வெள்ளி, 16 அக்டோபர், 2015

பத்ரி சேஷாத்ரி: நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பவேண்டிய....

கடந்த இரண்டு ஆண்டுகளில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே என்ற இரு மராட்டியர்களும் மிகச் சமீபத்தில் கல்புர்கி என்ற கன்னட எழுத்தாளரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை இவர்களைக் கொன்றது யார் என்று துப்பு துலக்கப்படவில்லை. இவர்கள் எல்லாம் தங்களுடைய நாத்திக அல்லது மூடநம்பிக்கைக்கு எதிரான அல்லது இந்துமத விரோதக் கருத்துகளுக்காகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது இதில் தபோல்கர்தான் மிகத் தெளிவாக நாத்திகத்தை முன்வைத்து, மூடநம்பிக்கைக்கு எதிரான குரலைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறவர். இந்தியாவில் இம்மாதிரியான குரல்கள் இதற்குமுன்னும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் கோபராஜு ராமச்சந்திர ராவ் (கோரா), தமிழகத்தில் பெரியார், கேரளத்தில் ஆபிரஹாம் கோவூர் போன்றோர் மத மறுப்பு, நாத்திகம், மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
பெரியாரின் இயக்கம் தமிழக அரசியலையே ஆட்டம் காணச் செய்தது. கோரா, கோவூர் போன்றோர் அரசியல் தளத்தில் பெரிய மாறுதலைக் கொண்டுவரவில்லை. கோராவின் An Atheist with Gandhi என்ற சிறு நூல் சமீபத்தில் எனக்குப் படிக்கக் கிடைத்தது. மிக ஆச்சரியமான புத்தகம். அதைத் தொடர்ந்து அவருடைய வாழ்க்கை வரலாறு ஒன்றை வாங்கியிருக்கிறேன் (The Life and Times of Gora, Mark Lindley, Popular Prakashan, ISBN: 978-81-7991-457-1).
இன்றைய தேதியில் மதமும் மதவாதமும் வலுவாக இருப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் வருங்காலச் சமுதாயம் அறிவியலை ஆழ்ந்து கற்கும்போது, அனைத்து மதங்களுமே பொய்யானவை, மனிதர்களால் உருவாக்கப்பட்டவை, அவற்றின் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்ற கருத்து பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.
கோரா, கோவூர் போன்றவர்களின் உயிருக்கு வராத ஆபத்து, இன்று தபோல்கருக்கு என் வந்தது? இந்துத்துவ உதிரி இயக்கம் எதற்காவது இதில் பங்கு உள்ளதா? இது ஆராயப்படவேண்டிய ஒன்று. யார் இச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்படவேண்டும்.
கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் மூவரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது சிலருக்கு இன்று அரசியல் காரணங்களுக்காக ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அது உண்மையைக் கண்டறிவதற்கு உதவாது என்று நினைக்கிறேன்.
***
கோராவின் நாத்திகக் கருத்துகளை இவ்வாறு சாராம்சப்படுத்தலாம்: மதங்கள் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. அறிவியல்பூர்வமாகப் பார்க்கும்போது கடவுளுக்கான தேவை என்பது இல்லை. சூப்பர்நேச்சுரல் (அமானுஷ்யம்) என்று எதுவுமே இல்லை. மதங்களைத் தாண்டிய மனிதமே அவசியம். இந்துமதத்தின் சாதிக் கட்டுமானமும் தீண்டாமையும் ஒழிக்கப்படவேண்டும்.
இதையேதான் தமிழகத்தின் பெரியாரும் கூறினார். ஆனால் இருவரும் கூறும் முறைகளில் மிகப் பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது.

கோரா, கோவூர் ஆகியோரின் சில புத்தகங்களையாவது தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். முரட்டுத்தனமாக இல்லாமல், நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பவேண்டியது இன்றைய காலத்தில் அவசியமாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக