சனி, 28 நவம்பர், 2015

ராமநாதபுரம்: புனரமைக்கப்படும் ஊரணிகள்...நிலத்தடி நீர் பெருக்குவதில் சாதனை !

இனி... ராமநாதபுரம் தண்ணியுள்ள காடு..!’
புனரமைக்கப்படும் ஊரணிகள்... அசத்தும் ஆட்சியர்!இரா.மோகன், படங்கள்: உ.பாண்டிவிவசாயத்துக்கு காவிரித் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மத்தியில்... குடிநீர்த் தேவைக்கே மற்ற மாவட்டங்களின் நீர் ஆதாரங்களை நம்பி இருந்த மாவட்டம் ராமநாதபுரம். இதனால்தான் ராமநாதபுரம் ‘தண்ணி இல்லா காடு’ என அழைக்கப்பட்டது. அந்த அளவுக்கு வறட்சி மாவட்டமாக இருந்த ராமநாதபுரம், இன்று ‘நிலத்தடி நீரைப் பெருக்குவது எப்படி?’ என மற்ற மாவட்டங்களுக்கு வழிகாட்டி வரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது!
சுமார் 410 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் கிழவன் சேதுபதி, நகரின் நீர் ஆதாரங்களுக்காக சுமார் 38 ஊரணிகளை உருவாக்கினார்.
மன்னராட்சி, மக்களாட்சியாக மலர்ந்த பிறகு, 18 ஊரணிகளாகக் குறைந்து போயின. தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்த பல ஊரணிகள் இருந்த இடம் தெரியாமல் போயின. இதனால், குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளுக்கு ராமநாதபுரம் மக்கள் தவித்து வந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், தற்போது இந்த நிலை மாறத் துவங்கியிருக்கிறது. ஒரு காலத்தில்  தண்ணீர் தேவைகளைத் தீர்த்து வந்து, பிறகு கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பல ஊரணிகள் மீண்டும் தோண்டப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிக்கு முதல் காரணமாக இருந்தவர்கள், நகரமன்ற உறுப்பினர்களான நாகராஜன் மற்றும் சுபாஷ்சந்திரபோஸ் ஆகிய இருவரும்தான்.
ஊரணிகள் உயிர் பெறுவது குறித்து நாகராஜனிடம் கேட்டபோது, ‘‘ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் கிழவன் சேதுபதி தனது அரண்மனையைக் கட்டி முடித்த பிறகு உருவாக்கியது ஊரணிகளைத்தான். ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் முகவை ஊரணி, நீலகண்டி ஊரணி, அல்லிக்குளம், பூமாலை, கேணிக்கரை, பாராங்குண்டு, செட்டி ஊரணி, பாம்பு ஊரணி என 38 ஊரணிகளை உருவாக்கினார். இந்த ஊரணிகளின் நீர் ஆதாரத்துக்காக பெரிய கண்மாயில் இருந்து வடிகாலும் அமைத்திருந்தார். மன்னர் காலத்தில் ராமநாதபுரம், தண்ணீர் நிறைந்த பகுதியாக இருந்து வந்தது. காலப்போக்கில் இந்த ஊரணிகள் பல ஆக்கிரமிப்பாலும், அரசின் கவனக்குறைவாலும் மறைந்து போயின. பல ஊரணிகள் குப்பை கொட்டும் இடங்களாக மாற்றப்பட்டதால், மழைக்காலங்களில் பெய்த நீர், சாலைகளில் சாக்கடையாக ஓடியது.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நகரில் உள்ள ஊரணிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட கலெகடர் நந்தகுமாரிடம் கோரிக்கை வைத்தோம். மக்களுக்கான பணிகளுக்கு முன்னுரிமை காட்டும் கலெக்டர் உடனடியாக எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நகரில் உள்ள சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உதவியுடன் ஊரணிகளை மேம்படுத்தும் பணி துவக்கப்பட்டது. எங்கள் பகுதியில் இருந்த பாறாங்குண்டு ஊரணி கடந்த 40 ஆண்டுகளாக குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இருக்கும் கிணறுகளில் இருந்த தண்ணீர் சுவை மாறி, துர்நாற்றமும் வீசியது. கிணறுகள் இருந்தும் பயன்படுத்த முடியாமல், காசு கொடுத்து நீர் வாங்கி பயன்படுத்தும் நிலையில்தான் மக்கள் இருந்தனர்.
இந்நிலையில்தான் டாக்டர் பாபு அப்துல்லா, ‘செய்யது அம்மாள் அறக்கட்டளை’ மூலம் இந்த ஊரணியை மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதன்படி 2 ஏக்கர் 29 சென்ட் பரப்பைக் கொண்ட அந்த ஊரணியை மறு உருவாக்கம் செய்யும் பணியைத் துவக்கினோம். 15 அடி ஆழத்துக்கு குப்பைகள் குவிந்திருந்தன. சுமார் 9 ஆயிரம் டன் கழிவுகளை அகற்றினோம். அவற்றை அகற்றும் போது ஊரணிக்கு தண்ணீர் வரும் வரத்துக் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைச் சீரமைத்து மீண்டும் தண்ணீர் வரும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் சாலைகளில் தேங்கிய மழை நீர் இனி இந்த ஊரணிக்கு வரும் வகையிலும், அவ்வாறு வரும் தண்ணீரில் உள்ள கழிவுகளை எல்லாம் வடிகட்டி சுத்தமான தண்ணீர் மட்டும் ஊரணியில் சேரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்ற நாகராஜன்,
“ஆழப்படுத்தப்பட்ட ஊரணியில் தண்ணீர் தேங்கியதால் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் இருந்த தண்ணீரின் தன்மையும் மாறியுள்ளது. தவிர, ஊரணிக்கரை பகுதிகளைச் சுற்றிலும் வேலி அமைத்து சுமார் 200 புங்கன், நிழல்வாகை மரகன்றுகளை நட்டிருக்கிறோம். இதே போல் ராமநாதபுரத்தைச் சுற்றிலும் புழக்கத்தில் உள்ள ஊரணிகள் கலெகடர் நந்தகுமாரின் முயற்சியால் புனரமைக்கப்பட்டு வருகிறது. இத்துடன் மாவட்டம் முழுமைக்கும் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட ஊரணிகளையும், குளம், கண்மாய்களையும் மீட்டு எடுத்தால் ‘தண்ணியில்லா காடு’ என்ற பெயர் ராமநாதபுரத்தை விட்டு போய்விடும்” என்றார்.
மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளில் முதன்மையானது நீர். அதனை உணர்ந்து ஊரணிகளை மேம்படுத்தும் ஆட்சியர் நந்தகுமார் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்தான். விகடன்,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக