செவ்வாய், 17 நவம்பர், 2015

பாரிஸ்...அந்த மூன்று மணிநேரத்தில் நடந்த கொலைவெறியாட்டம்....விபரம் வெளியாகி உள்ளது

அப்பாவி மக்களையும் கொன்று பின்னர் தம்மையும் அழித்துக் கொண்ட மூன்று தீவிரவாதிகள் வந்தது கறுப்புநிற ஃபோக்ஸ்வாகனில்- வந்த நேரம் வெள்ளியிரவு 9.40 மணி.> மூன்று மணி நேரம் பட்டக்லான் இசை அரங்கத்தில் கண்மூடித் தனமாக நடத்திய தாக்குதலின் விளைவு, 89 அப்பவி மக்களின் உயிரிழப்பு. 99 பேர் குத்துயிரும் கொலையுயிருமாகக் கிடந்தனர்.
அந்த வாகனம், நடைபெற்ற கொடூரங்களுக்கு மௌனமான ஒரு சாட்சியாக, அனாதரவாக அரங்கில் வெளியே இருந்தது.
‘எல்லாம் முடிய’ ஆன மூன்று மணி நேரத்தில் நடந்தது என்ன?
“அந்த இடம் ஒரு கசாப்புக் கடை” போலக் காட்சியளித்தது என்கிறார் தப்பிப் பிழைத்த பிரிட்டிஷ் பிரஜை மைக்கேல் ஓ'கானர்
உறைந்துபோன ரத்ததின் மீது கவனமாக நடக்க வேண்டியிருந்தது, பல இடங்களில் ஒரு செ.மீ அளவுக்கு ரத்தம் உறைந்திருந்தது என்கிறார் ஒ’கானர். அராஜகம், அதிர்ச்சி, அஞ்சலி அரங்கினுள் நடைபெற்ற அராஜகம் குறித்த தகவல்கள், ஆதாரங்கள் போன்றவற்றை மிக மிக நுணுக்கமாக சேகரிக்கும் நடவடிக்கையில் பாரிஸின் சட்டவாதிகள் இறங்கியுள்ளனர்.

அதன் நோக்கம், மூன்று மணி நேரத் தாக்குதலின்போது உள்ளே நடந்தது என்ன? என்பதை அறிந்து கொள்வதே.தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் பகுதியளவில் சில தகவல்களைத் தரக்கூடும்
‘ஈகிள்ஸ் ஆஃப் தெ டெத் மெட்டல்’ எனும் அமெரிக்க இசைக்குழு தமது கச்சேரியை ஆரம்பித்து சுமார் 30-45 நிமிடங்கள் கழிந்திருந்த வேளையில், கொலை நோக்கத்துடன் கூடிய இந்த மூவர் குழு இரவு 9.40 மணிக்கு அரங்கின் முக்கிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றனர்.
உடனடியாக கண்ணில் கண்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர். முதல் பலிகள் வெளியே இருந்த மதுபானக் கடையில் இடம்பெற்றன


முதலில் பலியானவர்கள், அந்த இசை அரங்கத்துக்கு வெளியே மதுபானம் பரிமாறப்படும் இடத்தில் நின்றவர்களே. பின்னர் அரங்கினுள் நுழைந்த கொலையாளிகள் சரமாரியாகச் சுடத் தொடங்கினர்.
அரங்கின் கதவருகில் இருந்த பாதை எங்கும் சடலங்கள் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
கிரிகொரி, தாமஸ், நிக்கலஸ் ஆகிய மூவரும் அதிர்ஷ்டவசமாக பிழைத்தனர். பின்னர் கண்டதை ‘லிபரேசியான்’ பத்திரிகையிடம் தெரிவித்தனர்.
அவர்கள் மூவரும் அரங்கின் மாடியில் இருந்ததால் தப்பித்துள்ளனர்.
‘காற்றில் உமி பறப்பது போல’ மக்கள் தப்பித்து ஓடுவதைக் கண்டோம் என அவர்கள் சொல்கிறார்கள் தாக்குதலில் தப்பித்த சிலர் >தப்பித்த மற்றொருவரான ஃபாஹ்மி, அந்த இசை அரங்கின் கீழ் பகுதியில் தாக்குதல் நடைபெற்றபோது இருந்துள்ளார்.ஏதோ வெளியே பட்டாசு வெடிக்கிறது என்று முதலில் நினைத்துள்ளார்.
ஆனால் திரும்பிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. கச்சேரி கேட்கவந்த ஒருவரின் கண்ணில் குண்டு பாய்ந்துள்ளது கண்டதும் ஆடிப் போய்விட்டார். இதை அவர் ‘லிபரேசியான்’ பத்திரிகைக்கு சொல்லியுள்ளார்.
பலர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தரையில் படுத்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது ஈவு இரக்கமின்றி துப்பாக்கிச் சூடுகள்.
அந்த மூன்று கொலையாளிகளில் ஒருவர் மாடிக்கு ஏறிச் சென்று தனது வெறியாட்டத்தை நடத்தினார் என சம்பவத்தைக் கண்ட சிலர் கூறுகிறார்கள். நூலிழையில் உயிர் பிழைத்தவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் காவல்துறையினர் >இந்த வெறியாட்டம், கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் அரங்கில் இருந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர் அனைவரையும் அவசர நேரங்களில் வெளியேறும் வாயில்வழியாகத் வெளியேற தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு கூவியுள்ளார்.
அந்த வாயில் வழியாக பலர் வெளியேறினாலும், சிலர் மோசமாக காயமடைந்திருந்தனர். அவர்களின் வேதனையை அருகாமையிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்தவர் தனது கைத்தொலைபேசியில் படம் எடுத்துள்ளார்.
யூரோப் 1 எனும் பிரெஞ்ச் வானொலியின் செய்தியாளர் ஜூலியன் பியே, தாக்குதல் நடைபெற்ற சமயம் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற மேடைக்கு முன்னர் பத்து நிமிடங்கள் விழுந்து கிடந்துள்ளார்.< பலரின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது >கொலையாளிகள் தமது துப்பாக்கிகளில் குண்டுகளை மீண்டும் நிரப்பும் சமயத்தில் கிடைத்த இடைவெளியில், சுமார் பத்து பேர் அடங்கிய குழுவொன்றை மேடையில் குதித்து தப்பித்து வெளியேற ஊக்குவித்துள்ளார்.
“ஒரு சிறிய அறையில் நாங்கள் தஞ்சம் புகுந்தோம், ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் அங்கு சிக்கிக் கொண்டோம்” என்றார் ஜூலியன் பியே.
அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தபோது, அவசர வாயில் வழியாக அவர்கள் வெளியேறியுள்ளனர். அப்போது மிகவும் மோசமாக காயமடைந்த பெண் ஒருவரை பியே சுமந்துகொண்டு வெளியேறியுள்ளார்.
அரங்கிலிருந்த மேலும் 50 பேர் கூரைப் பகுதிக்கு சென்று, அங்கே காவல் துறையினரின் நடவடிக்கை முடியும் வரை இரண்டு மணி நேரம் ஒளிந்திருந்து பின்னர் மீட்கப்பட்டனர் என கிரிகொரி, தாமஸ், நிக்கலஸ் ஆகியோர் கூறுகிறார்கள். இசையைக் கேட்கச் சென்ற பல இறந்து போயினர் >ஆனால் பரிதாபகரமாக, கச்சேரி கேட்கச் சென்ற பலருக்கு வெளியேற வாய்ப்பு கிடைக்கவில்லை. பலர் சடலங்களாயினர், சிலர் சடலங்களுக்கு இடையே கிடந்து பின்னர் வெளியே வந்துள்ளனர்.
“எனது தோழியை கீழே தள்ளி, அவர் மீது நான் கிடந்தேன்” என்கிறார் ஒ’கானர். அங்கே ஒருவர் மீது ஒருவர் உருண்டு பிரண்டு தாக்குபிடிக்கும் சூழலே இருந்தது எனவும் அவர் கூறுகிறார்.
பலர் மயக்கமாக இருந்தார்களா அல்லது இறந்து கிடந்தார்களா எனத் தெரியாத ஒரு நிலை இருந்தது என்கிறார் அவர்.
அவர் தனது பெண் தோழியிடம் சொன்ன ஒரு விஷயம், “ நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்பதே. வேறு என்ன தன்னால் செய்ய முடியும் என்கிறார் ஒ’கானர்.
காயப்பட்டவர்களின் நிலையோ மிகவும் மோசமாக இருந்துள்ளது. அவர்களால் முனங்கக் கூட முடியவில்லை. அவர்களின் வாயை அடுத்தவர்கள் அடைத்துவிட்டனர். அணைந்த உயிர்களுக்காக ஏற்றப்பட்ட தீபங்கள் >ஓசை கேட்டால் துப்பாக்கிச் சூடு, அப்படியான சூழலே அந்த மூன்று மணி நேரமும் அரங்கில் நிலவியது என பிபிசியிடம் தெரிவித்தார் தெரீசா சீட்.
இறுக்கமான அமைதி ஏற்பட்ட பிறகு காவல் துறையினர் வந்தனர் எனவும் கூறுகிறார் தெரீசா.
“கதவு மெல்லத் திறந்தது, யார் வருகிறார்கள் என்று தெரியவில்லை, டார்ச் விளக்குகள், ஒளிப் பாய்ச்சல்கள் பொலீசார் வந்துவிட்டனர் என்பது தெரிந்தது” என்றார் தெரீசா.
குண்டு துளைக்காத கவச உடைகளை அணிந்து வந்த காவல் துறையினர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. உள்ளிருந்தவர்கள் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, அரங்கின் மாடிப் பகுதியை நோக்கி தமது துப்பாக்கிகளை குறி வைத்துள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர் >அங்கே சில பயங்கரவாதிகள் இருந்துள்ளனர். பின்னர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுள்ளன. அதில் காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டதில் கொலையாளி அணிந்திருந்த தற்கொலை அங்கி வெடித்ததில் அந்த நபர் கொல்லப்பட்டார்.
இதர இரு கொலையாளிகள் தம்மைத் தாமே வெடித்து சிதறினர் என பாரிஸின் அரச தலைமை வழக்கறிஞர் கூறுகிறார்.
பின்னர் காவல்துறையினர் தப்பிப் பிழைத்தவர்களை முடிந்தால் கைகளை ஆட்டச் சொல்லியுள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்டு விட்டோம் எனும் நிம்மதி ஏற்பட்டது என்கிறார் ஒ’கானர்.
அந்த முற்றுகைத் தாக்குதல் முடிந்துவிட்டது என்றாலும், மோசமாக காயமடைந்தவர்களை பிழைக்க வைக்கும் பெரிய பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது. bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக