வெள்ளி, 16 அக்டோபர், 2015

சவுதி - ரத்தம் குடிக்கும் அல்லாவின் குழந்தைகள்

obama saudi leaderஇன்னும் எத்தனைப் பேரின் கைகளை வெட்டி, கால்களை வெட்டி, தலையைத் துண்டித்து, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, சக முஸ்லிம் சகோதரர்களைக் கொத்துக்கொத்தாக கொல்வதற்கு ஆயுதங்கள் கொடுத்து, இன்னும் எத்தனை எத்தனை அயோக்கியத்தனங்கள் செய்து அல்லாவின் பெயரை காப்பாற்றப் போகின்றீர்கள்?
சவுதி அரேபியா என்றால் நம் நினைவுக்கு உடனே வருவது மெக்கா, மதினா பள்ளிவாசல்களே ஆகும். மேலும் சவுதி ஒரு எண்ணெய் வளம் நிறைந்த நாடு என்பதும், அங்கே அரேபியப் பாலைவனம் உள்ளது என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும். அப்புறம், பேரிச்சம் பழம், ஒட்டகங்கள், ஷேக்குகள் போன்றவை எல்லாம் சவுதியைப் பற்றி நினைத்தால் நமக்கு உடனே நினைவுக்கு வரும். ஆனால் நம் நினைவுக்கு உடனே வராத ஒன்று, அது அல்லாவின் பெயரால் மனித உயிர்களைத் துள்ளத் துடிக்கக் கழுத்தறுத்துக் கொலை செய்யும் வகாபிகள் உள்ள நாடு என்பது.
 அங்கே இருக்கும் எண்ணெயில் பாதி மனித ரத்தத்தால் ஆனது என்பதும், வானுயர கட்டப்பெற்ற கட்டங்கள் எல்லாம் மனித உயிர்களை அஸ்திவாரமாகப் போட்டு அதன்மீது கட்டப்பட்டது என்பதும் அல்லாவின் மீது ஆணையாக உண்மை!. உங்களால் நம்ப முடியவில்லை என்றால் சவுதிக்குப் போய்வந்த தோழர்களைக் கேட்டுப் பாருங்கள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்பும் அங்கே நரபலி கொடுக்கப்படும் மனித அவலங்களைப் பட்டியல் இடுவார்கள்.
 சட்டம் அனைவருக்கும் சமம் என்று இருக்கும் போது அதைப் பற்றிய எந்தக் கேள்வியும் அர்த்தமற்றது. ஆனால் கடவுளால் அருளப் பெற்ற ஷரியத் சட்டங்கள் என்று சொல்லப்படும் சட்ட ஆணைகள் அங்கே பஞ்சம் பிழைக்கப்போன, உடலையும் உயிரையும் தவிர ஏதும் இல்லாத பஞ்சைப் பரியாரிகளை மட்டும் கழுத்தறுக்கும் என்றால் அந்தச் சட்டத்தைக் கடவுளால் அருளப்பட்ட சட்டங்கள் என்று சொல்வதா? இல்லை சாத்தான்களால் அருளப்பட்ட சட்டங்கள் என்று சொல்வதா?
 சவுதிக்கு வீட்டு வேலை செய்யப் போன தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் (55) என்பவரின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. கையை துண்டிக்கும் அளவுக்கு அவர் என்ன குற்றம் செய்தார் தெரியுமா? அந்நாட்டில் பணியாற்றும் வேலையாட்களின் நிலை குறித்து அந்நாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அவர்களிடம் தான் தன்னுடைய முதலாளியால் கொடுமை செய்யப்படுவதாக புகார் செய்துள்ளார். இதுதான் அவர் செய்த பெரிய தவறு. இதைச் சகித்துக் கொள்ள முடியாத முதலாளியின் மனைவி அந்தப் பெண்ணின் கையை வெட்டி இருக்கின்றார்.
 இதுபோன்ற கொடூரங்கள் அங்கு நடைபெறுவது இது முதன்முறை அல்ல. அங்கு வீட்டு வேலைக்காக செல்லும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதும் பின்பு கொடூரமாக கொலை செய்யப்படுவதும் தொடர் கதையாகத்தான் உள்ளது. இலங்கையைச் சேர்ந்த ரிசானா நபீக்கிற்கு அந்நாடு மரண தண்டனை கொடுத்தது நமக்குத் தெரியும். குழந்தைக்கு பால்கொடுக்கும் போது அக்குழந்தை இறந்ததால் அவர்மீது கொலைகுற்றம் சாட்டப்பட்டு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இறுதியில் அவர் தலை துண்டிக்கப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த ஆண்டின் முதல் ஆறுமாதத்தில் மட்டும் சவுதியில் ஏறக்குறைய 100 பேர் தலைகள் துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
 சவுதியில் அல்லாவின் பெயரால் எதேச்சதிகாரமும், பாசிசமும் நிறைந்த மன்னரின் ஆட்சி நடைபெறுகின்றது. அப்பன் மன்னனாக இருப்பான்; அதற்குப் பிறகு அவரது மகன் மன்னாக இருப்பான்; அதற்குப்பின் அவரது மகன் மன்னாக இருப்பான். இதுதான் அங்கு நிலை. யாராவது அங்கு ஜனநாயகம் என்ற பெயரை உச்சரித்தால் அத்தோடு அவன் கதை முடிந்தது. மன்னரின் குடும்பம் தான் அங்கு எல்லாம். அவர்கள் வைத்ததுதான் சட்டம். மன்னர் குடிப்பார், கும்மாளம் அடிப்பார் அவரை யாரும் கேள்விகள் கேட்கக்கூடாது. ஆனால் குடிமக்கள் தன்னுடைய புலன்களை அடக்கிக்கொண்டு இன்னும் சொல்லப் போனால் மூடிக்கொண்டு கம்மென்று இருந்துவிட வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு அகால மரணம் நிச்சயம்.
 போன மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் பெவர்லி ஹில்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு ஆடம்பர பங்களாவில் இருந்து ஒரு பெண் ரத்தக்காயங்களுடன் தப்பித்து வந்து காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில் அந்த மாளிகையில் உள்ள ஒரு பொறுக்கி தன்னைப் பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சிப்பதாக புகார் அளித்தார். அந்தப் பொறுக்கியின் மீது மேலும் நான்கு பெண்கள் இதே போன்ற புகரை அளித்துள்ளனர். அங்கு சென்ற போலீசார் அங்கு கும்மாளம் அடித்துக்கொண்டு இருந்த அந்தப் பொறுக்கி மற்றும் அவனது அடிப்பொடிகள் 20 பேரை கைது செய்தனர். அந்தப் பொறுக்கியின் பெயர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத். இவனை சவுதியின் இளவரசன் என்று அல்லா மீது ஆணையாக நான் சொல்லவில்லை; ஊடகங்கள் சொல்கின்றன. ஒரு வேலை ஷரியத் சட்டங்கள் இளவரசர்களும், மன்னர்களும் மட்டும் ஊர்மேய்வதற்கு அனுமதிக்கின்றதோ என்னவோ நமக்குத் தெரியவில்லை. அப்படி அனுமதிப்பதில்லை என்று ஒருவர் சொல்வாரேயானால் இந்தப் பணக்கார பொறுக்கிக்குச் சவுதியின் சட்டங்கள்படி என்ன தண்டனை வழங்கப்படும் என்பதையும் நேர்மையாக சொல்ல வேண்டும்.
 நீங்கள் இந்த ஒரு இளவரசர் மட்டும்தான் இப்படி மற்றவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். ஒட்டுமொத்த சவுதி அரேபியாவின் ஆளும்வர்க்கமும் அப்படித்தான். அவர்களின் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் அப்படித்தான் நமக்குத் தெரிகின்றது. நீங்கள் ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமுலம்’ என்ற ஜான்பெர்கின்ஸ்ஸின் புத்தகத்தைப் படித்து இருக்கின்றீர்களா, வாய்ப்பு இருந்தால் படித்துப் பாருங்கள். சவுதி அரேபியாவில் உள்கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ஜான்பெர்கின்சை அமெரிக்கா அங்கு அனுப்புகின்றது. ஆனால் சவுதி இளவரசர் ஒரு அமெரிக்க எதிர்ப்பாளராக இருக்கின்றார். அதனால் ஒப்பந்தங்களைத் தர மறுக்கின்றார். அந்த இளவரசரின் பெயரை பெர்கின்ஸ் இளவரசர் டபிள்யூ என்றே அழைக்கின்றார். பின்னாளில் அவர் ஒரு பெண்பித்தர் என்பதை தெரிந்து கொள்ளும் பெர்கின்ஸ் அந்த இளவரசர் டபிள்யூக்கு சாலி என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைக்கின்றார். பிறகு என்ன, அனைத்து ஒப்பந்தங்களும் பெர்கின்ஸ் பணியாற்றும் நிறுவனத்துக்கே அளிக்கப்படுகின்றது. இதிலே என்ன முக்கியமான செய்தி என்றால் அந்த இளவரசர் தன்னை ஒரு கடுமையான வகாபி என்று சொல்லிக் கொண்டவர்.
 இந்த வகாபியிசத்துக்கு சவுதியில் முக்கிய பங்குள்ளது. இந்த வகாபிகளுடன் சேர்ந்தே சவுதி குடும்பம் மெக்கா, மதினா போன்ற புனிதத்தலங்களைக் கைப்பற்றி தங்களது அதிகாரத்துக்குக் கீழ் கொண்டுவந்தது. அதனால் தான் மன்னர் குடும்பம் மெக்கா, மதினாவின் காப்பாளர்களாக இன்றுவரையிலும் இருக்கின்றார்கள். இந்த புனித அங்கீகாரத்தை முன்வைத்தே மன்னர் குடும்பம் அரசாளும் தகுதியைத் தனதாக்கிக் கொண்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் மக்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழும் தகுதியையும் தனதாக்கிக் கொண்டுள்ளது. ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக அங்கு மத அடிப்படைவாத வகாபிசத்தைத் தூக்கிப் பிடிக்கும் மன்னராட்சி நடைபெற்று வருகின்றது.
 ஆனால் உலகில் எங்காவது ஜனநாயகத்தின் மீது சிறு கீறல் விழுந்தால் கூட தன்னுடைய வாளை எடுத்துச் சுழற்றும் அமெரிக்கா இந்த சவுதியை மட்டும் எப்போதும் நக்கியே கிடக்கின்றது. அதற்குக் காரணம் அதனிடம் குவிந்து கிடக்கும் பெட்ரோ- டாலர்கள். இந்த பெட்ரோ டாலரின் பெரும்பகுதி அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்யப்படுகின்றது. அதன்மூலம் வரும் வருமானத்தில் மன்னர் குடும்பம் கொட்டம் அடித்துக்கொண்டு இருக்கின்றது.
 இப்படி லட்சக்கணக்கான கோடி பெட்ரோ டாலர்களைத் தங்கள் உயிரை பணயம் வைத்துச் சம்பாதித்துத் தரும் மக்களில் பெரும்பாலனவர்கள் முஸ்லீம்களே ஆவார்கள். எகிப்து, பாகிஸ்தான், பாலஸ்தீனம், ஓமன், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். சவுதில் உள்ள மொத்த மக்கள் தொகை 27 மில்லியன் ஆகும். இதில் சட்டப்படி பதிவு செய்துகொண்டு பணியாற்றுபவர்கள் 9 மில்லியன் மக்கள் ஆவார்கள். சட்டவிரோதமாக குடியேறி அங்கு பணியாற்றுபவர்கள் 2 மில்லியன் பேர் ஆவார்கள். மொத்தமாகப் பார்த்தால் சவுதியில் சரிபாதி மக்கள் அந்நிய நாடுகளில் இருந்து வேலைக்குச் சென்றவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அல்லாவின் தேசத்தில் முஸ்லீம்களுக்கு மட்டுமே குடியுரிமை!. மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை அல்லாவும் அவரது சட்டமும் தன் மண்ணின் மைந்தர்களாக ஏற்றுக் கொள்வது கிடையாது.
 இவர்களில் பலர் எண்ணெய் நிறுவனங்கள், பாலைவனத்தில் ஓட்டகம் மேய்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றார்கள். இன்னும் பலர் வீடுகளில் வீட்டுவேலை செய்கின்றார்கள். இவர்களின் நிலை மிக மோசம். நீங்கள் வேலைக்குச் சேர்ந்த உடனேயே உங்களது பாஸ்போர்ட் பிடுங்கி வைத்துக் கொள்ளப்படும். உங்களது சம்மதம் இல்லாமல் உங்களது வேலைக்கான ஒப்பந்தம் அவர்களது விருப்பம் போல மாற்றப்படலாம். மேலும் உடம்புக்கு ஏதாவது வந்து படுத்துக்கொண்டால் உங்களை அவர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். உயிர் வாழ வேண்டும் என்று விரும்பினால் நாமாகவே எழுந்துபோய் அங்கு இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அவர்கள் பிற நாடுகளில் இருந்துவரும் தொழிலாளர்களை அடிமைகள் போலத்தான் நடத்துகின்றார்கள். உண்மையில் அங்கு பல இடங்களில் பரம்பரை பரம்பரையாக அடிமைகளாக உள்ளவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
 இந்த அடிமைகள் தங்கள் ரத்தத்தை சிந்தி உழைத்ததால் தான் உலக பணக்கார வரிசையில் பல சேக்குகள் உட்கார்ந்துகொண்டு இருக்கின்றார்கள். சவுதி இளவரசன் அல்வாலித் பின் தலாலின் சொத்துமதிப்பு 2014 ஆண்டு கணக்குப்படி 20.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவருக்கு உலகம் முழுவதும் நிலங்கள் மற்றும் வீடுகள், பங்குகள் உள்ளதாக சொல்கின்றார்கள். இவர் ட்விட்டர் நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகளின் முக மதிப்பு மட்டும் 1 பில்லியன் டாலர்கள் ஆகும். மேலும் சவுதி இளவரசர் காலித், ஸ்டார் குழும தலைவர் ரூபர்ட் முர்டோச்சின் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கின்றார். இதே போல பல சேக்குகள் ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்து உடையவர்களாக உள்ளனர். இப்படி இவர்கள் ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களில் ஆடம்பரமாக வாழ, அங்கு வாழும் சாதாரண மக்களின் நிலையோ பரிதாபத்துக்கு உரியதாக இருக்கின்றது.
 தலைநகர் ரியாத்திலும், ஜித்தாவிலும் பல பகுதிகளில் ஏழைகள் அதிகமாக வாழும் சேரிகள் உள்ளன. அங்கு எந்த பத்திரிக்கையாளர்களும் அனுமதிக்கப் படுவதில்லை. மீறி நீங்கள் உண்மையை வெளிக் கொண்டுவர விரும்பினால் உங்களது கை இருக்கும், கால் இருக்கும், ஆனால் தலை மட்டும் இருக்காது. அல்லாவின் ஆணைப்படி நீங்கள் ஏழ்மையைப் பகிரங்கப்படுத்துவது பெருங்குற்றம்.
 நீங்கள் சவுதியில் ஏழ்மையை மட்டும் அல்ல வேறு எதையுமே வெளிப்படுத்த முடியாது. கடந்த ஜனவரி மாதம் ராய்ஃப் பதாவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் 1000 கசையடிகளும் வழங்க வேண்டும் என்று சவுதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ராய்ஃப் பதாவி ஒரு வலைப்பதிவாளர். அவர் செய்த தவறு என்ன தெரியுமா? சவுதி சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கைகள் சிலவற்றைக் கேள்வி கேட்டுள்ளார். அவ்வளவுதான் அவர் செய்த பாவம்! இதற்குப் போய் 1000 கசை அடிகள் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை. 1000 கசையடிகள் கொடுத்தாலே அவர் செத்துவிடுவார். பிறகு எங்கு அவர் பத்து ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிப்பது!. அல்லாவுக்கு மத சகிப்புத்தன்மை என்பது கிஞ்சித்தும் கிடையாது போலும்!.
 இந்த வழக்குகூட பரவாயில்லை. இதைவிட ஒரு கேவலமான வழக்கு உள்ளது. தன்னுடைய கணவன் வீட்டு வேலைக்காரியுடன் சேர்ந்து தவறான உறவில் இருக்கும்போது அவரது மனைவி அந்தக் கருமத்தை தன்னுடைய செல்போனில் படம்பிடித்து வாட்ஸ் ஆப் மூலம் ஊர்முழுக்க தண்டோர அடித்துவிட்டார். ஒரு மானமுள்ள அரசு அதுவும் அல்லா அருளிய ஷரியத் சட்டங்களை மட்டுமே பின்பற்றுவோம் என்று சொல்லும் அரசு என்ன செய்திருக்க வேண்டும்? அந்தப் பொறுக்கிப் பயலை அழைத்து அவனுக்குத் தண்டனை அளித்திருக்க வேண்டும். ஆனால் சவுதி அரசு அந்தப் பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப் போவதாக பேசிக் கொள்கின்றார்கள். காரணம் அடுத்தவரின் அந்தரங்கத்தை மறைந்திருந்து படம் பிடிப்பதுச் சவுதியின் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி குற்றமாம். அப்படி என்றால் மனைவியை வீட்டில் வைத்துக்கொண்டே வேலைக்கார பெண்ணுடன் அப்படி இப்படி என்று இருப்பது குற்றமில்லையா?
 சவுதியில் சேக்குகள் விதிக்கும் ஷரியத் சட்டங்கள் எல்லாம் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருந்துவரும் தொழிலாளர்களுக்கு மட்டும் தான் கறாராக கடைபிடிக்கப் படுகின்றது. அதுவே அவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த தொழிலாளர்களாக இருந்தால் அவர்களுக்கு அவ்வளவு கறாராக கடைபிடிக்கப் படுவதில்லை. அப்படி நீங்கள் ஏழைநாடுகளைச் சேர்ந்தவராக இருந்து ஏதாவது தவறு செய்து உங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தால் நீங்கள் வசதியானவராக இருந்தால் ‘கொலைப்பணம்’ கொடுத்து தப்பித்துக் கொள்ளலாம். சென்ற ஆண்டு இதே போல கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது நாட்டின் அரசு கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பிடாக 1.1 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் கொடுத்துக் காப்பாற்றியது. பணம் கொடுக்கும் அளவுக்கு நீங்கள் வசதியானவராக இல்லாமல் போனால் அல்லாவின் ஷரியத் சட்டத்துக்கு உங்களது தலையை காணிக்கையாக தரவேண்டியதுதான்.
 தங்களுடைய எல்லா செயல்பாடுகளுக்கும் குரானைக் காட்டி பேசும் அவர்கள் மற்ற நாட்டுத் தொழிலாளிகளை அடிமைகளாக நடத்துவது பற்றியோ, வயிற்றுப் பிழைப்புக்காக நாடுகடந்து நாடுவரும் பெண்களைப் பாலியல் அடிமைகளாக நடத்த முயற்சிப்பது பற்றியோ வாய்திறக்க மறுக்கின்றார்கள். அதைப் பற்றியெல்லாம் குரான் ஒன்றும் சொல்லவில்லை அல்லது அப்படியே சொல்லியிருந்தாலும் அது தங்களைக் கட்டுப்படுத்தாது என்பது போல நடந்து கொள்கின்றார்கள். குரானுக்கோ ஷரியத் சட்டங்களுக்கோ எப்போதுமே உண்மையானவர்களாக சவுதி சேக்குகள் நடந்துகொண்டது கிடையாது.
 ஏழை இஸ்லாமியர்களின் உழைப்பில் பெரும்செல்வம் சேர்த்த அவர்கள் ஒரு பணக்கார அல்லாவின் தேசத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். வைரங்கள் பதிக்கப் பெற்ற ஆடம்பரமான கார்களில் பவனி வருகின்றார்கள். ஆடம்பரமான மாளிகைகளில் சுகபோகமாக வாழ்ந்துகொண்டு அவர்கள் நீதி(அத்ல்), தயாளம்(இஹ்ஸான்), கருணை(ரஹ்மா), ஞானம்(ஹிக்மா) பற்றி பேசுகின்றார்கள்.
 வளைகுடா நாடுகளிலேயே மிகப்பெரிய பரப்பளவை கொண்ட நாடாக சவுதி உள்ளது. இஸ்லாமியர்களின் புனித வழிபாட்டுத் தலங்களான மெக்கா, மதினா போன்றவை அங்கு தான் உள்ளது. உலகின் மிக பணக்கார நாடாகவும் சவுதி உள்ளது. அதனால் பல்வேறு நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அதைத் தங்களுக்கான நாடாக பார்க்கின்றார்கள். அதன் பெருமைகளைத் தங்கள் நாடுகளில் பரப்புகின்றார்கள். அப்படி உலக முஸ்லிம்களின் தலைமைப் பீடமாக தன்னைக் கருதிக் கொள்ளும் சவுதி அந்த இஸ்லாமிய மக்களுக்கு என்ன செய்துள்ளது என்று பார்த்தால் துரோகம் மட்டுமே மிஞ்சுகின்றது.
 ஆப்கானிஸ்தானின் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது சவுதி யார் பக்கம் நின்றது? பழமையான நாகரிக நாடான ஈராக்கை அமெரிக்க விமானங்கள் உருத்தெரியாமல் அழித்து அந்த நட்டை சின்னா பின்னமாக்கி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த போது சவுதி யார் பக்கம் நின்றது? இந்தியாவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை மோடி நரவேட்டை ஆடியபோது சவுதி யார் பக்கம் நின்றது? ஈராக்கிலே ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தி அதன்மூலம் ஈரானிலும் குழப்பம் விளைவிக்க சவுதி முயல்வதாக ஈரான் கூறுவதில் உண்மையில்லையா? சவுதி அரச குடும்பம் தங்களது வகாபிச கோட்பாடுகளை பரப்புவதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சன்னி பிரிவு அடிப்படைவாத குழுக்களுக்கு உதவி செய்கின்றது என்று ஈரான் அரசே குற்றம் சுமத்துகின்றதே அதில் உண்மையில்லையா?
  இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஈரானின் ஆட்சியாளர்களை அழித்தொழிக்க சவுதி மன்னர் சதிசெய்தார் என்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதே!. ஆடம்பரமாக வாழ்ந்து ஊதாரித்தனமாக செலவு செய்யும் ‘மன்னர் முஸ்லிம் அல்ல, மக்களின் எதிரி’ என்று அல்-கைதாவே சவுதியைப் பார்த்து சொன்னதே அதுவும் உண்மையில்லையா? ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்கள் இல்லையா? அவர்கள் அல்லாவின் குழந்தைகள் இல்லையா? அவர்களைக் காப்பாற்ற சவுதி என்ன செய்தது?
 உலக அளவில் ஆயுதங்களை அதிகளவு கொள்முதல் செய்யும் நாடுகளின் பட்டியலில் சவுதி முதல் இடத்தில் உள்ளது. அப்படி கொள்முதல் செய்த ஆயுதங்களைச் சவுதி யாருக்கு எதிராகப் பயன்படுத்தியது? தன்னுடைய சொந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராகத்தான் அதிகம் பயன்படுத்தியது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள எண்ணை வளத்தைக் கொள்ளையிட அமெரிக்கா நடத்திய போர்களுக்குப் பக்கத்துணையாக இருந்தது. எகிப்து, துனீசியா, ஏமன், லெபனான் போன்ற நாடுகளில் நடக்கும் மக்கள் விரோத அரசுகளுக்கு ஆதரவை அளித்தது. தற்போது கூட ஏமனில் நடந்துவரும் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராகப் போராடி வரும் ஷியா பிரிவு முஸ்லீம்களைக் கொன்று போட ஏமனை ஆட்சி செய்யும் சன்னிபிரிவு அரசுக்கு ஆதரவு தெரிவித்து, போரிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும் 500 முஸ்லிம் கிளர்ச்சியாளர்களைக் கொன்றிருக்கின்றது.
 உலகில் உள்ள பல்வேறு இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்த்து நிற்க, சவுதி மன்னர் குடும்பமோ லட்சக்கணக்கான பெட்ரோ டாலர்களை அமெரிக்காவில் முதலீடு செய்து வட்டி வாங்கி தின்று கொண்டு இருக்கின்றது. அமெரிக்காவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் ஒரு சுமூகமான உறவை வைத்துகொண்டு மற்ற இஸ்லாமிய நாடுகளுக்குத் துரோகம் செய்வதையே தன்னுடைய கொள்கையாக வைத்திருக்கின்றது.
 அதுமட்டும் அல்லாமல் சொந்த வாழ்க்கையில் எந்த நேர்மையையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்காதவர்கள் சவுதி சேக்குகள். ஆயிரக்கணக்கான கோடிகள் சொத்துக்களை வைத்திருக்கும் சேக்குகள் மலேசியா, இந்தியா, இலங்கை, எகிப்து, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து அங்கிருக்கும் ஏழை இஸ்லாமியப் பெண்களை அவர்களின் வறுமையைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அந்தப் பெண்களின் பெற்றோர்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டு தங்கள் நாடுகளுக்கு அழைத்துச் சென்று விடுகின்றார்கள். அப்படி திருமணம் செய்து கொள்ளும் பெரும்பாலான ஆண்கள் எதற்கும் லாயக்கற்ற கிழட்டுப் பயல்களாகவே இருக்கின்றார்கள். கடைசிவரை அந்தப் பெண்கள் அந்தக்கிழட்டுச் சேக்குகளின் மாளிகைகளில் ஓர் அடிமையாக இருந்து விட்டுச் சாகவேண்டியதுதான். அதுவும் முதல் மனைவியாக அல்ல, பத்தோடு பதினொன்றாக!.
 இதுதான் சவுதியின் யோக்கியதை. இதற்குப் பெயர்தான் அல்லாவின் ஆட்சி. பாசிசத்தின் புனித வடிவம் தான் சவுதி அரேபியா. ஜனநாயகம் என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. அங்கே பணம் வைத்திருப்பவன் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம், குடிக்கலாம், விபச்சாரத்தில் ஈடுபடலாம், ஏன் கொலைகூட செய்யலாம் ஆனால் ஏழைகள் தன்னுடைய மகிழ்ச்சிக்காக ஒரு திரைப்படத்தைக்கூட அங்கு பார்க்க முடியாது. அங்கு திரையரங்குகளே கிடையாதாம்!.
 தொழுகை நேரங்களில் அனைத்துக் கடைகளும் கண்டிப்பாக மூடவேண்டுமாம். ஆனால் ஷாப்பிங் மால்களுக்கு இந்த விதி பொருந்தாதாம். அல்லாவின் ஆணை பெட்டிக்கடைகளை மட்டும் தான் கட்டுப்படுத்தும். ஷாப்பிங் மால்களைக் கட்டுப்படுத்தாது போலும்.
 இப்படிப்பட்ட சவுதி அரேபியாவை இங்குள்ள சில முஸ்லீம்கள் தலைக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகின்றார்கள். அதில் பல பேர் வகாபிச சிந்தனைகளை நேரடியாகவே ஆதரிக்கின்றார்கள். சில இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் சவுதியின் சன்னிபிரிவு வகாபிச பாசிஸ்ட்டுகளிடம் இருந்து பணம் பெறுவதாகக் கூட குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒரு நாடு மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் போது அதை மற்றவர்கள் கடைபிடிப்பது தவறல்ல, ஆனால் சொல்லொன்றையும் செயலொன்றையும் கடைபிடிக்கும் சவுதி வகாபிச பொறுக்கிக் கும்பலை தனக்கான முன்னுதாரணமாக கருதும் இவர்களை பிழைப்புவாதிகள் என்றோ பிற்போக்குவாதிகள் என்றோ மத அடிப்படைவாதிகள் என்றோ ஏன் முட்டாள்கள் என்றோ சொன்னால் கூட தப்பில்லை.
 அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை என அறிவித்துக் கொண்ட சவுதி, சியா பிரிவு முஸ்லீம்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது ஏன்? சியா பிரிவைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்கள் இல்லையா? அவர்களின் புனித நூல் குரான் கிடையாதா? எனவே முஸ்லிம் தோழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்து கொண்டுள்ளது என்று மார்க்ஸ் சொல்லுவார். நீங்கள் சவுதியைப் பற்றி அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளுக்குப் பின்னால் யாரின் நலன் ஒளிந்து கொண்டுள்ளது? நிச்சயமாக சவுதி பாசிச வகாபிகளின் நலனே ஒளிந்து கொண்டுள்ளது.
 இதை எல்லாம் கண்டித்துப் பேசத் திராணியற்ற பிற்போக்குவாதிகள் சவுதியைப் பற்றி விமர்சனம் செய்தால் வரிந்துகட்டிக் கொண்டு வருவதன் உண்மையான பொருள் என்ன? சவுதி சேக்குகள் கொடுக்கும் பணத்துக்கு வாலுடன் சேர்த்துத் தலையையும் ஆட்டுவதாக எடுத்துக் கொள்ளலாமா? சவுதியில் கொட்டமடிக்கும் பணக்கார பாசிச வகாபிகளின் செயல்களுக்கு இங்குள்ள இஸ்லாமியத் தோழர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. அப்படி சொல்வது முட்டாள்தனம் என்பது நமக்கும் தெரியும். ஆனால் சவுதியைப் பற்றியும் அங்கு நடக்கும் அயோக்கியத்தனங்களுக்கு எதிராகவும் மதச்சார்பற்றவர்கள் விமர்சனம் செய்யும்போது வரிந்து கட்டிக் கொண்டு, வகாபிகளுக்கு வக்காலத்து வாங்க வரும் கடும் பிற்போக்கு வகாபிச அடிமைகள் அதற்கு நிச்சயம் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டும். நாம் முன்வைக்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லத் துப்பில்லாமல் சம்மந்தம் சம்மந்தமே இல்லாமல் எதையாவது பைத்தியக்காரத்தனமாக உளறி வைத்துவிட்டு, அதுதான் பதில் என்பது போல திருப்தி பட்டுக் கொள்கின்றார்கள்.  
 இன்னும் எத்தனைப் பேரின் கைகளை வெட்டி, கால்களை வெட்டி, தலையைத் துண்டித்து, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, சக முஸ்லிம் சகோதரர்களைக் கொத்துக்கொத்தாக கொல்வதற்கு ஆயுதங்கள் கொடுத்து, இன்னும் எத்தனை எத்தனை அயோக்கியத்தனங்கள் செய்து அல்லாவின் பெயரை காப்பாற்றப் போகின்றீர்கள்?
- செ.கார்கி  //keetru.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக