புதன், 7 அக்டோபர், 2015

பட்டேல்களின் இட ஒதுக்கீடு போராட்டம் சமுக நீதிக்கு எதிரான போராட்டம்தான்! பார்பன உயர்ஜாதி ஆதரவுடன் குஜராத்தில்....

இட ஒதுக்கீட்டினால் வாழ்விழந்த பட்டேல் பணக்காரர்கள் - பார்ப்பனிய தந்திரம்இந்து மதவெறிக் கலவரங்களுக்காக இழிபுகழ் பெற்ற குஜராத்தில் ஹர்திக் படேல் என்ற 22 வயது இளைஞனின் தலைமையில் ஆகஸ்டு மத்தியில் இடவொதுக்கீடு கோரித் துவங்கிய போராட்டம் இலட்சக்கணக்கானவர்களின் பங்கேற்போடு துவங்கி சில பத்து பேர்கள் கலந்து கொண்ட மூத்திரச் சந்து கூட்டம் ஒன்றோடு நிறைவு பெற்றுள்ளது.
படேல் மற்றும் படேல்களின் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் குஜராத் மாநிலமே குலுங்கியதாக முதலாளித்துவ ஊடகங்கள் தெரிவித்தன. தமிழ் நாட்டின் இடஒதுக்கீடு அரசியல் போராளிகளோ “பெரியாரின் சிரிப்பொலி மோடியின் குஜராத்திலேயே கேட்கிறது பாருங்கள்” என்று பெருமையாக காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள். அகில இந்திய ஊடகங்களோ, ஹர்திக் படேலுக்கு “மோடி விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப வந்த புதிய தலைவராக” ஞானஸ்நானம் செய்வித்தன.

2002-ம் ஆண்டுக் கலரவத்தில் மோடி ‘சாதித்துக்’ காட்டியதற்குப் பின் ஹர்திக் படேல் தான் பெரிய கும்பலைத் திரட்டிக் காட்டியுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆகஸ்டு (2015) மாதம் 25-ம் தேதி அகமதாபாத்தில் ஹர்திக் படேல் நடத்திய ‘புரட்சிப் பேரணியில்’ சுமார் ஐந்து லட்சம் படேல்கள் கலந்து கொண்டனர். பேரணிக்குப் பின் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுக்கவே, போலீசார் பலப்பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைத்தனர்.
அகமதாபாத் பேரணியைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிக்கபட்டன; ஏ.டி.எம் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன; இதர அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன – வன்முறைச் சம்பவங்களால் ஏற்பட்ட சேதம் அல்லது இழப்பின் மதிப்பு நூறு கோடிக்கும் மேல் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பெருகி வரும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போக்குவரத்து வசதி ரத்து செய்யப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் கலவரக்காரர்களால் தகவல் பரிமாறப்பட்டு அதன் மூலம் வன்முறை பரவுவதைத் தடுக்க கைப்பேசி இணையம் முடக்கப்பட்டது.
இலட்சத்தில் ஆரம்பித்து பத்திருபதில் முடிந்த போராட்டம்
இலட்சத்தில் ஆரம்பித்து பத்திருபதில் முடிந்த போராட்டம்
உச்சகட்டமாக படேல்கள் ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்திய பேரணியில் நடந்த கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுமார் 17 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலத்தின் சிறு மற்றும் குறுந் தொழில்களைக் கையில் வைத்துள்ள படேல்கள், பொருளாதார ரீதியில் தமது எதிர்ப்பைக் காட்ட உள்ளூர் வங்கிகளில் தாம் செய்திருந்த முதலீடுகளைத் திரும்ப பெற்றனர். செப்டெம்பரில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட மோடியின் முன்னிலையில் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் அமெரிக்க வாழ் படேல் சாதியினர்.
எனினும், இந்த ஆரம்பகட்ட ஆரவாரங்கள் ஒருவழியாய் ஓய்ந்து பல ஆயிரங்களில் திரண்ட கூட்டம் மெல்ல சில ஆயிரங்களாக குறைந்து, பின் சில நூறாக சுருங்கி கடைசியில் ஹர்திக் படேல் அறிவித்திருந்த ஏக்தா யாத்ரா பேரணியில் சுமார் ஐம்பதிற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். தடையை மீறி ஊர்வலத்திற்கு ஒழுங்கு செய்ததாக ஹர்திக் படேலை போலீசார் கைது செய்ய முனைந்த போது, ஹர்திக் படேல் பிக்பாக்கெட் குற்றவாளியைப் போல் தெரு வழியே ஓடித் தப்பும் நிலை உருவானது. ஒருவழியாக பெரும் கலகமாக சித்தரிக்கப்பட்ட படேல் இடவொதுக்கீடு போராட்டம் இறுதியில் நகைப்பிற்கிடமான முடிவை எட்டியது.
எனினும், இந்தப் போராட்டங்கள் எதைச் சாதிப்பதற்காக தூண்டி விடப்பட்டதோ அந்த நோக்கத்தை ஏறக்குறைய நிறைவேற்றி விட்டது என்பதை தற்போது வெளியாகி வரும் செய்திகளில் இருந்து அறிய முடியும். அந்தச் செய்திகளை நாம் பார்ப்பதற்கு முன், படேல்களின் கோரிக்கைகள் என்ன? அதன் உண்மையான பின்னணி என்ன? உண்மையில், குஜராத்தில் கேட்பது பெரியாரின் சிரிப்பொலி தானா? என்று பார்க்கலாம்.

இட ஒதுக்கீட்டினால் வாழ்விழந்த பட்டேல் பணக்காரர்கள் – பார்ப்பனிய தந்திரம்
படேல்கள் – ஒரு சுருக்கமான அறிமுகம்!
லேவா, அஞ்சனா மற்றும் கன்பி அல்லது கடவா ஆகிய மூன்று உட்பிரிவுகளைக் கொண்டது படேல் சாதி. பெரும்பாலான சாதிகளின் வரலாற்றைப் போல படேல் சாதி இன்றுள்ள இதே வடிவத்தோடும், சாதிய அடையாளத்தோடும் காலங்காலமாக இருக்கவில்லை. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தின் போது தான் தனித்தனி சாதிகளாக அறியப்பட்ட இம்மூன்று பிரிவினரும் ஒரே சாதியாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். அப்போது ‘படேல்’ என்பது சாதியின் பெயராக அல்லாமல், ஒரு பட்டப் பெயராகவே பயன்பட்டு வந்தது.
இன்றைக்கு இந்து ஒற்றுமையின் சின்னமாக சொல்லப்படும் குஜராத்தின் ஒற்றுமையை உண்மையிலேயே சாதித்தது இந்து மன்னர்கள் அல்ல – இசுலாமிய மொகலாயர்கள். மத்திய நூற்றாண்டில் சிறிய சமஸ்தானங்களாக பிளவுபட்டு தமக்குள் மோதிக் கிடந்த குஜராத்தை 1600-களில் கேதா நகரில் நிலை கொண்ட மொகலாயப் படை அமைதியை நிலைநாட்டியது. வரலாற்று ரீதியில் மேற்குலகோடு வணிக தொடர்பைப் பேணி வந்த குஜராத்தில் அமைதி நிலவ வேண்டியதன் முக்கியத்துவத்தை மொகலாயர்கள் உணர்ந்திருந்தனர். இந்தக் காலகட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட லேவா படேல்கள், இசுலாமிய ’ஆக்கிரமிப்பாளர்களை’ எதிர்த்து போராடி நேரத்தை வீணாக்காமல் தொழில்களில் ஈடுபட்டு தம்மை வளப்படுத்திக் கொண்டனர்.
மொகலாயர்களுக்கும் தேவைப்பட்ட தொழில் அமைதி அன்றைய அண்டை பிராந்திய ஹிந்து மன்னர்களுக்குத் தேவைப்படவில்லை. வளமான குஜராத்தை கொள்ளையடிப்பதற்கான இலக்காக கொண்டனர் ஹிந்து மராத்தியர்கள். 1705-ம் ஆண்டு வாக்கில் மாராத்தியர்களின் கை ஓங்கி மொகலாயர்கள் குஜராத்திலிருந்து பின் வாங்கினர். மாராத்தியர்கள் தமது வருகையோடு மிகப் பிற்போக்கான நிலபிரபுத்துவ ஆட்சி முறையையும் கொண்டு வந்து சேர்த்தனர். மொத்த மாநிலமும் அதுவரை வணிகத்தின் மூலமும் விவசாயத்தின் மூலம் அடைந்திருந்த செழிப்பைச் சுரண்டித் தின்பதே ஹிந்து மராத்தியர்களின் நோக்கமாக இருந்தது. இதற்காக கீழ்மட்டத்தில் வரிவசூல் செய்யும் முறை ஒன்றை ஏற்படுத்தினர் – அதற்கு கன்பி மற்றும் லேவா சாதியினர் பொருத்தமான அடியாட்களாயினர்.
மோடிக்கு மட்டுமல்ல ஹர்திக்குக்கம் ஸ்பான்சர் பட்டேல்கள்தான்.
மோடிக்கு மட்டுமல்ல ஹர்திக்குக்கம் ஸ்பான்சர் பட்டேல்கள்தான்.
இவ்வாறு வரிவசூலில் ஈடுபட்ட கன்பி மற்றும் லேவா சாதியினருக்கு அளிக்கப்பட்ட பட்டம் – மட்டாதர். இதே சாதிகளைச் சேர்ந்த நிலவுடைமையாளர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் – பட்டிதார் (பட்டி – நிலம் (அ) நிலத்தின் அளவை). பின்னர் ஆங்கிலேயர்கள் மராத்தியர்களை விரட்டியடித்த பின்னரும் கீழ்மட்டத்தில் இருந்த நிர்வாக அலகுகளை அப்படியே பயன்படுத்திக் கொண்டனர். ஆக்கிரமிப்பாளர்களிடம் தமது விசுவாசத்தை அதிகளவு நிரூபித்த படேல்களுக்கு தேசாய், அமீன் போன்ற பட்டங்களை வெள்ளையர்கள் வாரி வழங்கினர்.
காலை நக்கியே ’முன்னேற’ முடியும் என்பதற்கு சிறந்த இலக்கணம் படேல் சாதியினர். இன்றைக்கு படேல் சாதியினரின் தொழில் வளர்ச்சி திகைக்க வைக்கும் அளவுக்கு உள்ளதற்குப் பின் உள்ள வரலாற்றின் தோற்றம் இது தான். இன்றைய தேதியில் குஜராத் மக்கள் தொகையில் 15 சதவீதம் உள்ள படேல் சாதியின் பதவி விகிதங்களை கவனியுங்கள். 7 பேர் கேபினெட் அமைச்சர்கள். குஜராத்தின் 120 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் படேல்கள். தவிர குஜராத்தின் வைர வியாபாரம், நெசவுத் தொழில் மற்றும் பல்வேறு சிறு மற்றும் குறுந் தொழில்கள் முற்றிலும் படேல்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இது போக கிராமப்புறங்களின் நிலவுடைமையையும் பணக்கார மற்றும் நடுத்தர பட்டேல் விவசாயிகள் கட்டுப்படுத்துகின்றனர்.
அமெரிக்கா என்ற தேசம் வல்லரசாக அமையத் துவங்கிய காலம் தொட்டே இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயரத் துவங்கிய படேல்களின் கட்டுப்பாட்டில் அமெரிக்காவின் 30 சதவீத உணவு விடுதிகள் உள்ளன. இங்கிலாந்தின் 50 சதவீத நடுத்தர மளிகைக்கடைகளுக்கு படேல்கள் சொந்தக்காரர்கள். முதல் தலைமுறையாக சிறு தொழில் முனைவோராக அமெரிக்காவுக்குச் சென்ற படேல்களின் இன்றைய வாரிசுகள் சிலிக்கான் பள்ளத்தாக்கின் பல நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் அமர்ந்திருப்பதோடு தமது சாதியைச் சேர்ந்தவர்களை வளர்த்தும் விடுகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் சுமார் 1,45,000 படேல்கள் இருக்கிறார்கள்.
பட்டேலை வைத்து திசை திருப்பும் ஆளும் வர்க்கம்
பட்டேலை வைத்து திசை திருப்பும் ஆளும் வர்க்கம்
குஜராத்தின் பனியா சாதிகளில் செல்வாக்கான படேல்கள்தான் இந்துமதவெறியர்களின் முதன்மையான சமூக அடிப்படை. காங்கிரசின் செல்வாக்கில் இருந்த குஜராத்தில் இன்று பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களும் பட்டேல்கள்தான். இந்துமதவெறியர்களின் கலவரங்களில் குறிப்பிடத்தக்க பங்கையும் இவர்கள் அளித்தனர். இசுலாமிய வணிகர்கள் மற்றும் குறு முதலாளிகளோடு தொழில் ரீதியான போட்டியும் இவர்களை இயல்பாக இந்துமதவெறியர் பக்கம் சேர வைத்தது. மேலும் குஜராத்தில் மட்டுமல்ல வட இந்தியாவில் நடந்த பல்வேறு இந்து-முஸ்லீம் ‘கலவரங்களின்’ இறுதியில் இசுலாமியர்கள் தமது பராம்பரிய வணிக உரிமைகளை சொத்துக்களை இழந்ததை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
படேல்களின் இடவொதுக்கீட்டு ‘காதல்’ பின்னணியைப் புரிந்து கொள்வது அத்தனை சிரமமானது அல்ல. அவர்கள் முன்வைத்த கோரிக்கை முழக்கத்தின் முதல் பாதியை மட்டும் ஊதிப் பெருக்கிக் காட்டிய பார்ப்பன மற்றும் முதலாளிய ஊடகங்கள், அந்த முழக்கத்தின் பின் பகுதியை திட்டமிட்டு மறைத்தனர். “படேல்களுக்கு இடவொதுக்கீடு வழங்கு” என்று துவங்கும் அந்தக் கோரிக்கை, “எங்களுக்கு இல்லாவிட்டால் யாரும் இடவொதுக்கீடு வழங்காதே” என்று முடிவுறுகிறது. ஹர்திக் படேலின் ஆரம்ப கால பேரணி மற்றும் ஆர்பாட்ட நிகழ்ச்சிகளில் காவிக் கொடிகளோடும், பாரதிய ஜனதா கொடிகளோடும் இந்துத்துவ அமைப்புகளின் கொடிகளோடு தொண்டர்கள் கலந்து கொண்டதும் – இந்துத்துவ கும்பலின் இடவொதுக்கீட்டுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடும், தற்போது இடவொதுக்கீடு குறித்து நாடெங்கிலும் பெரியளவில் “விவாதம்” ஒன்று நடந்து வருவதாக சொல்லப்படுவதும் தற்செயலானவைகள் அல்ல.
ஆகஸ்டு 25-ம் தேதி அகமதாபாத்தில் ஹர்திக் நடத்திய பேரணி முடிவதற்குள்ளாகவே, வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் வேறு ஒரு பிரச்சாரம் ’வைரலாக’ (திடீர் பரபரப்பு) கொண்டு செல்லப்பட்டது. பிரதமர் மோடிக்கு விண்ணப்பம் என்று துவங்கிய அந்த பகிர்வில் ”இடவொதுக்கீடு என்ற முறை இருப்பதால் தானே எல்லோரும் அதைக் கோரி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்? நாட்டின் முன்னேற்றத்திற்கும், திறமைக்கும், பொது அமைதிக்கும் எதிரான இந்த முறையையே ஒழித்து விட வேண்டும் என்ற கோரிக்கை திட்டமிட்டு பரப்பப்பட்ட்து.
இட ஒதுக்கீடு கொடு இல்லாட்டி எடு
இட ஒதுக்கீடு கொடு இல்லாட்டி எடு
சொல்லி வைத்தாற் போல் அடுத்தடுத்து வேறு சில நிகழ்வுகளும் நடந்தேறின. குஜராத் மாநில பிராமண சமாஜம் என்ற அமைப்பு உடனடியாக தமக்குள் உள்ள 400 உட்பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களோடு கலந்தாலோசித்து பிராமணர்களுக்கும் பொருளாதார ரீதியிலான இடவொதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பேரணி ஒன்றை நடத்தினர். அதோடு, படேல்களின் போராட்டங்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். பார்ப்பன சங்கம் நடத்திய பேரணியைத் தொடர்ந்து ரகுவன்ஷி என்ற இன்னொரு ‘உயர்’ சாதியைச் சேர்ந்த சங்கமும் இடவொதுக்கீடு கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளது.
‘மேல்’ சாதியினரின் இடவொதுக்கீடு கோரிக்கையை அடுத்து குஜராத் மற்றும் இந்தி பேசும் பிற வட மாநிலங்களைச் சேர்ந்த, ஏற்கனவே இடவொதுக்கீட்டின் பலன்களை அனுபவித்து வரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் படேல்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கத் துவங்கினர். இடவொதுக்கீடு கோரும் போராட்டங்களுக்கு மிகையான முக்கியத்துவம் அளித்த முதலாளிய மற்றும் பார்ப்பன ஊடகங்கள், நடப்பது ஒரு நாய்ச் சண்டை என்பது போன்ற தோற்றத்தை ஒருபுறம் ஏற்படுத்தினர்.
பொருளாதார ரீதியிலான இடவொதுக்கீடு என்ற கோரிக்கையே இடவொதுக்கீட்டின் அடிப்படைகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் தான் முன்வைக்கப்படுகிறது. சமூக ரீதியில் பல்லாண்டுகளாக ஒதுக்கப்பட்டு அதன் விளைவாக பொருளாதாய வாழ்வு முடக்கப்பட்ட பிரிவினருக்கான தற்காலிக நிவாரணம் தான் இடவொதுக்கீடு. தட்டு பொறுக்கும் பார்ப்பனர்களும் பீயள்ளும் தலித்தும் பொருளாதார ரீதியில் ஒரே படித்தானவர்களாக இருக்கலாம் – ஆனால், இருவருக்கும் உள்ள சமூக அந்தஸ்தும், சமூக உறவுகளும், மேல்மட்ட தொடர்புகளும், முன்னேறும் வாய்ப்புகளும் சமமானதல்ல. தட்டு பொறுக்கும் பார்ப்பானுக்கு இடவொதுக்கீடு செய்வது என்பதன் பொருள் – அதன் அடித்தளத்தையே குலைப்பது தான்.
மேலும் இட ஒதுக்கீடு என்பதே பிற்படுத்தப்பட்ட சாதிகளின் முன்னேறிய பிரிவினரின் அரசியல் வேட்கையைத் தணிக்க செய்யப்பட்ட நடவடிக்கை. கூடவே உலகமயமாக்க நாட்களில் சொல்லிக் கொள்ளப்படும் இந்த இட ஒதுக்கீடும் கிடைக்காத படி அரசு மற்றும் பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இட ஒதுக்கீடு கேட்டு வட இந்தியாவில் நடக்கும் ஆதிக்க சாதி ‘போராட்டங்கள்’ அனைத்தும் மக்களின் பொருளாதாரக் கோரிக்கைகளை திசைதிருப்பும் வண்ணம் தயாரிக்கப்படுகின்றன.
பொருளாதார ரீதியில் இடவொதுக்கீடு வழங்க வேண்டும் என்ற “விவாதம்” பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதாக பார்ப்பன மற்றும் முதலாளிய ஊடகங்கள் பம்மாத்து செய்து கொண்டிருக்கும் போதே ஆர்.எஸ்.எஸ் முகாமிலிருந்து அதன் உண்மையான குரல் வெளிப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான பாஞ்சஜன்யாவுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், “குடிமைச் சமூகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டி ஒன்றை அமைத்து, இடவொதுக்கீட்டு முறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இடவொதுக்கீட்டு முறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதன் பின்னுள்ள பார்ப்பனிய தந்திரம் என்னவென்பதை யாரும் விளக்காமலேயே நாம் புரிந்து கொள்ள முடியும் – “குடிமைச் சமுகத்தின் அங்கத்தினர்” என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறான கமிட்டி ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் மத்திய பாரதிய ஜனதா அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்படும் குடிமைச் சமூகத்தின் அங்கத்தினர்கள் யாராக இருப்பார்கள் என்பதை நாம் விளக்கத் தேவையில்லை.
அம்பேத்கர், பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளும், பிற ஜனநாயக சக்திகளும் பல்லாண்டுகளாக போராடிப் பெற்ற இடவொதுக்கீட்டு முறையை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, மக்களுக்கு பதில் சொல்லும் கடமை இல்லாத – இந்துத்துவ தலைமை பீடத்தால் பொறுக்கியெடுக்கப்பட்ட “குடிமைச் சமூக பிரதிநிதிகள்” என்கிற இந்துத்துவ அடியாள் கும்பலைக் கொண்டு ஒழித்துக் கட்டும் முயற்சி தான் இது. இந்தி பேசும் மாநிலங்களின் ஆதிக்க சாதிகளை தொடர்ந்து செல்வாக்கில் வைத்திருக்க ஆர்.எஸ்.எஸ் செய்யும் முயற்சி இது.
பட்டேல்களின் போராட்டம் - ஆர்.எஸ்.எஸ்-இன் சதித் திட்டம்
பட்டேல்களின் போராட்டம் – ஆர்.எஸ்.எஸ்-இன் சதித் திட்டம்
ஹர்திக் படேலின் திடீர் எழுச்சியும், உயர் சாதியினரின் பொருளாதார ரீதியிலான இடவொதுக்கீடு கோரிக்கைகளும், ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனிய கும்பலின் இடவொதுக்கீட்டுக்கு எதிரான கோரிக்கைகளும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொள்ளும் இடம் இது தான். மகாபாரத கர்ணனுக்கு தேரோட்ட முன்வந்த சல்லியனின் ஆத்மார்த்தமான விருப்பம் – கர்ணன் ஒழிந்து போக வேண்டும் என்பது தான். அதே பழைய பார்ப்பன தந்திரத்தை பின்பற்றி இடவொதுக்கீட்டுக்கு ஆதரவாக பேசும் தொணியிலேயே அதற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது இந்துத்துவ கும்பல்.
இடவொதுக்கீடு ஒரு தற்காலிக நிவாரணம், மக்களுக்கு முழு விடுதலை அல்ல என்றாலும், அது ஒரு ஜனநாயக கோரிக்கை என்ற முறையில் கூட நீடிப்பதை இந்துமதவெறியர்கள் விரும்பவில்லை. இடவொதுக்கீடு என்ற ஒரே அம்சத்தை தமது அரசியலின் அடித்தளமாக கொண்டிருக்கும் சமூக நீதிக் கட்சிகளோ படேல்களின் போராட்டத்திற்கு பின் உள்ள பார்ப்பன தந்திரத்தை காணும் திறனற்றவர்களாய் உள்ளனர். காரணம் இவர்களும் ஏனைய அரசியல் கொள்கைகளில் குறிப்பாக மறுகாலனியாக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்பதால் இந்த வேறுபாட்டிற்கு அடிப்படை இல்லை.
இட ஒதுக்கீட்டின் பெயரில் நடக்கும் போராட்டங்கள் மற்றும் விவாதத்தின் போது, மோடி அரசு முழு இந்தியாவையும் தினுசு தினுசாக விற்று வருகிறது. நில அபகரிப்பு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டுக் கம்பள வரவேற்பு என்பதோடு, இந்துத்துவ செயல்திட்டங்களான இந்தி-சம்ஸ்கிருத திணிப்பு, கல்வி நிறுவனங்களை காவி மயமாக்குதல் போன்றவற்றையும் அமல்படுத்தி வருகின்றது.
இத்தகைய பிரச்சினைகளிலிருந்து நாட்டு மக்களை திசைதிருப்பும் வண்ணமாகவே பட்டேல்களை முன்வைத்து நடந்த இந்த போராட்டம் உதவியிருக்கிறது.
எனவே இதை வெறும் இட ஒதுக்கீட்டு பிரச்சினை என்று புரிந்து கொள்ளாமல் மோடி அரசின் பார்ப்பனிய மற்றும் பொருளாதார தாக்குதல்களோடு இணைத்து மக்கள் அரங்கில் கொண்டு செல்லப்பட வேண்டும்.
–    தமிழரசன்வினவு.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக