புதன், 23 செப்டம்பர், 2015

கிரானைட் குவாரியில் நரபலி கொடுத்தது உண்மை! ஆதாரம் சிக்கியது...

மதுரை :
கிரானைட் குவாரியில் நரபலி புகாரில் தோண்டிய இடத்தில் கடைசியாக எடுக்கப்பட்ட 2 எலும்புக்கூடுகள், முக்கிய தடயமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவைகள் வழக்கமான முறையின்றி அவசரமாக புதைக்கப்பட்டிருப்பது போல தெரிவதால், விசாரணை சூடு பிடித்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிரானைட் குவாரிக்காக மனநலம் பாதித்தோரை நரபலி கொடுத்து, சின்னமலம்பட்டி மணிமுத்தாறு பகுதியில் புதைத்ததாக சேவற்கொடியோன் என்பவர் புகார் தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து விசாரணை அதிகாரி சகாயம் முன்னிலையில் கடந்த 13 ஆம் தேதி தோண்டப்பட்டதில், 4 உடல்களின் எலும்புக்கூடுகள் சிக்கின. இதன்பேரில் பிஆர்பி கிரானைட் நிறுவன உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி, மேலாளர் அய்யப்பன், ஊழியர் ஜோதிபாசு, ஜேசிபி டிரைவர் பரமசிவம் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நரபலி கொடுத்துவிட்டு பிணத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி ஆழத்தில் புதைத்திருக்கலாம் என்றும், எனவே ஏற்கனவே தோண்டிய இடத்தில் இன்னும் ஆழமாக தோண்டினால் மேலும் ஆதாரங்கள் கிடைக்கும் எனவும் சகாயம் கூறியதன் அடிப்படையில் 12 அடி ஆழம் வரை தோண்டும் பணி கடந்த 18 ஆம் தேதி துவங்கி நேற்று (செப்.21) வரை நடைபெற்றது. இதுவரை 8 எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன.
நேற்று கிடைத்த 7 மற்றும் 8 வது எலும்புக்கூடுகள் முகம் மண்ணில் புதைந்தும், தாடை எலும்பு தொங்கியவாறும் இருந்தது. இதில் இளைஞர் ஒருவரின் எலும்புக்கூட்டின் தலை மேற்கு பகுதியில் புதையுண்டு இருந்தது. இவை நரபலி கொடுக்கப்பட்ட எலும்புக்கூடாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது. அனைத்து எலும்புக்கூடுகளும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. எலும்புக்கூடுகள் தொடர்பாக தடய அறிவியல் துறையினரிடம் கீழவளவு போலீசார் 21 கேள்விகளை எழுப்பி பதில் கேட்டுள்ளனர். இவை மனித எலும்புகளா, புதைக்கப்பட்ட காலம், ஆணா, பெண்ணா, விஷம் எதுவும் கொடுக்கப்பட்டுள்ளதா, எலும்புகள் சிக்கிய இடத்தில் உள்ள மண்ணில் வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா, ஆயுதங்களால் தாக்கி இறப்பு ஏற்பட்டுள்ளதா என்பது உட்பட 21 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்கு கிடைக்கும் பதிலை தொடர்ந்தே, தங்கள் விசாரணையை மேற்கொண்டு தொடர முடியும் என போலீசார் தெரிவித்தனர். நரபலி தொடர்பாக போலீசார் அறிக்கை கொடுத்தால் அதையும் சகாயம் அறிக்கையில் சேர்ப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அறிக்கை தயாரிப்பில் தீவிரம் காட்டி வரும் சகாயம் தனது குழுவில் பணியாற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் நரபலி தொடர்பான தகவல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. கடைசியாக கிடைத்த எலும்புக்கூடுகள் நரபலி கொடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் நம்பப்படுவதால் கிரானைட் குவாரி விசாரணை மற்றும் இறுதி அறிக்கையில் பரபரப்பான தகவல்கள் இடம் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக