ஞாயிறு, 18 அக்டோபர், 2015

டெல்லியில், மேலும் 2 சிறுமிகள் கற்பழிப்பு மத்திய அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லியில் 4 வயது சிறுமி ஒருவர் கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் மீண்டும் 2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி டெல்லியின் நங்லோய் பகுதியில் வசித்து வரும் 2½ வயது சிறுமியை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தூக்கிச்சென்று கற்பழித்தனர். இதைப்போல ஆனந்த் விகார் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு டெல்லியில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்களால், மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், மாநில போலீசார் இயங்கி வருவதால், மத்திய அரசு மீது முதல்–மந்திரி கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் கூறுகையில், ‘டெல்லியில் மீண்டும் மீண்டும் சிறுமிகள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் தலைகுனிவையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. மக்களை பாதுகாப்பதில், மாநில போலீசார் முற்றிலும் தோல்வியடைந்துள்ளனர். பிரதமரும், துணைநிலை கவர்னரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் கற்பழிப்பு குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள், அல்லது டெல்லி போலீஸ் துறையை மாநில அரசிடம் ஒப்படையுங்கள் என பிரதமருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமரையும், துணைநிலை கவர்னரையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக