சனி, 28 நவம்பர், 2015

பள்ளி மாணவர்களுக்கு ஜாதி கயிறு ! நெல்லை ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் ஜாதியை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் கயிறுகட்டி வருவது தொடர்பாக 2 வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி மோதல்களும், அதன் பின்னணியில் நடைபெறும் கொலைகளும் பல்வேறு அதிர்வு அலைகளை உருவாக்கியிருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஜாதி வெறி தலைதூக்குவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுவருகிறார்கள்.

ஜாதி பிரச்சினை
இம்மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் சிலவற்றில் பயிலும் மாணவர்கள் சிலர் தங்கள் ஜாதியை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் பல்வேறு வண்ணங்களில் கயிறுகளை கட்டி வரும் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும், சில மாணவர்கள் தங்கள் சமுதாய தலைவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங் களை அரசு வழங்கும் பஸ்பாஸுக்கு பின்புறம் வைத்திருந்ததும் தெரியவந்தது.
காவல் நிலையத்தில் வழக்கு
இத்தகைய மாணவர்கள் மத்தியில் பள்ளி வளாகத்திலேயே மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஊடகங் களில் செய்திகள் வெளியாகியி ருக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில் மாவட்டத்திலுள்ள பள்ளி தலைமையாசிரியர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஜாதி வெறியை தூண்டும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சமூகநலத்துறை முதன்மை செயலாளர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் கருத்து
இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேற்று கூறும்போது, "இந்த நோட்டீஸ் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பள்ளி நிர்வாகங்களுக்கு பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஜாதியை வெளிப்படுத்தும் வகையில் கயிறுகளை கட்டி வரும் மாணவர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதன்பின்னரும் கயிறு கட்டிவந்தாலோ, ஜாதி வெறியை தூண்டும் வகையில் செயல்பட்டாலோ பள்ளியிலிருந்து சம்பந்தப்பட்ட மாணவரை நீக்கவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.தமிழ்.ஹிந்து.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக