வியாழன், 19 நவம்பர், 2015

“ஊருக்குள்ள அத்தனை பேரும் வடிவேலுதாண்ணே!”

“ஊருக்குள்ள அத்தனை பேரும் வடிவேலுதாண்ணே!”லகலக கலகல பேட்டிம.கா.செந்தில்குமார், ஆ.விஜயானந்த், படங்கள்: கே.ராஜசேகரன்''அண்ணே... ஊருக்குள்ள இறங்கி நடந்தா, வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு பூராப் பேருமே வடிவேலுகளாவே தெரியுறாங்க. சீரியஸ் மேட்டர்லகூட சிரிக்கவைக்கிறாங்க. நீங்க கேக்குற எல்லா கேள்விக்கும் என் ரியல், ரீல் ட்ராக்ல இருந்தே உதாரணம் சொல்ற அளவுக்கு அவ்வளவு காமெடி பண்றாய்ங்கண்ணே. ஏன்னா, கவுண்டமணி அண்ணனுக்கு அப்புறம் நான்தான் ட்ராக் பண்ணிட்டு இருந்தேன். இப்ப நீங்க டி.வி-யில பாக்குறது எல்லாமே அந்த ட்ராக் காமெடிதானே. அதுதான் தூக்குத் தூக்குனு தூக்கும். அப்போ விதைச்சது இன்னும் அறுவடை கொடுத்துட்டே இருக்கு' - தன் பன்ச் டயலாக்குகள் அவ்வளவும் மீம்ஸ், டப்ஸ்மாஷ்கள், படத் தலைப்புகள் எனக் கொடிகட்டிப்பறப்பதைக் கவனித்துக்கொண்டு, அமைதியாக இருக்கிறார் வடிவேலு. நடிகர் சங்கப் பஞ்சாயத்துகளில் பரபரப்பாக இருந்தவர், இப்போது அடுத்தடுத்த படங்களின் பணிகளில் தீவிரமாக இருக்கிறார்!
''ஏயப்பா... நடிகர் சங்கத் தேர்தல் பொதுத்தேர்தல் மாதிரில்ல நடந்துச்சு. வீட்டுக்குள்ள ரொம்ப நாளா அடைஞ்சுகிடந்த மூத்த கலைஞர்கள் எல்லாம் வெளியே வந்தப்பவே எங்க அணியோட வெற்றி தெரிஞ்சிருச்சு.

'டேய்... இவிய்ங்களுக்கு எல்லாம் நாம சொல்லவே இல்லையே... டேய், இவன் வர்றான்... அங்க பார்றா... அவன் செத்துட்டான்னு சொன்னாய்ங்களே, வர்றான்...’ இப்படியேதான் எதிர் அணியில் ஜெர்க் ஆகிட்டே இருந்தாங்க. போஸ்டல் ஓட்டுல அவங்க லீடிங்ல போயிட்டு இருந்தப்ப ராதாரவியண்ணே, 'மவனே... நைட்டு 8 மணிக்கு உங்க எல்லாருக்கும் இருக்குடா’ன்னார். 'ஐயய்யோ! 8 மணிக்கு என்ன செய்யப்போறாகனு தெரியலையே... என்னவா இருக்கும், என்னத்த செய்யப்போறார்? 8 மணிக்கு மேல... 8 மணிக்கு மேல...’னு உள்ளுக்குள்ள ஒரு எக்கோ ஓடிட்டே இருந்துச்சு. கரெக்ட்டா 8 மணிக்குப் பாத்தா, 'தம்பிங்க நல்லா உழைச்சிருக்காங்க. சூப்பரு... வாழ்த்துகள்’ங்கிறார். இதான் அந்த 8 மணியா? 'இதுக்குத்தான் இம்புட்டு பில்டப்பா?’னு தோணுச்சு. 'நீ நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் பெரிய ரௌடி இல்லைப்பா... ஒன்லி பாடி லாங்வேஜ்’ங்கிற நம்ம பழைய டயலாக்தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. எல்லாருமே வடிவேலா மாறுனதை அன்னைக்குத்தாண்ணே பாத்தேன். அதுல உச்சக்கட்ட காமெடி, 'வடிவேலுவைக் காணவில்லை’னு என் போட்டோ போட்டு போஸ்டர் ஒட்டினதுதான். 'நாலு வருஷமாக் காணவில்லை’னு எழுதிட்டு, ஒரு வருஷத்துக்கு முன்ன நான் நடிச்ச 'தெனாலிராமன்’ படத்தை போஸ்டர்ல ஒட்டியிருக்காங்க. சொல்லிக்கொடுத்தவனும் முட்டாளாயிட்டான், ஒட்டினவனும் முட்டாளாயிட்டான். இப்படி அதகளம் பண்ணிட்டாங்க நடிகர் சங்கத் தேர்தல்ல! ஆனா, இப்படி எல்லாம் சீரியஸ் காமெடி பண்ண, நம்மாளுகளை விட்டாலும் வேற ஆளுக இல்லை!
கொஞ்சம் கவனமா எழுதுங்கண்ணே... நூல் அளவு பிசகுனாலும் தப்பாயிரும். சிவாஜி சார் இறந்த அன்னைக்கு நடந்தது இது. அன்னைக்கு சிவாஜி ஐயா உடம்புக்குக் கீழ ரஜினி, கமல் சார்லாம் நிக்கிறாங்க. கீழ ஒரு கேரக்டர், நல்லா உடைச்சி ஊத்தி அப்படியே மிக்ஸிங்கைப் போட்டு கல்ப்பா அடிச்சுட்டு பின்னாடியே வருது. 'தெய்வமே போயிட்டியே’னு அழுதான். 'ச்சே... இப்புடி அழுவுறானேய்யா’னு எங்களுக்கு வருத்தம். வந்தவன் ஒரு இடத்துல எங்க எல்லாரையும் பார்த்து, 'தமிழ்நாட்டுல இருந்தது ஒரே ஒரு நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா’னான். என்ன சொல்றதுன்னே தெரியலை. ராஜா அண்ணன், 'யப்பா அவன் ரொம்ப கரெக்ட்டா சொல்றான்யா’ங்கிறார். சீரியஸ் மேட்டர், ஆனா மொத்தத்தையும் அவன் காமெடி பண்ணிட்டான். அதான் நம்ம ஆளுக குணம்.''
''மனோரமாகூட பல படங்கள் நடிச்சிருக்கீங்க... அவங்க இழப்பு பற்றி?'
''ஆச்சியம்மா, நகைச்சுவையின் பிம்பம். என்னா மாதிரியான நடிகை... ஆயிரக்கணக்குல படம் நடிச்சவுக. 'அவுக சாதனையெல்லாம் யாரும் செய்ய முடியுமா?’னு யோசிக்கக்கூட முடியாது. அவ்வளவு பெரிய நடிகையா இருந்தாலும் ஏதாவது விஷயம் சொன்னா, நல்லா இருந்தா உடனே ஏத்துப்பாங்க. 'இவன் என்ன சொல்றது... நாம என்ன கேக்குறது?’னு நினைக்க மாட்டாக. அந்த மனப்பக்குவம் மிகப் பெரிய கலைஞர்களுக்குத்தானே வரும். இல்லைனா, அந்த இடத்தையெல்லாம் பிடிக்க முடியுமாண்ணே?
எத்தனையோ படங்கள்ல அவுககூட நடிச்சிருந்தாலும் எனக்கு 'புலிகேசி’ ஸ்பெஷல்ணே. அதுல எனக்கு அம்மாவா நடிச்சாக. அப்பப்ப பேசுவாங்க. ஒருமுறை, 'யப்பா... நான்லாம் செத்தா வருவியாடா?’ன்னாங்க. 'ஏம்மா இப்டியெல்லாம் சொல்றீக?’னு அழுதுட்டேன். சமீபத்துல பேசும்போது, 'வடிவேலு... எங்கடா இருக்க, எப்படிப்பா இருக்க, ஏன்டா நீ இப்படி இருக்க, நடிக்காம இருக்கலாமாய்யா? ஒண்ணுமில்லப்பா... நடிடா நீயி... எல்லாம் சரியாகும்பா’னாக. அதுக்கப்புறம் அந்தக் குரலை கேட்க முடியலைண்ணே. தமிழக முதலமைச்சர் சொன்ன மாதிரி, அவங்க ஒரு பெண் சிவாஜி... சேலை கட்டின சிவாஜி. இந்த உலகத்துல எதிரியே இல்லாம, எதிரியைச் சம்பாதிக்காமலே செத்துப்போன ஒரே ஆத்மா, ஆச்சிதாண்ணே.''
''உங்க காமெடி பன்ச்சுகள்தான் இன்னைக்கு படத்தலைப்புகளா வருதே... அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?''
'' 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, 'நானும் ரௌடிதான்’, 'த்ரிஷா இல்லனா நயன்தாரா’, 'ஜில் ஜங் ஜக்’னு அது ரொம்ப லெங்த்தாப் போகுது தலைவா. இது, என் காமெடியை உலகமே ரசிச்சதால கிடைச்ச வெற்றி. மக்கள் எந்த அளவுக்கு என்னை ரசிச்சிருந்தா, இந்த டயலாக்கை எல்லாம் படத்தோட தலைப்பா வெச்சிருப்பாங்க? நான் பப்ளிக் பீஸ் தலைவா. என் தாய்க்கும் என் குலதெய்வம் அய்யனாருக்கும் இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கிறேன். இப்பக்கூட, 'கெணத்தக் காணோம்’, 'சண்டைனா சட்டை கிழியத்தான செய்யும்’, 'கௌம்பிட்டாய்ங்கய்யா... கௌம்பிட்டாய்ங்க...’னு பன்ச்சுகளைத் தலைப்பா பதிஞ்சிருக்காங்களாம். 'நம்ம படத்துக்கு, நாம பேசின டயலாக்கையே தலைப்பா வெச்சிடலாமா?’னு தோணுதுண்ணே. ஆனா நாம பேசுறதை இன்னொரு ஆள் வெச்சாத்தானே நல்லா இருக்கும். சரிதானே நான் சொல்றது!''
''அதுக்கு உங்ககிட்ட யாராவது அனுமதி வாங்குவாங்களா?'
''அட... நான் பேசின பூரா வார்த்தைகளையும் தலைப்பா பதிவுபண்ணி வெச்சிக்கிட்டு சேல்ஸ் பண்றாங்கண்ணே. அதை ஒரு  வியாபாரமா மாத்திட்டாங்க. முக்கியமான பொறுப்புல இருக்கிறவய்ங்களே பண்றாங்கனு சொல்றாங்க. அதுதான்ணே வருத்தமா இருக்கு. நம்மாளுங்க பலரே என் டயலாக்கைக் காசு கொடுத்து வாங்கிட்டு வந்திருக்காக. சிலர், 'இப்புடி வெச்சிருக்கேன் தலைவா’னு தகவல் சொல்வாங்க. இதுல ரெண்டு விஷயம், கொஞ்சம் முன்னபின்ன கேப் விட்டு நடிச்சாலும்கூட நாம பேசின பூரா டயலாக்கும் டைட்டிலா ரீச்சாகியிருக்கு. காரணம், நம்ம ஆக்ட்டிங் பூராவும் டி.வி-யில போய்க்கிட்டே இருக்கு. நம்ம டயலாக்குகளை இன்டர்நெட், கரன்ட் கட்டுனு எல்லா சமயமும் பயன்படுத்துறாங்க. அது ஒருவிதத்துல நல்ல விஷயம்தானே.''
'' 'டி.வி-யில பரபரப்பா இருக்கீங்க. ஆனா, திரும்ப சினிமாவுல ஏன் பரபரப்பா இல்லை?’னு யாராவது உங்ககிட்ட கேட்டாங்களா?''
''ம்ம்... நிறைய. கமல் சார்கூட ஒருமுறை பேசினாரே. 'நடிங்க வடிவேலு. நமக்கு சினிமாதான் நல்லா இருக்கும். மத்ததெல்லாம் நமக்கு எதுக்கு? விடுங்க, அதையெல்லாம் விடுங்க. நான் அதுக்குள்ள போக விரும்பலை. நீங்க இதுக்குள்ளதான் இருக்கணும். இந்த உலகம், அருமையான உலகம். எதுக்கு மத்ததெல்லாம்?’னு நல்லது சொன்னார். பெரிய விஷயம்ணே. அவர்லாம் நமக்குச் சொல்றாருன்னா சாதாரணமா! சிவாஜிக்கு அப்புறம் இன்னைக்கு அவர்தானண்ணே!
ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி ஒவ்வொரு குடும்பத்தோட ரேஷன் கார்டுலதான் நான் இல்லையே தவிர, அவுங்கள்ல ஒருத்தனா என்னை வெச்சிருக்காங்க. ஆண்டவன் புண்ணியத்துல நம்ம மாஸ் அப்படியேதாண்ணே இருக்கு. என் ஸீட்டு காலியாத்தான் கிடக்கு. நான் அப்பப்ப உட்கார்ந்து எந்திரிச்சுட்டு இருக்கேன் அவ்வளவுதான். என் ஸீட்டை யாரும் தூக்கிட்டுப் போகலை. இதை நான் திமிரா சொல்லலைண்ணே... மக்கமாரோட மனசை உணர்ந்து சொல்றேன். நான், தூசு கிடையாதுண்ணே... ஜனங்கள் மத்தியில இன்னமும் மாஸ் பீஸு!''
'' 'இனி எந்தக் கட்சிப் பிரசாரத்துக்கும் போக மாட்டேன்’னு சொன்னீங்களே?''
''இனி அதுக்கு அவசியம் இருக்காதுண்ணே. மக்களைச் சிரிக்கவைக்க என்ன வழியோ, அந்த ஏரியாவுக்குள்ள போறதுதான் நல்லதுனு நினைக்கிறேன். நம்ம நலம் விரும்பிகளும் அதைத்தான் சொல்றாக. ஆனாண்ணே, ஓட்டுப்போடுற ஒவ்வொரு மனுஷனும் அரசியல்வாதிதானே? அரசியல்தான் உலகத்தையே நிர்ணயிக்குது. அதனால 'அரசியல் உங்களுக்கு எதுக்கு?’னு கேக்குறதே தப்பு. ஆனா, மக்கள் என்னை 'வேணாம்பா உனக்கு அரசியல். உனக்கு வேலை என்ன... நீ எங்களை சிரிக்கவை. நீ பாட்டுக்கு எங்கனயாவது போயிடுற. நாங்க இங்க ஆள் கிடைக்காமத் தவிக்கிறோம். நீ எதுக்குத் திரும்ப அங்க போற? அதுக்குல்லாம் ஆள் இருக்கு விடுய்யா’ங்கிறாங்க. ஒருத்தர் ரெண்டு பேருக்குப் பதில் சொல்லலாம்... ஒட்டுமொத்த மக்களுக்கும் பதில் சொல்ல முடியுமா? 'சரி ரைட்டு விடு... இனி நடிப்பு மட்டும்தான்’னு முடிவெடுத்துட்டேன்.''
''உங்களுக்கும் விஜயகாந்துக்குமான மனக்கசப்பு நீங்கிடுச்சா?''
''அதைப் பற்றி நான் கவலைப்படுறதும் இல்லை; சிந்திக்கிறதும் கிடையாது. இனி அந்த அரசியல் நமக்கு வேணாம். ஆனாண்ணே, எந்த அரசாங்கம் வேணும்... எந்த கவர்மென்ட் வேணாம்னு ஓட்டுப்போட்டு நிர்ணயிக்கிற நம்ம கடமையை நாம பண்ணித்தானே ஆகணும். அதைத் தவிர, இப்போதைக்கு 'அரசியல்’ங்கிற ஏரியாவுக்குள்ள இருக்கிற கடையைப் பொத்துனாப்ல மூடிவெச்சிருக்கேன். அதுபாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போதைக்கு நடிப்போம். அவ்வளவுதான். 'தீபாவளிக்கு உங்க படம் என்ன?’னு பலர் கேட்டாங்க. தீபாவளிக்கு முன்னாடி வந்த வெற்றிப் படம், நடிகர் சங்கத் தேர்தல்; தீபாவளிக்குப் பின்னாடி வர்ற படம்தான் நம்ம ஆனந்த விகடன் பேட்டி. தட்டித் தூக்குங்க தலைவா!      vikatan.com மந்திரி தந்திரி! - 30
கேபினெட் கேமராவிகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக