ஞாயிறு, 25 அக்டோபர், 2015

சாட்சியைக் கொல்லப்போவதாக மிரட்டும் சங்கராச்சாரி! மீண்டும் தூசி தட்டப்படும் சங்கரராமன் கொலைவழக்கு...

அப்பட்டமான ஒரு கொலை! வலுவான சாட்சிகள்! அனைத்தும் இருந்தும் செல்வாக்கு, பணம், அந்தஸ்துக்கு முன் எதுவும் செல்லுபடியாகவில்லை! துணிந்து நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முயற்சிக்கு நீதிமன்றத் தீர்ப்பு சவாலாக அமைந்தது. ஆனால், நீதியை நிலைநாட்ட அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு பிறழ்சாட்சி ரவிசுப்பிரமணியத்தின் மனுமூலம் வந்துள்ளது. பொய் சாட்சி கூறிய குற்றம் தன்னை உறுத்த உண்மையைச் சொல்ல முற்படும் ரவி சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், அந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக போலீஸ் அதிகாரி பிரேம்குமார் இருந்தார். அப்பொழுது என்னிடம் பேச வழக்கறிஞர்கள், போலீசார் என அனைவரும் பிரேம்குமார் மீது இருந்த மரியாதையால் பயந்தனர். அதனால், நான் சங்கரராமன் கொலை வழக்கில் அப்ருவராக மாறி ஜெயேந்திரர்தான் சங்கரராமனை அப்பு மூலமாக தீர்த்துக் கட்டினார். அதற்காக அவர் ரவுடிகளுக்கு பணம் கொடுத்தார் என சாட்சியம் அளித்தேன். ஜெயேந்திரர் சார்பாக சுமார் 20 வழக்கறிஞர்கள் என்னை குறுக்கு விசாரணை செய்தார்கள். பிரேம்குமார் கொடுத்த தெம்பால் உண்மையை தைரியமாக கோர்ட்டில் எடுத்து சொன்னேன். துரதிர்ஷ்டவசமாக பிரேம்குமார் அவரது பணியில் நெருக்கடிக்குள்ளானதோடு, திடீரென இறந்தும் போய்விட்டார். அதன் பிறகு நிலைமை தலைகீழானது.

நான் சிறைக்குப் போய் சுமார் 7 வருடம் கழித்து மறுபடியும் என்னை சாட்சியம் அளிக்க அழைத்தார்கள். அப்பொழுது சிறைத்துறை டி.அய்.ஜி.யாக இருந்தவர் ராமச்சந்திரன். அவர் ஜெயேந்திரருக்கு மிகவும் நெருக்கமானவர். ராமச்சந்திரனும் போலீஸ் ஏட்டு கண்ணன், ரவுடி கதிரவன் ஆகியோர் என்னை ஜெயேந்திரருக்கு எதிராக சாட்சி சொல்லாதே என மிரட்டினார்கள். அதிலும் கதிரவன், ராமச்சந்திரன் ஆதரவுடன் சிறைக்கு உள்ளே வந்து, எனதுஅறையில் வைத்து மிரட்டினான். நான் வேறு வழியில்லாமல் பிறழ் சாட்சியானேன். அதேபோல் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் என்னை பிறழ் சாட்சியாக்கினார்கள்.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உட்பட குற்றவாளிகள் அனைவரும் விடுதலையானார்கள். அதற்குப் பிறகு என்னை 2013ஆம் ஆண்டு ஜெயிலில் இருந்து விடுதலை செய்தார்கள். சங்கரராமன் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த தேவதாஸ் உட்பட அனைவரும் நீதியை வளைத்து விலை பேச, அதன் மூலம் ஜெயேந்திரர் பெற்ற விடுதலை என் மனதை உறுத்தியது. மறுபடியும் நடந்த உண்மைகளை நான் சொன்னால் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலாவது ஜெயேந்திரருக்கு தண்டனை கிடைக்கும் என யோசித்தேன். ஜெயேந்திரரின் எடுபிடிகளாக இருந்த ரவுடிகள் அப்பு, கதிரவன் ஆகியோர்மரணம் அடைந்துவிட்டார்கள்.

சங்கரராமன் வழக்கில் சங்கரமடத்திற்கு சாதகமாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர் தேவதாஸை போல் இல்லாமல் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் விஜயராஜி மிகவும் நேர்மையாகவும், துணிவுடனும் ஜெயேந்திரரின் பணத்திற்கு விலைபோகாமலும் செயல்படுகிறார்.

முதல்வர் அம்மாவின் ஆட்சியில் உண்மையை சொல்ல நினைக்கும் எனக்கு விஜயராஜி பாதுகாப்பாக இருப்பார் என்பதால்நான் உண்மையைச் சொல்ல முயன்றேன். அதை தெரிந்துகொண்ட ஜெயேந்திரரும், மடத்தில் செல்வாக்காக உள்ள சுந்தரேச அய்யரும், போலீஸ் கண்ணனும் என்னை மிரட்டினார்கள். கடந்த 8ஆம் தேதி ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் அரசு வழக்கறிஞர் விஜயராஜிடம் நான் எனது சாட்சியத்தை மாற்றிக் கூற விரும்புகிறேன் என ஒரு மனு கொடுத்தேன். அதை கவனித்த சங்கர மட மேலாளர் சுந்தரரேச அய்யர், உன்னை பெரியவா பார்க்கணும்னு சொல்றா மடத்துக்கு சாயங்காலம் வந்துட்டு போ என்றார். போகாவிட்டால் ரவுடிகளை அனுப்புவார்கள் என்பதால் அன்று மாலை ஆறரை மணிக்கு சங்கர மடத்திற்குச் சென்று ஜெயேந்திரரை சந்தித்தேன்.

நீ என்ன ராதகிருஷ்ணன் கேஸில் எனக்கெதிரா சாட்சி சொல்லப்போறியா? அந்த கவர்மெண்ட் வக்கீலுக்கிட்ட பெட்டிசன் கொடுத்தியா? எனக் கேட்டார். நான் ஆம் என்று சொன்னேன். உனக்கு சங்கரராமன் கதிதான் ஏற்படும். உன்ன குடும்பத்துடன் சேர்த்து ஒழித்து விடுவேன் என ஜெயேந்திரர் மிரட்டினார். அப்போது அவருடன் இருந்த சுந்தரேச அய்யர், பெரியவா ஜெயேந்திரரை பகைத்துக்கொண்டு இந்தியாவில் எங்கும் நீ இருக்க முடியாது. சென்ட்ரல் கவர்மெண்டே பெரியவாளின் ஆசிர்வாதத்தில்தான் இயங்குது என மிரட்டினார். அந்தநேரம் அங்கே வந்த போலீஸ் கண்ணன், இப்பதான் நான் ஓய்வு பெற்ற சிறைத்துறை டி.அய்.ஜி.யான ராமச்சந்திரனை பார்த்துவிட்டு வருகிறேன். அவர், சங்கரமடத்திற்குச் சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். ராமச்சந்திரனுக்கு ரவுடிகளையும், போலீசாரையும் நன்கு தெரியும். பெரியவாளுக்கு எதிராக சாட்சி சொன்னா, நீ க்ளோஸ் என மிரட்டினார் என்றார்.

மத்தியில்ஆளும் பா.ஜ.க.வுடன் நெருக்கமாக உள்ள ஜெயேந்திரர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறீர்களா என்று கேட்டதற்கு, அம்மா நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன். அவ்வளவுதான் என்று அச்சத்துடன் தன் உள்ளக் குமுறலைக் கொட்டியுள்ளார் ரவி சுப்பிரமணியம். அவரது அச்சம் அர்த்தமுள்ளது. காரணம், ஒரு தடவை ஜெயேந்திரர், 20 வயது பெண்ணை வன்புணர்ச்சி செய்ய வற்புறுத்த, அப்பெண் தப்பித்து வெளியில் ஓட, தன்கதை நாறிவிடும் என்று அதை அப்படியே அமுக்க, தனக்கு வேண்டிய ஆஸ்பத்திரி உரிமையாளர் மூலம் அடியாட்களை அனுப்பி அப்பெண்ணை லாரியேற்றிக் கொன்றவர். (ஆதாரம்: நக்கீரன் வெளியிட்ட ஜெயேந்திரர் வாழ்வும் வழக்கும்) எனவே, தமிழக முதல்வர், ரவி சுப்பிரமணியத்திற்கு பாதுகாப்பு அளித்து, உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா அழிந்துபோக வேண்டும் என்று யாகம் நடத்தியவர் அல்லவா ஜெயேந்திரர். அவருக்குப் பாடம் புகட்ட வேண்டிய கடமையும் முதல்வருக்கு உண்டு. மத்திய அரசின் நிர்பந்தத்திற்கு ஆட்படாமல், முன்னிலும் தீவிரமாய் வழக்கைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே தமிழக மக்கள் விருப்பம்   viduthalaidaily.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக