சனி, 10 அக்டோபர், 2015

மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடைவெளி பெரிதாக...ஸ்டாலின் நமக்கு நாமே! நல்லதுதான்!

நிசப்தம்: தொண்ணூறுகளுக்குப் பிறகான தமிழக அரசியலை சாக்கடை என்று தாராளமாகச் சொல்லலாம். பணம் சம்பாதிப்பதற்கும் அதிகாரத்தை செலுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்குமான தேவையான பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான களமாக மட்டும் மாறியிருக்கிறது. கரை வேட்டியணிந்தவுடன் கத்தியை முதுகில் செருகிக் கொண்டு திரியும் தோரணை வந்துவிடுகிறது. யாரைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. எதைப் பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை. எப்படியாவது ஒரு பதவியைப் பிடித்துவிட்டால் ஏதாவதொரு வழியில் நறுக்கென்று பணம் சம்பாதித்துவிடலாம். காலத்துக்கும் தோளைத் தூக்கிக் கொண்டு நடக்கலாம். இதுதான் பதினெட்டு வயதில் கரைகட்டிய வெள்ளை வேட்டியை அணியத் தொடங்கும் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இல்லையென்று மறுக்க முடியுமா?
ரியல் எஸ்டேட், பார் டெண்டர், கட்டட காண்ட்ராக்டர் என பணம் கொழிக்கும் அத்தனை தொழில்களிலும் ரவுடியிசத்தை நுழைப்பது, அடித்து மிரட்டுவது என்று கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய கட்சிக்காரர்களை வைத்துக் கொண்டிருக்கும் கட்சிகள் என்ன செய்கின்றன? சாதியக் கட்சிகளைத் தூண்டிவிடுவது, தனக்கு பிடிக்காத கட்சிகளை உடைப்பது, கூட்டணிக்கு வரும் கட்சிகளை கேவலப்படுத்துவது, தேவையான கட்சிகளுக்கு பெரும் பணத்தைக் கொடுப்பது, வாக்குக்கு பணம் கொடுப்பது, இலவசம், டாஸ்மாக் என்று எல்லா வகையிலும் சீரழித்துவிட்டார்கள். கவுன்சிலர், எம்.எல்.ஏ, ஒன்றியம், நகர, வட்டம், மாவட்டம் என்று யாராக இருந்தாலும் காவல்துறையினரையும் அதிகாரிகளையும் தங்களின் அடிமைகளாக மாற்றிக் கொள்வது, ஒத்துவராத அதிகாரிகளை பந்தாடுவது, இடமாற்றுவது, லஞ்ச ஒழிப்புத் துறையை அனுப்பி வைப்பது தேவைப்பட்டால் லாரி ஏற்றுவது வரைக்கும் எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டார்கள். 
கச்சடாவாகிக் கிடக்கிறது.
அரசியல் களத்தில் குப்பை சேரச் சேர மக்கள் அதைவிட்டு வெகுதூரம் விலகிப் போய்விட்டார்கள். எவன் ஆட்சிக்கு வந்தால் நமக்கென்ன? வாக்குக்கு இரண்டாயிரம் கிடைக்கிறதா? மிக்ஸியும் கிரைண்டரும் கொடுக்கிறார்களா? சாராயக் கடையைத் திறந்து வைத்திருக்கிறார்களா- அது போதும் என்கிற மனநிலைக்கு வந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளிடம் எதைச் சொன்னாலும் நமக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை என்றுதான் கிட்டத்தட்ட பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் வென்றவர்களும் அதற்கேற்றபடிதான் நடந்து கொள்கிறார்கள். தங்கள் தொகுதிக்குள் ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கொண்டு வருவதைவிடவும் பதினைந்து லட்ச ரூபாயில் சாலை போடுவதற்கான ஒப்பந்தத்தை பெறுவதில்தான் குறியாக இருக்கிறார்கள். இரண்டாவதில்தான் கமிஷன் உண்டு. குப்பை கொட்டும் இடத்தை மாற்றிக் கொடுக்கச் சொன்னால் ‘செய்கிறோம்’ என்று சொல்வார்களே தவிர செய்யமாட்டார்கள். தொழிற்சாலை மண்ணில் கழிவைக் கொட்டுகிறது என்று சொன்னால் ‘பார்க்கிறோம்’ என்று சொல்லிவிட்டு முதலாளியிடம் மேசைக்கு கீழாக கையை நீட்டுவார்கள். இப்படி எதையெல்லாம் செய்தால் சட்டைப்பை நிரம்பும் என்று கணக்குப் பார்த்து பார்த்து மரத்துப் போய்க் கிடக்கிறார்கள். செவிடன் காதில் எதற்கு சங்கை ஊத வேண்டும் என்று மக்களும் விட்டுவிடுகிறார்கள்.
மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான இடைவெளி மிகப்பெரியதாகியிருக்கும் இந்தச் சூழலில்தான் ஸ்டாலினின் நமக்கு நாமே சுற்றுப் பயணத்தை பார்க்க வேண்டியிருக்கிறது. அரசியல் ஸ்டண்ட், தேர்தல் உத்தி, வாக்கு சேகரிக்கும் தந்திரம் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும்- வழிநெடுகிலும் லட்சக்கணக்கான மக்களுடன் உரையாடுவது என்பது அவருக்கு மிகப்பெரிய அனுபவமாக இருக்கும். தேர்தல் பிரச்சாரம் போன்றில்லாமல் மக்களுடன் அணுக்கமாக நெருங்கிப் பழகும் போது வேறொரு புரிதல் உருவாகும். இந்த ஊரில் இன்னாரது தோட்டத்தில் விவசாயிகளைச் சந்திக்கிறார்; இந்த தேனீரகத்தில் காபி குடிக்கிறார் என அத்தனையும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஸ்டாலின் வந்திருப்பதைத் தெரிந்து அந்தத் தோட்டத்துக்கும் தேனீரகத்துக்கும் மக்கள் வருகிறார்கள். பிரச்சினைகளை நேரடியாகச் சொல்கிறார்கள். தமிழக மக்களின் அடிப்படையான பிரச்சினைகளை நிச்சயம் ஒரு முறை நாடி பிடித்துப் பார்த்துவிடுவார் என்று நம்பலாம். 
ஸ்டாலின் மீது எனக்கு எந்தத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புமில்லை. ஸ்டாலின் புனிதமானவர் என்றோ அப்பழுக்கற்றவர் என்றோவெல்லாம் முத்திரை குத்தவில்லை. ஆனால் மேயராக இருந்த போது வெள்ளக்காடாக இருந்த சென்னைக்குள் பேண்ட்டை சுருட்டி விட்டுக் கொண்டு தண்ணீருக்குள் நடந்த போதும், கருணாநிதியும் ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்திப்பதைக் கூட தவிர்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்து சுனாமி நிதியைக் கொடுத்த போதும், ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் எந்தச் சாக்கு போக்குமில்லாமல் தொடர்ந்து கலந்து கொள்ளும் போதும் அவர் மீது மரியாதை கூடியது என்றுதான் சொல்ல வேண்டும். 
மக்களை நெருங்கிச் செல்லும் எந்தப் பயணமும் வரவேற்கத்தக்க செயல்பாடுதான். ஆனால் இந்த நமக்கு நாமே பயணத்தை திமுக வெறுப்பு ஊடகங்களும் சமூக ஊடகத்தில் இருப்பவர்களும் வறுத்தெடுக்கிறார்கள். அப்படித்தான் வறுப்பார்கள். திமுக கொஞ்ச நஞ்ச வெறுப்பையா சம்பாதித்து வைத்திருக்கிறது? திமுகவின் மீது படிந்து கிடக்கும் வெறுப்புக்கு யாரை நோக்கி கை நீட்டுவது? தயாநிதி, அழகிரி, கனிமொழியில் ஆரம்பித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களை முடிசூடா மன்னர்களாக நினைத்துக் கொண்ட மாவட்டச் செயலாளர்கள் வரைக்கும் அத்தனை பேரும்தான் பொறுப்பு. உதயநிதி, தயாநிதி வரைக்குமான குஞ்சுகுளுவான்கள் அத்தனை பேரும் துள்ளிக் கொண்டிருந்த போது பாசத் தலைவனுக்கு பாராட்டுவிழா நடத்திக் கொண்டாடிய கருணாநிதியும்தான் காரணம். அடக்கி வைத்திருக்க வேண்டும். விட்டுவிட்டார். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திய அதிமுக கீழே தள்ளி மேலே ஏறி அமர்ந்து கொண்டது.
ஆட்சியில் இருக்கும் வரைக்கும் வெகு தெனாவெட்டாகத் திரிந்த அஞ்சாநெஞ்சன் கடந்த நான்காண்டுகளாக மூச்சு கூட விடாத போது, தனது தொழிலில் கை வைத்துவிடுவார்களோ என்று தயாநிதி பம்மிய போது, சிறைச்சாலையிலிருந்து வெளியேறி அரசியலில் தனக்கான பாலபாடத்தை கனிமொழி படித்துக் கொண்டிருந்த போது மொத்தப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கியது ஸ்டாலின் தான் என்பதை மறுக்க முடியாது. ‘இதையெல்லாம் தனக்காகத்தானே செய்கிறார்?’ என்று கேட்கலாம்தான். எந்தப் பலனும் இல்லாமல் நம்மில் எத்தனை பேர் வீதியில் இறங்குவோம்? துரும்பைக் கூடக் கிள்ளிப்போட மாட்டோம் என்பதுதான் நிதர்சனம். அவர் அரசியல்வாதி. எதையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் என்று எப்படிக் கோர முடியும்? அறுவடை செய்துவிட்டுப் போகட்டும்.
தமிழகத்தின் பிரச்சினைகள், மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள், என்ன குறைகளை அடுக்கிறார்கள் என்பதையெல்லாம் புரிந்து கொண்டுதானே அறுவடை செய்யப் போகிறார்? தன்னை இளவரசனாகவோ கொம்பு முளைத்த கோமகனாகவோ காட்டிக் கொள்ளாமல் உங்களில் ஒருவன் என்று நெருங்கித்தானே அறுவடை செய்யப் போகிறார்? செய்துவிட்டுப் போகட்டும். கிட்டத்தட்ட ஐம்பதாண்டு காலமாக அரசியலில் இருக்கிறார். கட்சியின் ஒவ்வொரு படியாகத்தான் மேலே வந்திருக்கிறார். திமுகவின் மீது கறை படியக் காரணமான அத்தனை பேரும் அடங்கி ஒடுங்கிக் கிடக்கும் போது சட்டையை மடித்துவிட்டு இவர்தான் சாலையில் இறங்கியிருக்கிறார். திமுகவின் சாமானியத் தொண்டர்களுக்கு இப்பொழுதிருக்கும் ஒரே நம்பிக்கை ஸ்டாலின் மட்டும்தான். 
இப்படி தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக ஒரு முழுமையான பயணம் செய்வதை நிச்சயமாக பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. மக்களை நெருங்குவதும் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதும் அரசியல்வாதிகளுக்கு அத்தியாவசியம் என்று காட்டுகிற வகையில் சமகால அரசியல்வாதிகளில் ஸ்டாலினை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஸ்டாலின் மீது நிறையக் குற்றச்சாட்டுகள் உண்டுதான். தனக்கு சாதகமான மாவட்டச் செயலாளர்கள் எந்தத் தவறும் செய்தாலும் கண்டு கொள்வதில்லை, ஸ்திரமான முடிவெடுப்பதில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி மக்களை நோக்கிய பயணம் என்பதை முழு மனதாக உற்சாகப்படுத்த வேண்டும். இத்தகைய போக்கு தமிழகத்தின் எதிர்கால அரசியலுக்கு மிக அத்தியாவசியமானது. 
பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன என்பதிலும் அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன என்பதிலும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இருநூற்று முப்பத்து நான்கு தொகுதிகளிலும் சாதாரண மனிதர்களைச் சந்திப்பதன் வழியாகவும், இரவும் பகலும் அலைவதன் வழியாகவும் இந்த நெடும்பயணம் ஸ்டாலின் என்கிற ஆளுமையில் நிச்சயம் நிறைய மாறுதல்களை உண்டாக்கும் எனவும் அந்த மாறுதல் எதிர்கால தமிழக அரசியலில் எதிரொலிக்கும் என்றும் நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை?. nisaptham.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக