சனி, 19 செப்டம்பர், 2015

அ.தி.மு.க.வுக்கு மேல்–சபை எம்.பி. பதவி வழங்கி பிராயச்சித்தம் தேடிய ரங்கசாமி

புதுவை ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் எளிதில் வெற்றி பெறும் அளவுக்கு ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தது. ஆனால், அந்த கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களின் செயல்பாடுகளால் தேர்தலில் வெற்றி பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டது.
எதிர் தரப்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி களம் இறங்கினார். அவருக்கு சில கட்சிகளும் சாதகமாக செயல்பட்டது. அ.தி.மு.க. தேர்தலை புறக்கணிக்கும், இதனால் பொது வேட்பாளர் எளிதாக வெற்றி பெறலாம் என்று அவர் திட்டமிட்டிருந்தார்.
இந்நேரத்தில் பொது வேட்பாளருக்கு எதிர்ப்பாக இருந்த கட்சி அதிமுகதான். அதிமுகவுடன் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு தராததால் அ.தி.மு.க.வுக்கும், என்.ஆர். காங்கிரசுக்கும் இடையில் ஏற்பட்ட உறவு தேர்தலோடு பிரிந்துவிட்டது.
இதனால் தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.வை எப்படி அணுகுவது என்பதில் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேள்விக்குறி எழுந்தது.
இந்த நிலையில் அ.தி.முக.விடம் ஆதரவு கேட்கும் பணியை முதல்–அமைச்சர் ரங்கசாமி, ராதாகிருஷ்ணன் எம்.பி.யிடம் ஒப்படைத்தார். அவர் தனக்கு நெருக்கமான நண்பரான அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகனிடம் பேசினார். அப்போது முறிந்துவிட்ட கூட்டணி உறவை புதுப்பிக்கலாம் என்றும் வருங்காலத்தில் சட்டமன்ற தேர்தலையும் இணைந்தே சந்திக்க ஒரு வாய்ப்பும் ஏற்படும் என்று கூறினார்.
இதையடுத்து தி.மு.க.வை சேர்ந்தவர் பொது வேட்பாளராக களம் இறங்கப்போவதை கட்சியின் தலைமைக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. எடுத்து கூறினார். கட்சி தலைமை புதுவையில் உள்ள 5 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து பேசியது. தி.மு.க.வைச் சேர்ந்தவரின் வெற்றியை தடுக்க முடியுமா? எந்த வழியில் இதை தடுக்கலாம்? என்றும் கேள்வி எழுப்பியது. இதை தடுக்க அதிரடி வியூகம் அமைக்கவும் கட்சித்தலைமை அறிவுறுத்தியது.
கட்சித்தலைமையின் உத்தரவை அன்பழகன் எம்எல்ஏ நிறைவேற்ற முடிவு செய்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல என்ஆர்.காங்கிரசிடம் நட்புறவு பாராட்ட திட்டமிட்டார். அதேநேரத்தில் ஆட்சியை காப்பாற்றவும், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாளிக்கவும் அ.தி.மு.க.வை நாடுவதைத்தவிர வேறு வழியில்லை என்று என்ஆர்.காங்கிரசும் நினைத்திருந்தது.
இதனால் அ.தி.மு.க.வும், என்.ஆர். காங்கிரசும் பேச்சுவார்த்தை நடத்துவது எளிதாக இருந்தது. இரவு, பகலாக ராதாகிருஷ்ணன் எம்.பி. மற்றும் அன்பழகன் எம்.எல்.ஏ. தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடக்கத்தில் முதல்வர் ரங்கசாமி தனது கட்சிக்கு எம்.பி. பதவியை விட்டுக் கொடுக்கும்படிதான் கேட்டார். ஆனால் இதற்கு அன்பழகன் சம்மதிக்கவில்லை. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும், கடந்த சட்டமன்ற தேர்தலில் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ளும் வகையில் அதிமுகவுக்கு எம்.பி. பதவியை தர வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு கட்டத்தில் ரங்கசாமி இதற்கு உடன்பட்டாலும் வேட்பாளர் யார்? என்ற அடுத்த கேள்வி எழுந்தது. அப்போது முதல்வர் ரங்கசாமி தன் கட்சியின் வேட்பாளரையே அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிறுத்திக்கொள்ளும் யோசனையை தெரிவித்தார்.
இந்த யோசனை அன்பழகன் எம்.எல்.ஏ. வழியாக கட்சித்தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது. கட்சி தலைமையும் அனுமதி வழங்கியதால் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த தொழிலதிபர் கோகுலகிருஷ்ணனே அ.தி.மு.க. சார்பில் களம் இறக்கப்பட்டார்.
பின்னர் அ.தி.மு.க. அதிரடியாக உள்ளே நுழைந்தது பொது வேட்பாளரை பின்னடைய செய்தது. இறுதிவரை அவர் தன் முகத்தை காட்டாமலேயே பின்வாங்கி சென்றார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. போட்டியிட்டது. இதில் தோல்வியடைந்தது. இதனால் மாநில செயலாளர் அன்பழகன் பதவி பறிக்கப்பட்டது. தற்போது அன்பழகன் மக்களவையில் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காத எம்பி பதவியை மாநிலங்களவையில் கிடைக்கச் செய்துள்ளார். இதன்மூலம் ஆட்சியில் பங்கு கொடுக்காத ரங்கசாமி, தனக்கு கிடைக்க வேண்டிய எம்பி பதவியை அ.தி.மு.க.வுக்கு பரிசாக வழங்கி பிராயச்சித்தம் தேடிக்கொண்டார்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக