சனி, 26 செப்டம்பர், 2015

லாட்டரி மார்ட்டின் வீட்டில் 1000 கோடி பறிமுதல்! தாவூத் இப்ராகிமுக்கு ரூ.5,000 கோடி கடத்தலா?

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிலும், சிலிகுரியிலும் தமிழகத்தைச் சேர்ந்த லாட்டரி ஏஜெண்டு மார்ட்டினுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு 11 டிராலி பேக்குகளில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. கொல்கத்தாவிலும், சிலிகுரியிலும் மொத்தம் ரூ.1000 கோடி பணம் சிக்கியது.
இதைத் தொடர்ந்து லாட்டரி ஏஜெண்டு மார்ட்டினுக்கு நெருக்கமானவரான தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.நாகராஜன் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் பிடித்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.
நாகராஜனின் ஏஜெண்டுகளான பேட்ரிக், அலெக்சாண்டர் ஆகியோர் பெயரில் கொல்கத்தாவில் வீடுகள் வாடகைக்கு எடுத்துள்ளனர். சோதனை நடப்பதற்கு சற்றுமுன் இருவரும் தப்பி விட்டனர்.

வெளி மாநிலங்களில் ரூ.4,500 கோடி அளவுக்கு லாட்டரி முறைகேடுகள் நடந்து இருப்பது பற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. தற்போது ரூ.1,000 கோடி பணம் சிக்கியதன் மூலம் இது ஹவாலா பணமா? என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
நாகராஜன் லாட்டரி விற்பனையுடன் ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்டதும், 8 ஆண்டுகளாக இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அவர் பலமுறை அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போது அவரது பாஸ் போர்ட்டை அதிகாரிகள் கைப்பற்றி எந்தெந்த வெளி நாடுகளுக்கு சென்று வந்துள்ளார் என்று விசாரணை நடத்தினார்கள்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் மும்பை தாதா தாவூத் இப்ராகிமுக்கும் மேற்கு வங்காள ஹவாலா கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. நிதி அமைச்சக புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்கும் உத்தரவிட்டது.
அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேற்கு வங்காளத்தில் அலுவலகங்கள் நடத்துவதை புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் சிலரது வங்கி கணக்குகளில் திடீர் என்று லட்சக்கணக்கில் பணம் போடப்பட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்த போது அவர்கள் லாட்டரியில் விழுந்த பரிசு பணம் என்று தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் ஹவாலா பணத்தை லாட்டரி பரிசு பணம் என்று சொல்லி வங்கியில் டெபாசிட் செய்து இருப்பது தெரிய வந்தது.
மேற்கு வங்காள ஹவாலா கும்பல் பெருமளவு பணத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் ஹவாலா பணம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பணம் கராச்சியில் பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிம் ஆட்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.5,000 கோடி அளவுக்கு பணம் கடத்தப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1175 செல்போன் மற்றும் போன் நம்பர்களை ஆய்வு செய்தனர். அப்போது 305 எண்கள் இந்தியாவில் இருந்து பேசப்பட்டது. அந்த டெலிபோன் உரையாடல்கள் மூலம் தாவூத் இப்ராகிம் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேற்கு வங்காளத்தில் ஹவாலா பணம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் 150 வங்கி கணக்குகளை பல்வேறு நபர்கள் பெயர்களில் போலீயாக தொடங்கி இருக்கிறார்கள். நாடு முழுவதும் 1,200 போலி வங்கி கணக்குகள் தொடங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
நாகராஜன் பல வருடங்களாக போலியாக லாட்டரி நடத்தி பொது மக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி மோசடி செய்து இருக்கலாம் இந்த மோசடி பணத்தின் மூலம் ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக