செவ்வாய், 20 அக்டோபர், 2015

சிறுமியரை கற்பழித்தால் தூக்கு தண்டனை? ஆம் ஆத்மி அறிவிப்பு!

புதுடில்லி:சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, துாக்கு அல்லது ஆயுள் தண்டனை அளிக்கலாமா என ஆய்வு செய்ய, உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.அதிர்ச்சி அலை...டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு, இரண்டு பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.'டில்லி காவல் துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் தான், இதுபோன்ற சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. காவல் துறையை, டில்லி மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்' என, கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், டில்லி மாநில அமைச்சரவை கூட்டம், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது:சிறுமியரை பலாத்காரம் செய்வோருக்கு, துாக்கு அல்லது ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளலாமா என ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, டில்லி மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இளம் குற்றவாளிகளுக்கான வயது வரம்பை, 18லிருந்து, 15 ஆக குறைப்பது குறித்தும், இந்த குழு ஆய்வு செய்யும். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, இந்த குழுவின் தலைவராக இருப்பார். 15 நாட்களுக்குள் இந்த குழு,
அறிக்கையை அளிக்கும்.


ஆய்வு செய்யும்:


இதை ஆய்வு செய்து, சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும். மேலும், டில்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விஷயங்களை விசாரிக்க, ஒரு குழு அமைக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, டில்லி மாநில அரசு, பிரத்யேகமாக, சிறப்பு காவல் நிலையங்களை அமைப்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும். தாங்கள் கொடுத்த புகார்கள் மீது உள்ளூர் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, சம்பந்தப்பட்ட பெண்கள் கருதினால், சிறப்பு காவல் நிலையங்களை அவர்கள் அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக