செவ்வாய், 22 செப்டம்பர், 2015

தமிழில் இணைய இதழ்கள் வெற்றி பெற்றுள்ளன! புள்ளிவிபரம்..கீற்று ..

இணைய இதழை தினம் எத்தனை பேர் வாசிக்கிறார்கள், எந்தெந்த நாடுகளில் வாசிக்கிறார்கள் என்ற விவரத்தை அறிய முடியும். உதாரணமாக கீற்று இணைய தளத்தை 79 நாடுகளில் வாசிக்கிறார்கள் என்ற விவரம் எங்களுக்குத் தெரியும். அது மட்டுமல்ல, எவ்வளவு நேரம் இணையத்தில் இருந்தார்கள், எத்தனை பக்கங்கள் வாசித்தார்கள், எத்தனை பேர் மீண்டும் மீண்டும் இணைய தளத்துக்கு வருகிறார்கள், ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எத்தனை பேர் வாசித்தார்கள், எந்தப் பக்கத்தை வாசகர்கள் அதிகம் விரும்பி படிக்கிறார்கள், இந்தியாவில் இருந்து எத்தனை பேர், அமெரிக்காவில் இருந்து எத்தனை பேர், எந்த சர்வீஸ் ப்ரோவைடரில் (BSNL, Airtel போன்றவை) இருந்து எத்தனை பேர் போன்ற துல்லியமான புள்ளி விவரங்களை இணைய இதழ் நடத்துபவர்களால் பெற முடியும். இவ்வளவு ஏன்? தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவேடார் நாட்டில் கீற்றுக்கு ஒரு வாசகர் இருக்கிறார் என்ற விவரம் கூட எங்களுக்குத் தெரியும். அங்கே இருக்கும் தமிழர்களில் இவர் மட்டுமே அரசியல் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவராக இருக்கலாம்.
எழுத்தாளர் க‌வின் மலர்: keetru.com இணைய இதழ் மூலம் புதுவிசை, இளைஞர் முழக்கம், தலித் முரசு, புதிய காற்று, அணங்கு, பெண்ணியம், கவிதாசரண், விழிப்புணர்வு உள்ளிட்ட ஏராளமான இதழ்களை இணைய வாசகர்களிடம் கொண்டு சேர்த்து வருபவர்கள் நந்தன் மற்றும் பாஸ்கர். அவர்களிடம் சில கேள்விகள்..)

கேள்வி: இணைய இதழ்களின் வாசகர்களுக்கும் அச்சுப் பத்திரிகைகளின் வாசகர்களுக்கும் என்ன வேறுபாடு?

பதில்: இணைய வாசகர்களில் பெரும்பாலானோர் நல்ல வேலையில் அனைத்து வசதி, வாய்ப்புகளோடு இருப்பவர்கள். தங்களது அலுவலக வேலைகளுக்கிடேயே அல்லது ஓய்வு நேரத்தில் வெளிஉலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இணைய இதழ்கள் பக்கம் எட்டிப் பார்ப்பவர்கள். சுருக்கமாகச் சொன்னால், கொலுமண்டபத்தில் அமர்ந்துகொண்டு "மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்று கேட்ட மன்னர்களின் மனநிலையில் உள்ளவர்கள். ஆனால், அச்சுப் பத்திரிக்கைகளின் வாசகர்கள், வாசிப்பதை ஓர் இயக்கமாகக் கொண்டவர்கள். வாசிப்பதை அவர்கள் விவாதிப்பார்கள், தங்கள் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கண்டித்து கூட்டம் நடத்துவார்கள்; சிலர் புத்தகங்களை எரித்து போராட்டம்கூட நடத்துவார்கள். ஆனால் இணைய வாசகர்களிடம் இவற்றை எதிர்பார்க்க முடியாது. இணைய வசதி சாதாரண மக்களுக்கும் போய்ச் சேரும்போது இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி: இணைய இதழ்களின் வாசகர்கள் பெரும்பாலும் புலம் பெயர்ந்த தமிழர்களாகவே உள்ளனர். இது ஏன்?

பதில்: புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இயற்கையாகவே தமது மண்ணின், மொழியின் தொடர்பு அறுந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய அக்கறையும், ஆர்வமும் இருக்கிறது. அவர்களுக்கு இணைய இதழ்களின் மூலமே தங்களது தாய்மண்ணைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. கீற்று தளத்தை எடுத்துக்கொண்டால் ஐம்பது விழுக்காடு வாசகர்கள் இந்தியாவிலும், ஐம்பது விழுக்காடு வாசகர்கள் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். ஆனாலும் கூட எங்களுக்கு வரும் எதிர்வினைகளை எடுத்துப் பார்த்தால் அவைகளில் பெரும்பகுதி வெளிநாடு வாழ் தமிழர்களிடம் இருந்து வருவதாகத்தான் இருக்கிறது.

கேள்வி: ஒரு அச்சுப் பத்திரிகையின் பதிப்பாளருக்கு பத்திரிகை எவ்வளவு விற்கிறது என்ற புள்ளி விவரம் தெரியும். ஆனால் இணைய இதழ்களில் இந்த கணக்கு எப்படி எடுக்கப்படுகிறது?

அச்சு இதழ்களை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று கணக்கு போடுவது தோராயமாகத்தான். 3000 பிரதிகள் விற்கிறது என்றால் 3000 X 5 = 15000 பேர் படிப்பதாகத்தான் கணக்கு போடுவார்கள். இந்த 5 என்பது ஒரு பத்திரிக்கையை ஒருவர் வாங்கினால் அதை 5 பேராவது வாசிப்பார்கள் என்ற கணிப்பின் அடிப்படையில் கூறப்படுவது. ஆனால் இணைய இதழ்களைப் பொறுத்தவரை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை மிகத் துல்லியமாக கணக்கிட்டு சொல்லும் வகையில் தொழில்நுட்பம் இருக்கிறது.

இணைய இதழை தினம் எத்தனை பேர் வாசிக்கிறார்கள், எந்தெந்த நாடுகளில் வாசிக்கிறார்கள் என்ற விவரத்தை அறிய முடியும். உதாரணமாக கீற்று இணைய தளத்தை 79 நாடுகளில் வாசிக்கிறார்கள் என்ற விவரம் எங்களுக்குத் தெரியும். அது மட்டுமல்ல, எவ்வளவு நேரம் இணையத்தில் இருந்தார்கள், எத்தனை பக்கங்கள் வாசித்தார்கள், எத்தனை பேர் மீண்டும் மீண்டும் இணைய தளத்துக்கு வருகிறார்கள், ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எத்தனை பேர் வாசித்தார்கள், எந்தப் பக்கத்தை வாசகர்கள் அதிகம் விரும்பி படிக்கிறார்கள், இந்தியாவில் இருந்து எத்தனை பேர், அமெரிக்காவில் இருந்து எத்தனை பேர், எந்த சர்வீஸ் ப்ரோவைடரில் (BSNL, Airtel போன்றவை) இருந்து எத்தனை பேர் போன்ற துல்லியமான புள்ளி விவரங்களை இணைய இதழ் நடத்துபவர்களால் பெற முடியும். இவ்வளவு ஏன்? தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவேடார் நாட்டில் கீற்றுக்கு ஒரு வாசகர் இருக்கிறார் என்ற விவரம் கூட எங்களுக்குத் தெரியும். அங்கே இருக்கும் தமிழர்களில் இவர் மட்டுமே அரசியல் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவராக இருக்கலாம்.

அதே நேரத்தில், சாருநிவேதிதா போன்றவர்கள் தங்களது வலைத்தளத்தை ஐந்தரை லட்சம் பேர் படிக்கிறார்கள் என்று சரடு விடுவதையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். ‘Network traffic’-ஐ அறிய உதவும் ‘Third party’ இணைய தளங்கள் மூலம் ஒரு இணைய இதழை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை தோராயமாக கணக்கிட முடியும். முடிவுகள் சற்று கூட, குறைய இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் துல்லிய மதிப்புக்கு அருகிலேயே இருக்கும்.

துல்லியமான கணக்கை அந்தந்த இணையதள நிர்வாகிகள் அறிய முடியும். இந்தக் கணக்கு விளம்பரங்கள் பிடிக்க உதவி புரியும். உதாரணமாக அமெரிக்காவில் வாசகர்கள் அதிகம் இருக்கும் ஒரு இணைய இதழுக்கு அமெரிக்கா சார்ந்த விளம்பரங்களைப் பெறுவதற்கு இந்த புள்ளி விவரங்களைக் காட்டுவார்கள். இந்த புள்ளி விவரங்களை வைத்து தான் விளம்பர தொகையையும் நிர்ணயம் செய்கிறார்கள்.

கேள்வி: பொதுவாக இணைய இதழ்களின் வாசகர்கள் எப்படிப்பட்டவர்கள்? எந்த நிலைப்பாட்டில் உள்ளவர்கள்? இணையம் ஆர். எஸ்.எஸ்.காரர்கள் கைகளில் இருக்கிறது என்று ஒரு கருத்து நிலவுவது உண்மைதானா?

பதில்: முன்னர் அப்படி ஒரு நிலை இருந்தது உண்மைதான். இப்போது மாற்றுச் சிந்தனை உடையவர்களும் இணையத்தில் அதிகரித்து விட்டார்கள். முன்னர் பெரியாரியத்தையும், மார்க்சியத்தையும் அவர்களால் மிக எளிதாக விமர்சித்து விட்டுப் போக முடிந்தது. இப்போது எழுதினால், மிகக் கடுமையான எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். கீற்று தொடங்கப்பட்டபோது, பார்ப்பனியத்தை விமர்சிக்கும் கட்டுரைகளை வெளியிட்டால், ஆதரவாக ஓரிரு மின்னஞ்சல்கள் மட்டுமே வரும், எதிராக நிறைய வரும். இப்போது சரிக்குச் சரியாக இருக்கிறது.

கேள்வி: இணைய இதழ்களுக்கென்று வாசகர் வட்டங்கள் உள்ளனவா? அவர்களுக்கான சந்திப்புக்கு ஏற்பாடுகள் உண்டா?

பதில்: வலைப்பதிவர்கள் அவ்வப்போது சந்தித்துப் பேசுகிறார்கள். இணைய இதழ்களுக்கு என்று தனியாக ஏதேனும் வாசகர் வட்டம் உள்ளதுவா என்று தெரியவில்லை. கீற்றுவுக்கு இதுவரை நாங்கள் முயற்சிக்கவில்லை. இனிதான் அதற்கான வேலைகளை தொடங்க வேண்டும். அப்படி ஏற்பாடு செய்தால் சென்னையில் குறைந்தது 50 பேராவது வருவார்கள் என்று நம்புகிறோம்.

கேள்வி: இணைய இதழ்களுக்கு விளம்பரங்கள் பெறுவதில் சிக்கல்கள் உள்ளனவா?

பதில்: அது நீங்கள் என்ன நிலைப்பாட்டுடன் இணையத்தை நடத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. விளம்பரங்களுடன் இலாபகரமாக இயங்கும் இணையங்களும் இருக்கின்றன. கீற்றுவுக்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டுவதற்காக - நண்பர் ஒருவரது பரிந்துரையுடன் - ஒரு நிறுவனத்திடம் சென்று விளம்பரம் கேட்டோம். முற்போக்கான பத்திரிக்கைகளில் அவர்களது விளம்பரங்களை அவ்வவ்போது பார்த்திருக்கிறோம். நாங்கள் அணுகியபோது, பரிசில் பெறவந்த புலவர்களை நடத்தும் தொனி அதன் உரிமையாளரிடம் இருந்ததை உணர்ந்து, திரும்பி விட்டோம். அதன் பிறகு வேறு யாரிடமும் விளம்பரங்கள் கேட்டு அணுகவில்லை. தானாக முன்வந்து யாரும் விளம்பரம் தந்ததில்லை. அரசியல் நிலைப்பாடு காரணமாக விளம்பரங்களை அளிப்பதற்கு தயங்குகிறார்களோ என்னவோ? என்ன இருந்தாலும் தினமலருக்கு கிடைக்கும் விளம்பரங்கள் தீக்கதிருக்குக் கிடைக்காது தானே?

விளம்பரங்கள் இல்லாது இணையத்தை நடத்தும் கஷ்டத்தை விட, திராவிட இயக்க மற்றும் இடதுசாரி இயக்க எழுத்தாளர்கள் கீற்றுவை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை என்ற வருத்தம் எங்களுக்கு அதிகம் உண்டு.

(18.8.2008 அன்று தீக்கதிர் இலக்கியச் சோலை பக்கத்தில் வெளிவந்த நேர்காணலின் முழுமையான வடிவம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக