சனி, 28 நவம்பர், 2015

விஜயதாரணி மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு. ...ஈவிகேஸ் ஆதரவாளர் புகார்.....ஜாதியை இழுத்து பேசினார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பைச் சேர்ந்த தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் துணை தலைவர் மனோகரி, சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி மற்றும் அவரது ஆதரவாளர்களான சாந்தா சீனு, மானசா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். இதன் பேரில் விஜயதாரணி உள்ளிட்ட 3 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார் கொடுத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோகரி, சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தலித்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் இவர்கள் ஜாதியை அவமானப்படுத்தி எங்களை கேவலப்படுத்துகிறார்கள். இந்த அம்மாவுக்கு (விஜயதாரணி) மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருப்பதற்கு தகுதியே கிடையாது.
யார் கூப்பிட்டாலும் போகக் கூடாது. யாரிடமும் பேசக் கூடாது. நான் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும் என்கிறார். மேலும் சில வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த என்னை அடிக்க பாய்ந்தார். சாகடித்துப் போட்டுவேன் என்று மிரட்டினார்.

பொதுவாக சாதியை பற்றி பேசக் கூடாது. அவர்கள் சாதியைப் பற்றி பேசியதால் புகார் செய்தேன் என்றார்.
முன்னதாக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதாரணியை இழிவாக பேசியதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரவியம், பொன்.பாண்டியன், பிரான்லின் ஆகிய 3 பேர் மீது சென்னை அண்ணாசாலை காவல்நிலையத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் இந்திய குற்றவியல் சட்டத்தின் 354, 294 பி, 323, 506 உட்பிரிவில் 1, 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகிளா காங்கிரஸை சேர்ந்த சாந்தா சீனு இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மோதலுக்கு காரணம் என்ன?>கடந்த 19ஆம் தேதி சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதாகவும், இதனையொட்டி அவர்களது ஆதரவாளர்களுக்கும், இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் மோதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இளங்கோவனிடம் நியாயம் கேட்க வெள்ளிக்கிழமை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றபோது, அவர் தம்மை தரக்குறைவாக பேசியதாகவும், குடும்பத்தாரைப் பற்றி மிகக் கேவலமாக பேசியதாகவும் விஜயதாரணி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெளியேற்றும்வரை ஓயப்போவதில்லை. இதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்றும் கூறியுள்ள விஜயதாரணி, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சோனியா மற்றும் ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார்..nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக