செவ்வாய், 29 செப்டம்பர், 2015

வடிவேலு : அந்த அரசியல் கட்சிப்பிரமுகரை எனக்கு தெரியாது; தயாரிப்பாளரை நான் மிரட்டவும் இல்லை

எலி’ படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்துள்ளார். அப்புகாரில், ‘’ நடிகர் வடிவேலு, ஜனவரி 6ல், என்னை சந்தித்தார். அப்போது அவர், 'தற்போது நான், எலி படத்தில் நடிக்கிறேன். அதன் தயாரிப்பாளர் ராம்குமாரிடம் செலவு செய்ய பணம் இல்லை. இந்த படம் ரிலீசாகவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. 'அதனால், ராம்குமார் இதுவரை செலவு செய்த, 90 லட்சம் ரூபாயில், 15 லட்சம் ரூபாயை நீங்கள் கொடுத்து விடுங்கள். மீதி தொகையான, 75 லட்சம் ரூபாயை நான் தந்து விடுகிறேன். அவர் இந்த படத்தில் இருந்து விலகி விடுவார். பின் நீங்களே இந்த படத்திற்கு தயாரிப்பாளராகி விடுங்கள்' என, கெஞ்சினார்.

நண்பர்களுடன் சேர்ந்து, 17 கோடி ரூபாயில் 'சிட்டி சினி கிரியேஷன்ஸ்' நிறுவனம் மூலம், எலி படத்தை தயாரித்தேன். இந்த படத்தை, 32 கோடிக்கு விற்பனை செய்து தருவதாக, வடிவேலு உறுதி அளித்தார். ஆனால், படம் சரியாக ஓடவில்லை; எனக்கு, ஒன்பது கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.என் மூலம், எலி படத்தை திரையிட்ட, தியேட்டர் உரிமையாளர்கள், பட வினியோகஸ்தர்கள், பொய் கணக்கு காட்டி, கூடுதலாக பணம் கேட்டு மிரட்டினர். இதனால், வடிவேலுவிடம் நஷ்டஈடு கேட்டேன். பணம் தர மறுத்ததோடு வடிவேலுவும் எலி பட இயக்குனர் யுவராஜ், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி.துரைசாமி, வடிவேலுவின் மேனேஜர் பன்னீர், அக்கவுன்டன்ட் முத்தையா ஆகியோரும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’’என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் வடிவேலு, ‘’எலி படத்தை, முதலில் ராம்குமார் என்பவர் தயாரிக்க இருந்தார். நிதி வசதி போதாது என்பதால், ஒதுங்கிக் கொண்டார். இதையறிந்த, தயாரிப்பாளர் சதீஷ்குமார், அந்தப் படத்தை தயாரிக்க முன் வந்தார். படம் வெளியான பின்னர் 'எதிர்பார்த்தபடி ஓடவில்லை; நஷ்டமாகி விட்டது. அடுத்து, ஒரு படம் நடித்து கொடுத்தால் உதவியாக இருக்கும்' என்றார். நானும், அதற்கு சம்மதம் தெரிவித்தேன். சதீஷ்குமாருக்கும், எனக்கும் இடையே படம் தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை. நான்,அவரை மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

தற்போது நான் மதுரையில் இருக்கிறேன். தயாரிப்பாளர் போலீசில் புகார் செய்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் நல்ல மனிதர். அவர் இப்படி புகார் கொடுக்க, தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். பைனான்சியர்கள் மிரட்டலால், புகார் மூலம் என்னை காரணம் காட்டி, அவர்களை சமாளிக்க முற்பட்டிருக்கலாம். சதீஷ்குமாரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி பிரமுகரை எனக்கு தெரியாது.

 எலி படத்திற்கு எனக்கு பேசிய சம்பளத்தில், இரண்டு கோடி ரூபாய் மட்டும் கொடுத்தார். மீதி சம்பளத்தை தரவில்லை. நஷ்டம் என்று கூறியதும், நானும் பாக்கி சம்பளத்தை கேட்கவில்லை. ஒரு நடிகன் என்ற வகையில் இதை தான் நான் செய்ய முடியும். நண்பராக இருந்த தயாரிப்பாளர், திடீரென எதிரியை போல் நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது’’என்று கூறியுள்ளார். nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக