சனி, 31 அக்டோபர், 2015

தேசிய விருதை திருப்பி கொடுக்கிறார் இயக்குனர் அருண்மொழி ..கோபன் கைதுக்கு எதிர்ப்பு..ஏழாவது மனிதன் திரைப்பட ....

சென்னை மது ஒழிப்பிற்காக "டாஸ்மாக்கை மூடு" என்ற பாடலை இயற்றி பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஏழாவது மனிதன் திரைப்படத்திற்காக தமக்கு அளிக்கப்பட்ட தேசிய விருதை திரும்பத் தருவதாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் அருண்மொழி. "மூடு டாஸ்மாக்கை..!" என மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை கையிலெடுத்துவரும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் அமைப்பான 'மக்கள் அதிகாரம் அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் ஒரு அம்சமாக   "மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு, இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சி சாகணும், எத்தனை தாலிகள் அறுக்கணும், மூடு டாஸ்மாக்கை மூடு"  எனும் பாடலை வெளியிட்டு,  அதை கலை வடிவத்தில், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதிநாடகமாக  நடத்தி வந்தார்கள்.


இந்நிலையில், இந்தப்  பாடலை இயற்றி பாடிய  திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை, இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் போலீசார் திடீரென கைது செய்து செய்தனர். இதனையடுத்து சென்னை கொண்டு வரப்பட்ட அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 'ஏழாவது மனிதன்' திரைப்படத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திரும்பத் தருவதாக அறிவித்துள்ளார் இயக்குநரும் நடிப்புத் துறை ஆசிரியருமான அருண்மொழி.

அருண்மொழியின் இந்த அறிவிப்பு, கோவன் கைதுக்கு தமிழக கலைஞர்களிடமிருந்து கிளம்பி உள்ள முதல் எதிர்ப்பாக உள்ளது. அருண்மொழியின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு எழுத்தாளர்களிடையே வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது.

கோவன் கைதுக்கு தமிழ்நாட்டுக் கலைஞர்களிடமிருந்து வரும் முதல் எதிர்ப்பு குரலாக இது உள்ளது என்று பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் தனது ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேப்போன்று கோவன் கைதுக்கு எதிரான போராட்டத்திற்கு இது ஒரு முன்னெடுப்பு என்றும் மேலும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மாட்டிறைச்சி தொடர்பான தாத்ரி விவகாரம், கன்னட எழுத்தாளர் கொல்லப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்தும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பலர் தங்களது விருதுகளை திரும்ப தருவதாக அறிவித்திருந்தனர். ஆனால் தமிழகத்தில் அப்படி எந்த எழுத்தாளர்களும் திருப்பி தருவதாக அறிவிக்க முன்வரவில்லையே என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், கோவன் கைது விவகாரத்தில் இயக்குநர் அருண்மொழி தனது எதிர்ப்பை அதே பாணியில் வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக