செவ்வாய், 20 அக்டோபர், 2015

நடிகர் சங்கம்..யானை புலி சிங்கத்தைஎல்லாம் அடித்து வீழ்த்திய பூச்சியின் (முருகன்)கதை!

சரத்குமாரை வீழ்த்திய பூச்சியின் கதை!‘‘யானை, சிங்கம், புலிக்கு எல்லாம் நான் பதில் சொல்வேன். ஆனால், பூச்சிக்கு பதில் சொல்ல முடியாது’’ - 2012 நவம்பர் 28 ஜூனியர் விகடன் இதழுக்கு பேட்டி அளித்தபோது, ராதாரவி இப்படி பகிரங்கமாகச் சொன்னார்! அந்த பூச்சி முருகனின் கதை இது.
‘‘பூச்சி முருகன் சங்க நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது. அவர் பொதுக்குழுவுக்கு வரக் கூடாது” என தடை விழுந்தபோது சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் போனார் பூச்சி முருகன். ‘பொதுக்குழுவுக்குச் செல்லலாம்’ என நீதிமன்றம் அனுமதி வழங்கியவுடன் போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழுவுக்குப் போனார். அப்போதும் தடுத்து நிறுத்தப்பட்டார். விஷால் தனது ஒவ்வொரு பேட்டியின்போதும், ‘‘பூச்சி முருகன் கேட்கும் கேள்விக்கு சரத்குமாரின் பதில் என்ன?” என்று கேட்டு வந்தார். ராகவேந்திரா மண்டபத்தில் சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாசர், பூச்சி முருகனை மேடைக்கு அழைத்தார். ‘‘இவர்தான்  பூச்சி முருகன். நம்முடைய பாண்டவர் அணி உருவாக இவர்தான் காரணம்” என்று சொல்லி கெளரவப்படுத்தினார்.
மிகச் சாதாரணமாக நடிகர் சங்கத்துக்குள் நடந்த விஷயத்தை தனி ஓர் ஆளாகக் கிளப்பி, அதற்கு முக்கிய நடிகர்கள் அனைவரையும் திருப்பி... சரத்குமார், ராதாரவி டீம் தோல்வியைத் தழுவக் காரணமாக இருந்துள்ளார் பூச்சி முருகன்.

வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ படத்தில் கண் தெரியாத பிச்சைக்காரனாகவும் ‘எலி’யில் போலீஸ் டிபார்ட்மென்ட் மந்திரியாகவும் நடித்தவர்தான் இந்த பூச்சி முருகன். இவரது தந்தை சிவசூரியன், ‘மந்திரிகுமாரி’ படத்தில் பேசிய, ‘‘பீம்சிங் இது என்ன புதுக்குழப்பம்?’’ என்ற வசனம் அந்தக் காலத்தில் பிரபலம். ‘சர்வாதிகாரி’, ‘தூக்குதூக்கி’ உட்பட 150 படங்களில் நடித்தவர் சிவசூரியன்.
 ‘ஒரு பூச்சி என்னை சீண்டிக்கொண்டிருந்தது. அடித்தேன், வீழ்ந்துவிட்டது’ என்று பூச்சி முருகன் நீக்கப்பட்டதற்கு கிண்டலாகக் காரணம் கூறினார் ராதாரவி. ‘‘அன்று விழுந்த பூச்சி, மூன்று வருடப் போராட்டத்துக்குப் பிறகு சரத்குமாரையும், ராதாரவியையும் கடித்து வீழ்த்தி இருக்கிறது” என்கிறது பாண்டவர் அணி.
தி.மு.க-வில் வீட்டுவசதி வாரிய தொழிற்சங்கத்திலும், இலக்கிய அணியிலும் முக்கியப் பொறுப்புகளில் இருந்த அவர், இப்போது தலைமைக் கழகச் செயலாளராக இருக்கிறார். ஆள் பார்க்க குள்ளமாக இருப்பதை வைத்து, ‘பூச்சி’ என்றார்களாம் சிலர். அதுவே அவர் பேராகவும் ஆகிவிட்டது. தி.மு.க.வு-க்கான பிரசார நாடகங்களில் நடிப்பதும் அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டுவதுமாக இருக்கும் இவர், வடிவேலுவின் நெருங்கிய சகா.
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த பூச்சி முருகனை சந்தித்து, அவரது கதையைக் கேட்டோம். ‘‘2009 முதல் 2012 வரை நடிகர் சங்கத்தில் நியமன செயற்குழு உறுப்பினராக இருந்தேன். உங்கள் சேவை நடிகர் சங்கத்துக்குத் தேவை என்று என்னை அழைத்து வந்து சேர்த்ததே ராதாரவிதான். தி.மு.க-வில் தலைமை நிலையச் செயலாளராக இருக்கும் நான், அப்போதைய தி.மு.க ஆட்சியில் என்னால் முடிந்த பல உதவிகளை நடிகர் சங்கத்துக்கு செய்துவந்தேன். இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு, தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சங்க இடத்தை 29 ஆண்டுகள் சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்கு குத்தகை விடும் ஒப்பந்தத்தை சரத்குமாரும், ராதாரவியும் போட்டர்கள். ஒப்பந்தம் போட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் ஒப்பந்தம் குறித்து செயற்குழுவில் தெரிவித்தார்கள். நடிகர் சங்கச் சொத்துகளைப் பாதுகாக்க ஏழு பேர் டிரஸ்டியாக இருப்பார்கள். ஏழு பேரில் ஐந்து பேர் இறந்துவிட்டார்கள். இறந்தவர்களுக்குப் பதிலாக, வேறு ஐந்து பேரை டிரஸ்டியாக நியமிக்காமல், சரத்குமாரும் ராதாரவியும் மட்டும் எல்லா அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தார்கள்.
தென் இந்திய நடிகர் சங்கத்துக்கு இருக்கும் ஒரே இடத்தையும் வாடகைக்குக் கொடுத்துவிட்டால், அங்கு நடிகர்களுக்கு என்ன உரிமை இருக்கும்.? சங்கத்தின் இடத்தில் மால் கட்டிய பிறகு வெறும் 2,400 சதுர அடி மட்டும் சங்கத்துக்குத் தருவார்கள். இடத்தை விற்கவேண்டும் என்றால்கூட அந்த நிறுவனத்திடம் அனுமதி வாங்க வேண்டி இருக்கும். 29 வருட ஒப்பந்தத்துக்குப் பிறகு லாபம் வரவில்லை, மேலும் 29 வருடங்கள் வேண்டும் என்று அந்த நிறுவனம் நிர்ப்பந்தித்தால் என்ன செய்ய முடியும்? அதனால் கடன் வாங்கி நாமே கட்டடம் கட்டிக்கொள்ளலாம் என்று செயற்குழுவில் நாங்கள் தெரிவித்த கருத்தை சரத்குமார் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து நான் வழக்குப் போட்டேன். இடம் தாரைவாக்கப்பட்டதில் தவறு நடந்ததற்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி, ஒப்பந்தத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஒப்பந்தத்துக்்கு தடை வாங்கிய என்னை பழிவாங்க நினைத்தார்கள். வெறும் 12 ரூபாய் உறுப்பினர் பணம் கட்டவில்லை என்று கூறி சங்கத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டர்கள். எனக்காக குரல் கொடுத்த அண்ணன் குமரிமுத்து உள்ளிட்ட மூவர் நீக்கப்பட்டார்கள்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். போன்ற ஜாம்பவான்கள் கஷ்டப்பட்டு வாங்கிய இடம் நடிகர்களின் கையைவிட்டுப் போகும் சூழ்நிலை உருவானதால், இதைத் தடுக்க நடிகர்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்தேன். இளம் நடிகர்கள் நினைத்தால் இதனைச் சாதிக்க முடியும் என்று நினைத்தேன். ஒவ்வொருவரிடமும் பேச ஆரம்பித்தேன். விஷாலையும், நாசரையும் சந்தித்து முறைகேடுகள் குறித்து விளக்கினேன். ஆனால், முதலில் அவர்கள் நம்பவே இல்லை. 20-30 முறை நாசரும், விஷாலும் கூப்பிட்டபோது எல்லாம் சென்று முறைகேடுகள் பற்றி விளக்கினேன். நான் சொல்வது எல்லாம் உண்மை என்று உணர்ந்த பிறகு, ஒப்பந்தம் பற்றி விளக்கம் கேட்டு 9 முறை, சரத்குமாருக்கு நாசர் கடிதம் அனுப்பினார். இதனால் அவரை தகாத வார்த்தைகளால் ராதாரவி திட்ட ஆரம்பித்தார். இப்படி கேள்வி கேட்பவர்களை எல்லாம் அசிங்கமாகத் திட்டியதால் இளைஞர் பட்டாளம் விஷால், நாசர் பின் வர ஆரம்பித்தார்கள். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடிகர் சங்கத் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி கடந்த மார்ச் மாதம் தேர்தலை நடத்தாமல், சரத்குமார் தனக்கு வேண்டியவர்கள் மூலம் காய்நகர்த்தி சாதகமான சூழ்நிலை உருவான பிறகு ஜூலை மாதம் தேர்தலை அறிவித்தார். சரத்குமார் தேர்தலை நடத்தினால் ஒருதலைபட்சமாக இருக்கும் என்று, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்று வழக்குப் போட்டோம். அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் நியாயமாக தேர்தல் நடந்துள்ளது. தேர்தல் அறிவித்த பிறகும் உறுப்பினர் பட்டியலைக்கூட தரமறுத்து விட்டார்கள். இதற்கும் நீதிமன்றத்தை நாடிதான் பெற்றோம். இப்படி ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றம் சென்று முறையிட்டு, 1987 முதல் ராதாரவி ஆதிக்கத்தில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டு இருக்கிறோம். இனி புதிதாக பதவி ஏற்பவர்கள், சத்யம் சினிமாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை நீக்குவார்கள். அதன் பிறகு நானும் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வேன். அதன்பிறகு நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்டிக்கொள்வோம்” என்ற பூச்சி முருகனின் செல்போனில் ‘எங்களுக்கும் காலம் வரும்... காலம் வந்தால் வாழ்வு வரும்... வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே...’ என்ற பாடல்  ஒலிக்கிறது’ பொருத்தமாகத்தான் இருக்கிறது.
இளைஞர்களுக்கு பூஸ்ட் கொடுத்திருக்கிறது பூச்சி.
- ஆ.நந்தகுமார்
அட்டைப் படம்: ப.சரவணகுமார்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ் vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக