ஞாயிறு, 11 அக்டோபர், 2015

ஆம் ஆத்மியின் உட்கட்சி அரசியலுக்கு பலிகடா ஆக்கப்பட்டேன்’ பதவி பறிக்கப்பட்ட டெல்லி மந்திரி தகவல்

ஆம் ஆத்மியின் உட்கட்சி அரசியலுக்கு பலிகடா ஆக்கப்பட்டு உள்ளதாக டெல்லி முன்னாள் உணவுத்துறை மந்திரி ஆசிம் அகமது கான் கூறியுள்ளார்.அதிரடி நீக்கம்
டெல்லி மாநில சுற்றுச்சூழல் மற்றும் உணவுத்துறை மந்திரியாக இருந்தவர் ஆசிம் அகமது கான். இவர் தனது தொகுதியில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதற்காக, அதன் உரிமையாளரிடம் இருந்து ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இது குறித்த ஒலி நாடா (ஆடியோ டேப்) உள்ளிட்ட ஆதாரங்கள் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அவர், ஆசிம் கானை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். இந்த ஆடியோ டேப்பை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காட்டிய கெஜ்ரிவால், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

கொலை மிரட்டல் இந்த நிலையில் கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுகளை ஆசிம் கான் மறுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சி அரசியலுக்கு நான் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளேன். நான் இடைத்தரகருடன் பேசுவதாக ஒலிபரப்பான டேப்பில் எதிர்முனையில் பேசியது கட்சியின் சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் சகீல் அகமது. அவர் கட்டிட உரிமையாளர் அல்ல’ என்றார்.
நேற்று (நேற்று முன்தினம்) முதல் தனக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது என்று கூறிய ஆசிம் கான், இந்த விவகாரம் குறித்து மேலும் பல ரகசியங்களை ஓரிரு தினங்களில் வெளியிடுவேன் என்றும் கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேச உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இது குறித்து டுவிட்டர் வலைத்தளத்தில் அவர் கூறுகையில், ‘நாங்கள் ஏன் அரசியலுக்கு வந்துள்ளோம் என்பதை நினைவுபடுத்துவதற்காகவும், ஆசிம் கான் சம்பவத்தை போல மேலும் ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது என்று எச்சரிப்பதற்காகவும், நாளை (இன்று) மாலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நான் சந்திக்க உள்ளேன்’ என்று தகவல் வெளியிட்டு உள்ளார்.dailythanthi.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக