வியாழன், 24 செப்டம்பர், 2015

அசல் ஆபாச குமுதம் போன்ற பத்திரிகைகள் பெண்களின் ஆடைகள் பற்றி ....

தமிழகத்தில் இருந்து வாரம் இருமுறை வெளியாகும் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில், பெண்கள் லெக்கின்ஸ் அணிவது தொடர்பாக வெளியான கட்டுரைக்கும், அதில் இடம்பெற்ற புகைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெண்ணியவாதிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு எதிராக ஆன்லைன் பிரச்சாரம் ஒன்றை அவர்கள் துவக்கியுள்ளனர்.
'லெக்கின்ஸ் ஆபாசம் - எல்லைமீறும் இளசுகள்' என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்டர் பத்திரிகையில் அண்மையில் ஒரு கட்டுரை வெளியானது. அக்கட்டுரையில் லெக்கின்ஸ் அணிந்த பெண்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. சம்பந்தப்பட்ட பெண்களின் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும் அந்தப் புகைப்படங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது மிகப் பெரிய குற்றம் என்பதே பெண்ணியவாதிகளின் வாதம்.
அக்கட்டுரைக்கு, பெண்ணியவாதிகள் மட்டுமல்லாமல் மற்ற பெண்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.யார் யார் என்னென்ன உடை உடுத்த வேண்டும் என்பது அவர்களின் தனிப்பட்ட மனித உரிமை. கலாசார காவலர்கள் என்று தங்களை தாங்களே எண்ணி கொள்பவர்கள் பேசாமல் முழுதும் போர்த்த சவுதிக்கு போய்விட தானே? 

பாலின பாகுபாடு, பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் பிரஜன்யா என்ற அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராகமாலிகா கார்த்திகேயன் கூறும்போது, "சாலையோரம் நின்று கொண்டு ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்டு அவரை தவறான கோணத்தில் புகைப்படம் எடுக்கும் ஒரு ஆணுக்கும் இந்த புகைப்படத்தை (குமுதம் ரிப்போர்டரில் வெளியான) எடுத்த நபருக்கும் ஒரே மாதிரியான தவறான ரசனையே இருந்திருக்க முடியும்" என்றார்.
வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறும்போது, "இந்தக் கட்டுரை பெண்கள் சுதந்திரத்தை அத்துமீறியுள்ளது. நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது. 'ஆபாசம்' என்பது பார்ப்பவர்கள் கண்ணோட்டத்திலேயே இருக்கிறது தவிர உடையில் இல்லை. வெறும் வர்த்தக நோக்குடன் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தொழில் முனைவர் பி.சித்ரா கூறும்போது, "எனது ஆடை சுதந்திரத்தில் அத்துமீற யாருக்கும் உரிமை இல்லை. எனக்கு வசதியாக இருப்பதால் நான் லெக்கின்ஸ் அணிகிறேன். பெண்கள் அவர்களது உடை பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டால் மட்டும் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துவிடுமா?" என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கூறும்போது, "நகரில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் லெக்கின்ஸ் அணிய தடை இருக்கிறது. எனது கல்லூரியிலும் அத்தகைய கட்டுப்பாடு இருக்கிறது. பெண்கள் அவர்கள் சவுகரியத்துக்கு ஏற்றாற்போல் ஆடை அணிகின்றனர். அப்படி இருக்கும்போது ஆடை கட்டுப்பாடு விதிப்பது அவர்கள் சுதந்திரத்தை அத்துமீறுவதாகும்" எனக் கூறினார்.
லெக்கின்ஸ் குறித்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேஞ்.ஆர்க் (Change.org) அமைப்பினால் தொடங்கப்பட்ட ஆன்லைன் பிரச்சாரத்துக்கு இதுவரை சுமார் 5000 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்ப்பலைகளை சம்பாதித்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியரை தொடர்பு கொள்ளும் நமது (தி இந்து ஆங்கிலம்) முயற்சி பலனளிக்கவில்லை. அவரது தொலைபேசி அழைப்பை ஏற்ற அவரது உதவியாளர், "காலை முதலே தொலைபேசி அழைப்புகள் குவிந்து வருவதால் அவர் (குமுதம் ஆசிரியர்) எந்த அழைப்புகளையும் ஏற்பதாக இல்லை" என்றார்.tam.lhindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக