பகடி தொனியும் கேலிச்சித்திரங்களும் ஜெயலலிதாவை மிகமோசமாக சித்தரிக்கின்றன என்றும் அது தனிநபர் மீதான தாக்குதல் என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தீவிரமான சிறு குழுக்கள் நாட்டுப்புற வடிவத்தை அரசியல் பிரச்சாரத்துக்கு வலிமையாகவும் அதே நேரத்தில் எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய மொழியிலும் முன்வைத்து வருவது வாடிக்கைதான்.
செல்வாக்கான அரசியல்வாதிகள் இந்த விமர்சனங்களை உள்வாங்கி அடுத்த அடியை எடுத்து வைப்பதே சிறந்தது. அடிநாதத்தில் ஒலிக்கும் குறைகளை அவர்கள் போக்க வேண்டும். அடக்குமுறைகளை பிரயோகிப்பது பயன் தராது. அரசின் எதிர்வினையில் தேவையற்ற ஆத்திரம் வெளிப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டத்தின் 124 அ பிரிவின் கீழ் தேசதுரோக வழக்கில் கோவனை கைது செய்திருப்பது ஒரு துவண்ட போலீஸ் நிர்வாகம் அதன் வரம்புகள் பலமுறை நீதிமன்றத் தீர்ப்புகளால் மட்டுப்படுத்தப் பின்னரும் அவற்றின் மீது எந்த மரியாதையும் கொள்ளாததையே காட்டுகிறது. விமர்சனப் பார்வைகளுக்கு எதிராக இத்தகைய கொடுங்குற்ற வழக்குகளை சுமத்துவதை நிராகரித்து நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பளித்துள்ளன. வன்முறையை உண்மையாகவே தூண்டுவது மற்றும் கலகத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டிருப்பது ஆகியவற்றை தவிர்த்து அரசுக்கு எதிராக வெறுப்பை உருவாக்குவது கூட தவறானதல்ல என்று உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது.
முதலமைச்சருக்கு எதிரான உரத்த விமர்சனத்தை சட்ட ரீதியில் அமைந்த அரசுக்கு எதிரான அச்சுறுத்தலுடன் சமன்படுத்தியதன் மூலம் இந்தப் பிரச்சினையில் சென்னை போலீஸ் இழுக்கை தேடிக் கொண்டுள்ளது. மிகச் சமீபத்தில் அரசு ஊழியர்கள் அரசை விமர்சித்தால் தேசதுரோக சட்டம் பாயும் என்ற சர்ச்சைக்குரிய சட்டத்தை மராட்டிய அரசு திரும்பப் பெற்றது. ஊழலுக்கு எதிராக கேலிச்சித்திரம் வரைந்ததற்காக அசீம் திரிவேதி என்ற கார்ட்டூனிஸ்ட் 2012-ம் வருடம் தேசதுரோக குற்றம் சுமத்தப்பட்டார். கடந்த வருடம் மீரட்டில் கிரிக்கெட் ஒளிபரப்பின் போது பாகிஸ்தான் அணிக்காக கைதட்டிய காஷ்மீர் மாணவர்களுக்கு எதிராக தேசதுரோக சட்டத்தை புனைந்தார்கள். பிறகு அதனை திரும்பப் பெற்றார்கள். இச்சட்டம் திரும்பத் திரும்ப தவறாக பயன்படுத்தப்படுவதை பார்க்கும் போது தேவையில்லாத, வழக்கொழிந்த, காலனியத்தன்மை கொண்ட இச்சட்டம் முற்றுமுழுதாக வெட்டியெறியப்பட வேண்டிய காலம் வந்திருக்கிறது.
மூலம் : THE HINDU தலையங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக