ஞாயிறு, 18 அக்டோபர், 2015

நடிகர் சங்க தேர்தல் இரவு முடிவுகள் தெரியவரும்!

ஒரு மாதமாக, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், சென்னையில் இன்று நடக்கிறது. சங்கத்தைக் கைப்பற்ற நடக்கும் இந்த பலப் பரீட்சையில் யார் வெற்றி பெற்றாலும், போட்டி நடிகர் சங்கம் உருவாகும் என்று, 'கோலிவுட்' வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், நடிகர் சங்க தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, இன்று காலை, 7:00 மணிக்கு துவங்கி, மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டு எண்ணிக்கை துவங்கி, இரவு, 9:00 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பாதுகாப்பு பணியில், இரண்டு துணை ஆணையர்கள் உட்பட, 200 போலீசார் ஈடுபட உள்ளனர்; 24 கேமராக்கள் மூலமும் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. அத்துடன் ஓட்டுப்பதிவு காட்சிகள், பெரிய திரை மூலம் பார்வையாளர்களுக்கு திரையிடப்பட உள்ளன. தேர்தலில், எந்த அணி வெற்றி பெற்றாலும், எதிர் அணி மீது பல வழக்குகள் பாயும். நடிகர்கள் மட்டுமல்லாது, அவர்களுக்கு ஆதரவு தரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என, அனைத்து தரப்பிலும், இரண்டு அணிகள் உருவாகும். ஒரு வேளை சரத்குமார் அணி வெற்றி பெற்றால், புதிதாக, ஒரு நடிகர் சங்கம் உருவாகும் என, கோடம்பாக்கத்தில் தகவல்கள் கசிய துவங்கியுள்ளன.

சரத்குமார் அணி ஆலோசனை கூட்டத்தில், ராதாரவி மேடை நாகரிகம் தெரியாமல் ஆபாசமாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக, விஷால் அணியைச் சேர்ந்த, 'பூச்சி' முருகன் தெரிவித்துள்ளார். சென்னை, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ராதாரவி மீது, அவர் நேற்று புகார் அளித்ததோடு, பாதுகாப்பு கேட்டு கடிதமும் கொடுத்துள்ளார். வெற்றி உறுதி:
நடிகர் விஷால் கூறுகையில், ''மூன்றரை ஆண்டு போராட்டத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும்; எங்கள் வெற்றி உறுதியான ஒன்று. இந்த தேர்தல் நல்ல மாறுதலை ஏற்படுத்தும்; அனைவரும் தவறாமல், மனசாட்சியோடு ஓட்டு போட வேண்டும்,'' என்றார்.

நாசர் கூறுகையில், ''ராதாரவிக்கு மேடை நாகரிகம் தெரியவில்லை. அவரது பேச்சை, அவரது அணியில் உள்ளவர்களாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. ராதாரவியின் வரம்பு மீறிய பேச்சு, அவர்கள் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,'' என்றார். தயாரிப்பாளர் சங்கம்: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, சரத்குமார் அணிக்கு ஆதரவு அளித்தது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. தாணுவை தலைவர் பதவியில் இருந்து நீக்க, வரும், 21ல், தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவை கூட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலர் அழகப்பன் உள்ளிட்டோர் கூறியதாவது:
நடிகர் சங்க தேர்தலில், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, ஒருதலைபட்சமாக முடிவெடுத்துள்ளார். நடுநிலை வகிக்க வலியுறுத்தியும், தன்னிச்சையாக சிலருடன் சேர்ந்து, சரத்குமார் அணி கூட்டத்திற்கு சென்று, ஆதரவுதெரிவித்துள்ளார்; இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால், நடிகர்களிடையே நிரந்தர பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. வரும், 21ல், தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவை கூட்ட, கடிதம் அனுப்ப உள்ளோம். பொதுக்குழுவில் எடுக்கும் முடிவின்படி, தாணு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். விரைவில், தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 934 தபால் ஓட்டில் 783 பதிவு: நடிகர் சங்க தேர்தலில், தபால் ஓட்டுகள் நேற்று மாலை, 5:00 மணி வரை பெறப்பட்டன. மொத்தம்உள்ள, 934 தபால் ஓட்டுகளில், 783 தபால் ஓட்டுகள் பதிவாகின. 43 தபால் ஓட்டுகள், தேர்தல் அலுவலகத்திற்கே திரும்ப வந்துள்ளன. வெளியூர் உறுப்பினர்களில், 241 பேர், ஓட்டு போட இன்று சென்னை வருகின்றனர். அதற்கான அனுமதியை, தேர்தல் அதிகாரியிடம் பெற்றுள்ளனர்.'தமிழ் நடிகர் சங்கம்': நடிகர் சங்க தேர்தலில், எந்த அணி வெற்றி பெற்றாலும், மாற்று அணியைச் சேர்ந்தவர்கள், 'தமிழ் நடிகர் சங்கம்' என்ற பெயரில், புதிய சங்கத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது:
* நடிகர் சங்கத்தில், நீண்ட காலமாக பொறுப்பில் இருக்கும் ராதாரவி, 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற பெயரை, 'தமிழ் நடிகர் சங்கம்' என மாற்றி, சங்கத்திலும், சங்க பொறுப்பிலும், தமிழ் நடிகர், நடிகையருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகிறார். ஒருவேளை, சரத்குமார் அணி தேர்தலில் தோற்றால், அவரின் தலைமையில், 'தமிழ் நடிகர் சங்கம்' உருவாகும்
* இதே மனநிலையில் தான், விஷால் அணியினரும் உள்ளனர். தங்கள் அணி தோல்வியை சந்தித்தால், நடிகர் சிவகுமார் தலைமையில், தமிழ் நடிகர் சங்கம் உருவாக்க தீர்மானித்துள்ளனர்
* அண்டை மாநிலங்களைச்சேர்ந்தவர்கள், பிற மொழி பேசுபவர்கள், தமிழ் படங்களில் கோலோச்சுகின்றனர். அந்த நிலை மாற வேண்டும் என்றால், தமிழ் நடிகர் சங்கம் உருவாக வேண்டும் என்பதே, பெரும்பாலான நடிகர்களின் கருத்தாக உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.'பாண்டவர் அணி' பெயர் மீது புகார்: நாமக்கல்லைச் சேர்ந்த, நாடக நடிகை சுமதி, 35, நேற்று தேர்தல் அதிகாரியிடம், பாண்டவர் அணிக்கு எதிராக புகார் மனு அளித்தார். அவர் கூறுகையில், ''இந்து மதத்துடன் தொடர்புடைய, 'பாண்டவர்' என்ற பெயரை, விஷால் அணியினர் தவறாக பயன்படுத்துகின்றனர். இது, இந்து மத நம்பிக்கை கொண்டவர்களுக்கு எதிரானது. 'பாண்டவர் அணி' என்ற பெயரை, விஷால் அணியினர் பயன்படுத்தக் கூடாது,'' என்றார்.>விஷால் மீது புது கோபம்! நடிகர் விஷால் அணியினர், சென்னை, கோடம்பாக்கத்தில் பிரசாரம் செய்தனர். அப்போது விஷால், 'அமெரிக்க அதிபர் தேர்தலில் கூட, இரண்டு முறை தான் போட்டியிட முடியும். ஆனால், நடிகர் சங்கத்தில் கட்டுப்பாடு இல்லை. 'எங்களது உறவினர்களின் ஈம சடங்குகளில், நடிகர் ராதாரவி பங்கேற்கிறார்' என, பலர் சொல்கின்றனர். நீங்கள் அனைவரும் உயிரோடு இருக்கும் போது, உங்களோடு நான் இருப்பேன். ஆனால், வெட்டியான் தான் ஈம சடங்குகளில் இருப்பார்' என்றார். இது, வெட்டியான் சமுதாயத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின், தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் சிலர், நேற்று சுடுகாடுகளில் வேலை செய்யும் வெட்டியான்களை அழைத்து சென்று, விஷால் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை சரத்குமார் தடுத்து நிறுத்தினார்.
;அஜித் ஓட்டு போட வருவாரா? நடிகர் அஜித்குமார் நடிக்கும், வேதாளம் படத்தின் பாடல் காட்சி, நேற்று முன்தினம், சென்னை, பின்னி மில் பகுதியில் படமாக்கப்பட்டது. அப்போது, அஜித்குமாரின் வலது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பின் போதே, அவரது வலது முழங்காலில் காயம் பட்டது. அப்போதே, அறுவை சிகிச்சை செய்ய, மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், தொடர் படப்பிடிப்புகளால், அறுவை சிகிச்சை தள்ளிப் போனது. இந்நிலையில், வேதாளம் படப்பிடிப்பில், அதே இடத்தில் மீண்டும் காயம் பட்டதால், மருத்துவர்கள் கட்டாய ஓய்வு எடுக்கச் சொல்லி இருப்பதோடு, விரைவில், அறுவை சிகிச்சை செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர். இன்னும், மூன்று நாட்களில் அஜித்குமாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அதனால், இன்று நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில், அஜித்குமார் ஓட்டு போட வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- நமது நிருபர் -  dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக