புதன், 23 செப்டம்பர், 2015

Vasan eye care 2009-ம் ஆண்டு 16 கோடியில் இருந்து இன்று 500 கோடி......

கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானதா? 2002-ம் ஆண்டில் ‘வாசன் ஐ கேர்’ என்ற பெயரில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் கண் மருத்துவமனைகள் வரிசையாகத் தொடங்கப்பட்டன. . அதன்பிறகு, 2008-ம் ஆண்டு வரை எந்த வளர்ச்சியும் இல்லாத நிறுவனமாகத்தான் வாசன் கண் மருத்துவமனை இருந்தது. ஆனால், 2008-க்குப் பிறகு அந்த நிறுவனம் வேகமாக வளரத் தொடங்கியது. 2009-ம் ஆண்டு அதன் முதலீடு 16 கோடியில் இருந்து இன்று 500 கோடியைத் தாண்டி விட்டது என்று சொல்லப்படுகிறது.

 வாசன் ஐ கேர்... பின்னணியில் கார்த்தி சிதம்பரமா?‘கண்’ முறைகேடு - சிதம்பரத்துக்கு சிக்கல்!“என் நேர்மையை சந்தேகிப்பதற்குப் பதில் என் நெஞ்சில் குத்துங்கள்” - நாடாளுமன்றத்தில் மக்களவையில் நின்று உருக்கமாகப் பேசினார் அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.  2012-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி,  நாடாளுமன்ற மக்களவை எதிர்க் கட்சித் தலைவராக இருந்த அருண் ஜெட்லி, ‘ஏர்செல்-மேக்ஸிஸ்’ விவகாரத்தில் ப.சிதம்பரத்தைக் குற்றம்சாட்டிப் பேசினார். அப்போது பதிலளித்துப் பேசிய ப.சிதம்பரம், உருக்கமாக உதிர்த்த வார்த்தைகள்தான் இவை.

ஆனால், ப.சிதம்பரம் பதவி வகித்த நிதி அமைச்சகம், வருமானவரித் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகங்களில் இருந்து தொடர்ந்து வெளிவரும் ஆதாரங்கள், சிதம்பரத்தின் நேர்மையை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள வரி ஏய்ப்பு, கறுப்புப் பண பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்களின் சங்கிலித் தொடர் ஜே.டி.குரூப்ஸ் - வாசன் கண் மருத்துவமனை - ப.சிதம்பரம்.
வாசன் ஐகேர் - என்ற கண் மருத்துவமனை யார் கண்ணிலும் படாமல் இருக்காது. ‘வாங்க! நாங்க இருக்கோம்’ என்பது இவர்களது விளம்பர உத்திகளில் ஒன்று. இப்போது அவர்கள் மீது முறைகேடு புகார் கிளம்பி உள்ளது.
பின்னணி என்ன?
கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி சென்னை மத்திய வருமானவரித் துறை ஆணையர்  எம்.சீனிவாச ராவ், டெல்லியில் உள்ள மத்திய தீர்ப்பாயத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். தன்னைப் பழிவாங்கும் நோக்கத்துடன் அதிகாரிகள் தனக்குத் தேவையில்லாமல் பணியிடமாற்ற உத்தரவு வழங்கி உள்ளனர். அதை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதில் தன்னை பணியிடமாற்றம் செய்ய என்ன காரணம் என்பதையும் சீனிவாச ராவ், தெளிவாக விவரித்திருந்தார். அதில் இருந்த தகவல்கள்தான் இன்றைக்கு சிதம்பரத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கும் விவகாரத்தின் பின்னணியின் தொடக்கம்.
சீனிவாச ராவ் சொல்லும் குற்றச்சாட்டு என்ன?
‘‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பி.ஜே.பி. அரசாங்கம் அமைந்ததும், கறுப்புப் பணத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பல நிறுவனங்கள் கடுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. அதில் ஜே.டி.குழுமம் என்ற நிறுவனம் சிக்கியது. உடனடியாக அந்த நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஏராளமான ஆதாரங்களைக் கைப்பற்றினர். அந்த ஆதாரங்களை முதல் கட்டமாகப் பரிசீலித்த போது, ஜே.டி. குழுமம் தமிழகத்தில் புகழ்பெற்ற  வாசன் கண் மருத்துவமனையுடன் பல பணப் பரிவர்த்தனைகள் நடத்தி இருப்பது தெரிந்தது. குறிப்பாக 40 கோடி ரூபாய் கறுப்புப் பணப் பரிவர்த்தனையிலும்  19  கோடி ரூபாய் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சோதனையை தீவிரப்படுத்தியதில், அந்த நிறுவனம் 223 கோடி ரூபாய் கறுப்புப் பணமாக வாசன் கண் மருத்துவமனை நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது தெரியவந்தது. ஆனால், இந்த ஆதாரங்கள் சிக்கியும்கூட, வருமான வரித் துறையில், ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த காலத்தில் உயர் பதவிக்கு வந்தவர்கள் சிலர் கூட்டாகச்  சேர்ந்து அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் வேலையைச் செய்தனர். இதையடுத்து, நான் ஜே.டி.குழுமத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அந்த நிறுவனத்திடம் இருந்து கறுப்புப் பணம் பெற்ற வாசன் கண் மருத்துவமனை நிர்வாகத்தை விசாரிக்க வேண்டும்; வாசன் கண் மருத்துவமனையின் உண்மையான உரிமையாளராக உள்ள கார்த்தி சிதம்பரம், அவருடைய தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். அதன் காரணமாகத்தான் எனக்கு இந்தப் பணியிடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது” என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மத்தியத் தீர்ப்பாயம், சீனிவாச ராவின் பணியிடமாறுதலுக்கு தடை விதித்துள்ளது.
ஜே.டி.குழுமம் - வாசன் கண் மருத்துவமனையின் தொடர்புகள்
ஜே.டி.குழுமம் என்பது ஜே.தினகரன் என்பவருக்குச் சொந்தமானது. நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல தொழில்களை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. இதன் நிதி நிறுவனங்கள் தொடர்பாக ஏகப்பட்ட புகார்கள் கிளம்பி உள்ளன. ‘‘ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துடன் உள்ள தொடர்புகளை வைத்துக்கொண்டு இந்த நிறுவனம் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது. அதற்கு கைம்மாறாக சில நூறு கோடிகளை கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான வாசன் கண் மருத்துவமனை நிர்வாகம், அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் (கார்த்தி சிதம்பரமும் அவருடைய நண்பர் ராஜேஷ் என்பவரும் சேர்ந்து தொடங்கிய நிறுவனம். ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில் இந்த நிறுவனத்துக்குத் தொடர்பு உள்ளது. அதை வைத்துத்தான் நாடாளுமன்றத்தில், அருண் ஜெட்லி, ப.சிதம்பரத்துக்கு எதிராக குற்றம்சாட்டிப் பேசினார்) என்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
இது எப்படி நடந்துள்ளது என்றால், வாசன் கண் மருத்துவமனை நிர்வாகியான டாக்டர் அருணுக்கும் அவருடைய மனைவி மீராவுக்கும்   27 லட்சம் பங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுவும் 100 ரூபாய் மதிப்புள்ள பங்குகள், ‘பிரிமியம் பங்குகள்’ என்ற அடிப்படையில், 200 ரூபாய் விலையில் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்று லட்சம் பங்குகள் துவாரகநாதன் என்பவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பங்குகளைப் பெற்ற இவர்கள், அடுத்த 48 மணி நேரத்தில் அதாவது அக்டோபர் 30-ம் தேதி, அவற்றை மீண்டும் நூறு ரூபாய் விலையில்,  ‘அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்கு விற்றுள்ளனர். அங்கிருந்து ‘அஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்க்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்’ என்ற நிறுவனத்துக்கு கைமாறி உள்ளன. அதன்மூலம் மறைமுகமாக கார்த்திக் சிதம்பரத்துக்கு லாபம் சென்றுள்ளது. இதுதான் சீனிவாச ராவ் சொல்லும் குற்றச்சாட்டு. இதன்மூலம் விதிமுறைகளை மீறி, ஒருவர் மூலம் மற்றொருவர் ஆதாயம் அடைந்துள்ளனர் என்பதுதான் சீனிவாச ராவின் குற்றச்சாட்டு.
கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானதா?
2002-ம் ஆண்டில் ‘வாசன் ஐ கேர்’ என்ற பெயரில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் கண் மருத்துவமனைகள் வரிசையாகத் தொடங்கப்பட்டன. டாக்டர் அருண் என்பவர்தான் இதன் உரிமையாளர். மதுரையில் இதன் கிளைகள் தொடங்கப்பட்ட விழா, மதுரைக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது அதில் கலந்துகொண்டு திறப்பு விழாவை நடத்தி வைத்தவர், ப.சிதம்பரம்தான். அதில் பேசிய ப.சிதம்பரம், ‘டாக்டர் ஏ.எம்.அருணின் தந்தை முருகையா என்னுடைய கெழுதகை நண்பர்’ என்றார். அதன்பிறகு, 2004-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அதன்பிறகு, 2008-ம் ஆண்டு வரை எந்த வளர்ச்சியும் இல்லாத நிறுவனமாகத்தான் வாசன் கண் மருத்துவமனை இருந்தது. ஆனால், 2008-க்குப் பிறகு அந்த நிறுவனம் வேகமாக வளரத் தொடங்கியது. 2009-ம் ஆண்டு அதன் முதலீடு 16 கோடியில் இருந்து இன்று 500 கோடியைத் தாண்டி விட்டது என்று சொல்லப்படுகிறது.
2011-ம் ஆண்டு வாசன் கண் மருத்துவமனையின் 100-வது கிளை அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதிக்குள் காரைக்குடியில் திறக்கப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்டு வாசன் கண் மருத்துவமனையின் 100-வது கிளையைத் திறந்து வைத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்-தான். ஒரு தனியார் மருத்துவமனையின் உள்ளூர் கிளையைத் திறக்க இந்தியப் பிரதமரே வந்திருந்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. அன்றில் இருந்து வாசன் மருத்துவமனை கார்த்தி சிதம்பரத்தின் மருத்துவமனையாகத்தான் எல்லோராலும் பார்க்கப்பட்டது.
‘‘அரசியல் அவதூறு இது!”
 இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ள ப.சிதம்பரம், ‘‘ஊடகங்கள் எழுதுவதுபோல், நானும் என் குடும்பத்தினரும் அவர்கள் குறிப்பிடும் எந்த நிறுவனத்திலும் பங்குதாரர்கள் இல்லை. உரிமையாளர்களும் இல்லை. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் மீதும் அப்போது அதில் பொறுப்பில் இருந்தவர்கள் மீதும் திட்டமிட்டுச் செய்யப்படும் அரசியல் அவதூறு. இதை ஒரு சிலர் பிரசாரமாக செய்து எங்களை களங்கப்படுத்த நினைக்கின்றனர். 2014 மே மாதமே காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சி முடிந்துவிட்டது. அதன்பிறகு நடந்த விவகாரங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. இதுபற்றி சரியான உண்மைகள் தெரியாமல், தொடர்ந்து அவதூறான செய்திகள் வெளிவந்தால், சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க நான் தயங்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
‘‘அரசியல் பின்னணியும் இருக்கிறது!’
 இந்த விவகாரத்தில் அதிக ஆர்வமாக இருப்பவர் ஆடிட்டர் குருமூர்த்தி. ‘‘குருமூர்த்தி இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருப்பதற்குக் காரணம் அவரது அரசியல் உள்நோக்கம்தான். சிதம்பரத்துக்கு சிக்கல் ஏற்படுத்துவதன் மூலமாக தனது காங்கிரஸ் பகையைத் தீர்த்துக்கொள்ள நினைக்கிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும்போது சிதம்பரத்தை மாநிலத் தலைவராக நியமிக்க திட்டமிட்டுள்ளார் சோனியா. இதைத் தெரிந்துகொண்டு இப்படிச் செய்கிறார்கள். மேலும், இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தைவிட அதிகமாக இப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கப்படுகிறார். அப்படியானால் அருண் ஜெட்லியை வீழ்த்துவதற்கான குரூப் இதன் பின்னணியில் இருக்கிறதா?” என்றும் கேட்கிறார்கள்.
இந்த விவகாரம் பற்றி வாசன் கண் மருத்துவமனை நிர்வாகத்தையும் ஜே.டி.குழுமத்தையும் தொடர்பு கொண்டு விவரம் கேட்க முயன்றோம். அவர்கள் தரப்பில் யாரும் பேசவில்லை. இமெயில் மூலமாக விளக்கம் கேட்டு இருக்கிறோம். அவர்கள் பதில் தந்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
- ஜோ.ஸ்டாலின், மா.அ.மோகன் பிரபாகரன்

இந்தியாவின் 244-வது பணக்காரர்!
திருச்சியில் 1947-ம் ஆண்டு, காங்கிரஸ் பாரம்பர்யம் மிக்க முருகையா என்பவரால் திறக்கப்பட்ட ஒரு மெடிக்கல் ஷாப்பின் விரிவாக்கம்தான் வாசன் குழுமம். இன்று அதன் வருவாய் மதிப்பு 5 ஆயிரம் கோடி என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் மெடிக்கல் ஷாப் வைத்திருந்தவர்கள், 1999-களில் எக்ஸ்ரே மற்றும் நோய் கண்டறியும் சோதனை மையங்களைத் தொடங்கினார்கள். முருகையாவின் மகன் அருண் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தவர். அவர் நிர்வாகப் பொறுப்பைக் கையில் எடுத்துக்கொண்ட பிறகு, தொழிலை விரிவுபடுத்தினார்.  தங்களது முதல் கண் மருத்துவமனையை திருச்சியில் தொடங்கினார். அதன்பிறகு, சேலம், கேரளா என்று ஆரம்பித்தவர்கள், மதுரையில் 25 இடங்களில் கண் மருத்துவமனைகளைத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். 2012-ல் நாடு முழுவதும் 175 கண் மருத்துவமனைகள், 30 பல் மருத்துவமனைகள், நாள்தோறும் இயங்கும் நோய் கண்டறியும் சோதனை மையங்கள், மெடிக்கல் ஷாப்கள், வாசன் பவுண்டேஷன் என வாசன் குழுமம் வளர்ந்தது. இவர் இந்தியாவின் 244-வது பணக்காரர் என்று ‘ஹுரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
ராஜினாமா செய்த அழகப்பன்!
முருகப்பா குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அழகப்பன், வாசன் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக இருந்தார். ஏலச்சீட்டு நடத்தும் ஜே.டி.குழுமத்தோடு நடந்த கறுப்புப் பணப் பரிவர்த்தனையில் வாசன் கண் மருத்துவமனை நிர்வாகத்தின் பெயரும் அடிபடத் தொடங்கியதும், அழகப்பன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தபோது அவர் லண்டனில் இருந்தார். அங்கிருந்தே ஃபேக்ஸ் மூலம் அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.  இதையடுத்து 19-ம் தேதி நடைபெற்ற வாசன் கண் மருத்துமனை நிர்வாக இயக்குநர்கள் மீட்டிங்கில், அழகப்பனின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
சரியான பாதையில்தான் வளர்ச்சி அடைந்தோம்!
‘‘கறுப்புப் பண விவகாரத்தில் எங்களைத் தொடர்புபடுத்தி, அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் எங்கள் மீது வைக்கப்பட்டுள்ளன. அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களுடைய நிறுவனம் சரியான பாதையில் முக்கியத்துவம் வாய்ந்த வகையில் வளர்ச்சியடைந்தது. நாடு முழுவதும் 19 மாநிலங்களில், 120 நகரங்களில் இருக்கும் எங்கள் மருத்துவமனை மூலம் இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமான மக்களுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறோம். நாடு முழுவதும் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் எங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல் சரியானது அல்ல. எங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றது” என்று டாக்டர் அருண் குறிப்பிட்டு உள்ளார்.
‘நோட்டீஸ் அனுப்பட்டுமே’’
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு கார்த்தி சிதம்பரம் என்ன சொல்கிறார்?
‘‘ஆடிட்டர் குருமூர்த்தியைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியா நடக்கிறது? பி.ஜே.பி. ஆட்சிதானே நடக்கிறது. கறுப்புப் பணத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொன்னவர்கள், கறுப்புப் பண விவகாரத்தை வெளியில் கொண்டு வந்த சீனிவாச ராவுக்கு விருது கொடுக்காமல், அவரை இவர்கள் ஏன் டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள்? கறுப்புப் பணப் பரிவர்த்தனை நடந்திருந்தால் அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு இருக்க வேண்டியதுதானே? எனக்கு அந்த நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பது உண்மை என்றால், எனக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கலாமே. இதுவரை டெல்லியில் இருந்து எனக்கு நோட்டீஸ்கூட வரவில்லையே? இதில் இருந்தே தெரிகிறதல்லவா இந்த அவதூறுகள் எல்லாம் வெற்று விளம்பரத்துக்காக செய்யப்படுபவை!” என்றார்.vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக