திங்கள், 23 நவம்பர், 2015

பீகாரில் தமிழக மெகா கூட்டணிக்கு அச்சாரம்?

தமிழகத்தில், தி.மு.க., தலைமையில், 'மெகா' கூட்டணி அமைக்க வேண்டும்' என, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கு, வட மாநில அரசியல் தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக, பீஹார் தலைநகர் பாட்னாவில், தலைவர்கள் வகுத்த வியூகம் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த, 2010 சட்டசபை தேர்தலில், பீஹாரில், எதிரும் புதிருமாக இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாரும், சமீபத்தில், அம்மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒன்றாக கைகோர்த்தனர். அத்துடன், காங்கிரசையும் சேர்த்து, மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டு, மாபெரும் வெற்றி பெற்றனர்.   அண்ணன் அழகிரி இல்லாம மெகா....?ஸ்பெல்லிங் மிஸ் ஆகுதே?அஹ்தாவது முதல்ல மெகா முக கூட்டணி உருவாகணும்ல...?
இதையடுத்து, பீஹார் மாநில முதல்வராக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின், நிதிஷ் குமார், ஐந்தாவது முறையாக, 20ம் தேதி பதவியேற்றார். அவரது அமைச்சர வையில், லாலுவின் இரு மகன்களும் இடம் பெற்றுள்ளனர்; அதில், ஒருவர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். >வெற்றிக்கொடி: கடந்த ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்குப் பின், டில்லியை தவிர்த்து, மற்ற மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் வெற்றிக்கொடி நாட்டி, ஆட்சியைப் பிடித்த பா.ஜ.,வுக்கு பீஹாரில் எதிர்க்கட்சி அந்தஸ்து தான் கிடைத்தது. அதற்கு, நிதிஷ் - லாலு அமைத்த மெகா கூட்டணியே காரணம் என, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அதனால், நாடு முழுவதும் உள்ள பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள் இணைந்து, மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், பீஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற, நிதிஷ் குமார்
அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி சார்பாக, அவரது மகனும், தி.மு.க., பொருளாளருமான ஸ்டாலினும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் பங்கேற்றனர். இதற்காக, விழா நடப்பதற்கு முந்தைய நாளே, இருவரும் பாட்னா சென்று தங்கினர்.அப்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் உட்பட, பல வட மாநில அரசியல் தலைவர்களைச் சந்தித்து பேசினர்.
அப்போது, 'நாடு தழுவிய அளவில், பா.ஜ.,வுக்கு எதிராக, மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் எனவும், அதில், தி.மு.க.,வும் இடம் பெற வேண்டும்' என, வட மாநில அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேநேரத்தில், தமிழகத்திலும், அப்படியொரு கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என்ற, தி.மு.க., வின் விருப்பம் குறித்து, அந்த தலைவர்களிடம், ஸ்டாலின் நிறைய ஆலோசித்துள்ளார்.  
இது தொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: பீஹாரில், பா.ஜ., வுக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றதை போல, நாடு தழுவிய அளவில், பா.ஜ.,வுக்கு எதிரான சிந்தனையில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து, மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் விரும்புகின்றனர். அதனால், 'அந்தக் கூட்டணியில், தி.மு.க.,வும் இடம் பெற வேண்டும்' என, ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டனர். அப்போது, தமிழக சட்டசபை தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைக்கவிரும்பும், தி.மு.க.,வின் விருப்பத்தை, ஸ்டாலின் தெரிவிக்க, அவர்கள் சந்தோஷம் அடைந்தனர். அப்படி, மெகா கூட்டணி அமைத்தால், தமிழகத்தில், பா.ஜ.,வை வளர விடாமல் தடுத்து விடலாம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். உடன், அந்த தலைவர்கள், 'தி.மு.க., தலைமையில், அப்படி ஒரு கூட்டணியை அமைக்க, நீங்கள் முயற்சி எடுத்தால், அதில், தே.மு.தி.க., - பா.ம.க., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்க்க, நாங்கள் உதவுகிறோம். அந்தத் தலைவர்களுடன் பேசி, கூட்டணிக்கு சம்மதிக்க வைக்கிறோம்' என, கூறியுள்ளனர். 'பீஹாரில் துணை முதல்வர் பதவியை லாலுவின் மகன் தேஜஸ்விக்கு, நிதிஷ் விட்டுக் கொடுத்ததைப் போல, தி.மு.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் போது, விஜயகாந்துக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாம். 'இதற்காக விஜய காந்த், ராகுல் ஆகியோரிடமும், நாங்கள் பேசுகிறோம். தமிழக சட்டசபை தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைந்தால், பிரசாரத்திற்கு வரவும் தயாராக உள்ளோம்' என்றும், அந்தத் தலைவர்கள் மேலும் கூறியுள்ளனர். அவர்களின் யோசனையால், மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ஸ்டாலின், 'உங்களின் யோசனையை, கட்சித் தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்து, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கூறுகிறேன்' என, பதில் அளித்துள்ளார். இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன..
வட மாநில தலைவர்களின் யோசனை, ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், முதல்வர் பதவி கனவில் இருக்கும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி உட்பட, சிலர், அந்த தலைவர்களின் யோசனையை ஏற்பரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- நமது சிறப்பு நிருபர் -தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக