செவ்வாய், 17 நவம்பர், 2015

வெள்ளத்தில் சென்னை மிதக்கிறது....அரசு இன்னும் தூங்குகிறது.

மிஸ்டர் கழுகு: அடைமழை... மூழ்கிய சென்னை... முடங்கிய அரசு!
ள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘எப்படி வந்தீர்?” என்று கேட்டோம். ‘‘நமக்கென்ன... எப்போதும் சிறகு கள்தான்! உம்மைப்போல நடந்து வந்து... படகில் வந்து... பஸ்ஸில் வந்து... பல சாகசங்கள் செய்ய வேண்டிய அவஸ்தை கிடையாதே!” என்று சொல்லியபடி செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.
‘‘தொடர் மழையால் தலைநகர் சென்னை உள்பட தமிழக நகரங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. சென்னையின் எல்லா சுரங்கப்பாதை​களும் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. பேருந்துகள் படகுகள்போல போய்க்கொண்டு இருக்கின்றன. வீட்டுக்​குள்ளேயே மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். வாகனங்கள் அனைத்தும் பாதியிலேயே நின்றுவிடுகின்றன. சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக இரண்டு மாதங்கள் முன்பு சென்னையில் போடப்பட்ட புதிய சாலைகள் மழையில் பல் இளிக்கின்றன. புதிய ரோடுகள் அதற்குள்ளேயே பல்லாங்குழிகளாகி விட்டன. பருவ மழைக்கான எந்த முன்னேற்பாடு களையும் அரசும், அதிகாரிகளும், அமைச்சர்களும் செய்யவில்லை என்பது பட்டவர்த்​தனமாக தெரிந்துவிட்டது!”
‘‘வரிசையாகச் சொல்லும்!”
‘‘29 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு 11-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வந்தார். ஒரு மணி நேரம் இருந்தார். அதிகாரிகள், அமைச்சர்களுடன் மழை, வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்திவிட்டு கிளம்பிப்​போய்விட்டார். ஆனால் பாதிப்புகள் சரி செய்யப்படவில்லை.
கடலூர் மாவட்​டத்தில்தான் பாதிப்புகள் அதிகம். இங்கே இறப்புகளும் அதிகம். சிதம்பரம் அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு, நிவாரணம் வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டபோது, அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டி அடித்திருக்​கிறார்கள். குடிநீர், மின்சார விநியோகம் முடங்கிப் போய்விட்டது. மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் தூங்கிக்கொண் டிருக்கின்றன என்ற வருத்தம் மக்களுக்கு இருக்கிறது!”
‘‘எதிர்க் கட்சிகள் அனைத்தும் இந்தக் குற்றச்சாட்டை வைத்திருக்​கிறார்களே!”
‘‘உணவுப் பொட்டலங்கள் மற்றும் நிவாரண உதவிகளை விநியோகிக்கும் அமைச்சர்களின் பின்னால் அதிகாரிகள் செல்கிறார்களே தவிர, வெள்ளம் பாதித்த ஏரியாக்களை செப்பனிடுவதில் கோட்டை விட்டு விடுகிறார்கள். அமைச்சர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே அதிகாரிகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. அமைச்சர்களும் பெயர் அளவுக்கு போட்டோ, வீடியோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். ஆளும் கட்சியின் பத்திரிகை, டி.வி-க்குத் தகவல் போய் விட்டதா? என்று கேட்டுத் தெரிந்து​கொண்டு, அவர்கள் வந்த பிறகுதான் நிவாரணம் கொடுக்கிறார்கள். அதன்பிறகு ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டபடி நகர்கிறார்கள். இயந்திரத்தனமாகத்தான் அமைச்​சர்கள் இயங்குகி றார்களே தவிர, உள்ளப்பூர்வமாகச் செயல்படுவதாகத் தெரியவில்லை. வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு சோகத்தில் இருக்கும்போது அவர்களுக்கு உணவும், நிவாரணப் பொருட்களும் வழங்கும் அமைச்சர்கள் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்ததுதான் கொடுமை. ஜெயலலிதா ஆட்சியில் முன்பிருந்த சீனியர் அமைச்சர்கள் செங்கோட்டையன், மதுசூதனன், கண்ணப்பன், செல்வகணபதி போன்ற​வர்கள் வெள்ளம் பாதிப்புகள் சமயத்தில் மக்களோடு மக்களாக இறங்கிச் செயல்​பட்டதையும், தற்போதைய அமைச்சர்களின் ‘ஏனோ தானோ’ செயல்பாட்டையும் அ.தி.மு.க-வில் உள்ளவர்களே விமர்சிக்கிறார்கள்.’’
‘‘அரசின் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது ஏன்?’’
‘‘ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பிரசாரத்துக்கு 30 அமைச்சர்கள் ஆஜர் ஆனார்கள். ஆனால் பெரிய பாதிப்பைச் சந்தித்த கடலூருக்கு வெறும் ஆறு அமைச்சர்கள் தானா என கொந்தளிக்​கிறார்கள். ஆரம்பத்தில், கலெக்டர் அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டே நிவாரண உதவிகள் வழங்குவது ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது என அமைச்சர்கள் செயல்பட்டு வந்தனர். ஸ்பாட்டுக்குப் போகவில்லை என எதிர்க் கட்சிகள் குரல் கொடுத்த பிறகு ஸ்பாட்டுக்குப் போக ஆரம்பித்தார்கள். அமைச்சர்​களின் வெள்ள நிவாரணப் பணிகளை உடனுக்குடன் மீடியாவுக்கு வழங்குவதற்காக  அதிகாரிகள் காட்டிய வேகத்தை மக்களின் பிரச்னையைத் தீர்ப்பதில் காட்டவில்லையாம். வெள்ள நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள் காட்டும் அக்கறையைவிட நிவாரண உதவிகளை வழங்குவதில் ஜெயலலிதாவின் போட்டோ இருக்கிறதா என்பதில்தான் படு கவனமாக இருக்​கிறார்கள்.
ஆய்வுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் ஜெயலலிதாவின் போட்டோவை மறக்காமல் கொண்டு வந்து வைக்கிறார்கள். அரிசி மூட்டை வழங்கப்படும் பையிலும் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் கவரிலும் தவறாமல் ஜெயலலிதாவின் புகைப்படம் இருக்கிறதா என்பதில் குறியாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடர்பாக செய்தித் துறை வழங்கும் செய்திக் குறிப்பிலும் ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி’ என்கிற வாக்கியத்​தோடுதான் குறிப்புகளை அனுப்பி வைக்கிறார்கள். இந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையாகச் செயல்படும் அரசு வெள்ள முன்னேற்பாடுகளை முடுக்கி விடுவதில் ஏன் போதிய அளவு அக்கறை காட்டவில்லை என்பதுதான் பலரின் ஆதங்கம். சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் அடைமழை பெய்ய ஆரம்பித்த பிறகுதான் அவசர உதவி எண்களே அறிவிக்கப்​பட்டன. வந்த பின் வாடுவதைவிட வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை தமிழக அரசு மறந்தே போனது. மழைக்கு முன்பே ஏரி, குளங்கள், மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றைத் தூர்வாரி சீரமைத்​திருந்தால் இந்த அளவுக்குச் சேதங்கள் ஏற்பட்டிருக்காது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  ஹெலிகாப்டரில் உணவுப் பொட்​டலங்கள் போடப்பட்டன என கடந்த காலங்​களில் செய்திகள் வரும். அப்படி​யான எந்த நிகழ்வையும் அரசு எடுக்கவில்லை.’’
‘‘ம்’’
‘‘கடலுக்குள் போக வேண்டிய படகுகள் எல்லாம் சென்னையின் வெள்ளத்தில் ஓடிக்கொண் டிருக்​கின்றன. அரசு இயந்திரமே மொத்தத்தில் முடங்கிக் கிடக்கிறது. சென்னையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும், மேயர் சைதை துரைசாமிக்கும் நடக்கும் பனிப்போரில் அதிகாரிகள் சிக்கித்​தவிக்கிறார்கள். யார் சொல்வதைச் செய்வது என்கிற குழப்பம் அவர்களுக்கு. ‘முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்பாடி தீர்மானங்கள் நிறைவேற்றுவது, அவையில் பாராட்டிப் பேசுவது என்கிற விஷயங்களில்தான் மேயர் அதிக ஆர்வம் காட்டினார்’ என்று எதிர்க் கட்சியினர் குற்றம்​சாட்டுகிறார்கள். அதே நேரம், அமைச்சர் வேலுமணியின் பி.ஏ. என்று சொல்லிக் கொண்டு உலா வரும் ஒருவர், மாநகராட்சி​யின் அதிகாரிகளை ஆட்டிப்படைப்பதாக மேயர் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். சமீபகாலமாகவே சைதை துரைசாமிக்கு மறைமுகத் தடைகள் போடப்பட்டு உள்ளதாகவும் அதனால் அவரால் சரிவர வெளியில் வர முடியவில்லை என்றும் சொல்கிறார்கள்!”
‘‘ஜெயலலிதா வருகை குறித்த காட்சிகளை விவரியும்!”
‘‘வெள்ளப் பாதிப்புகளை முதல்வர் நேரில் பார்க்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் அறிக்கை விட்டன. அப்போதும் ஜெயலலிதா அலட்டிக் கொள்ளவே இல்லை. வனத்துறையில் கட்டப்பட்ட கட்டடங்களையும் தமிழகம் முழுவதும் கட்டப் பட்ட பாலங்களையும் வீடியோ கான்பரன்​சிங் மூலம் கோட்டையில் இருந்து திறந்து வைத்தார். வெள்ளத்தில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் பாலங்களைத் திறந்து வைத்துக்கொண்டிருக்கிறாரே என விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ‘ஹெலிகாப்​டரில் வந்தாவது ஜெயலலிதா பார்வையிட வேண்டும்’ என ராமதாஸ் கொதித்தார். ஆனாலும் ஜெயலலிதா வெள்ளப் பகுதிகளைப் பார்வை​யிடவில்லை. திங்கள்கிழமை சென்னை மாநகரமே மோசமாகப் பாதிக்கப்​பட்டிருந்தது. வேறு வழியில்லாமல்தான் திடீரென்று ஜெயலலிதா கிளம்பினார். 2001-2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெள்ளச் சீற்றம் ஏற்பட்டபோது, ஜெயலலிதா ரோட்டில் இறங்கிச் சென்று பார்வையிட்டார். பொதுமக்களிடம் குறைகள் கேட்டார். ஆனால் இப்போது டெம்போ வேனில் இருந்து இறங்கவே இல்லை. கோட்டையில் சில நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து கார்டனுக்குப் போய் அதன்பிறகு டெம்போ வேனுக்கு மாறியிருக்கிறார். அதன்​பிறகுதான் சென்னையைச் சுற்றி பார்வையிட்டார். கிட்டத்தட்ட தேர்தல் பிரசார காட்சிகள் போலதான் இருந்தது. ‘மூன்று  மாதங்களுக்குப் பெய்ய  வேண்டிய மழை ஒரு சில நாட்களில் கொட்டித் தீர்த்துவிட்டது. அதனால்தான் பாதிப்பு அதிகம். பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்’ என வேனில் இருந்தபடியே சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.’’
‘‘ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதி ஆர்.கே.நகர் ரொம்ப பாதிக்கப்பட்டிருந்ததே?’’
‘‘அங்கேயும் போனார். ‘நான் இருக்கிறேன்’ என நம்பிக்கை வார்த்தைகளைச் சொன்னார். வட சென்னையில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது ஆர்.கே.நகர். முதல்வரின் தொகுதி என்கிற அடையாளமே இல்லாத அளவுக்குத் தொகுதியே தண்ணீருக்குள் மூழ்கியிருந்தது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கத்திவாக்கம் ஹைரோடு, காமராஜர் நகர், சுதந்திரபுரம், மீனாம்பாள் நகர், தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் ஏரியாக்கள் வெள்ளக் காடாகக் காட்சி அளிக்கின்றன. இந்த ஏரியாக்களைத்தான் இடைத் தேர்தலில் அமைச்சர்கள் பிரித்துக்கொண்டு தினமும் வேலை பார்த்தார்கள். இன்றைக்கு ஒருவர்கூட அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. ஜெயலலிதா வருகைக்காக அவசர அவசரமாக மோட்டார் போட்டு தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். முதல்வரின் கண் படும் பகுதியில் தண்ணீரை உறிஞ்சி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் திருப்பிவிட்ட கொடுமையும் நடந்தேறியது. அதிகம் தண்ணீர் நிற்காத இடத்தில் வாகனத்தை நிறுத்தி, அங்கிருந்தே ஜெயலலிதா சிற்றுரையை நிகழ்த்தினார். ‘நான்  இருக்கிறேன், நமது தமிழக அரசு இருக்கிறது. எதற்கும் கவலைப்பட வேண்டாம்’ என ஜெயலலிதா சொன்னாலும், மக்கள் கவலையோடுதான் இருக்கி றார்கள். இன்னும் சில நாட்கள் மழை தொடர்ந்தால் ஆர்.கே.நகர் அலங்கோலமாகிவிடும் விகடன்.com

1 கருத்து: