வியாழன், 27 ஆகஸ்ட், 2015

பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் கள்ள உறவு வைத்திருக்கிறது எனும் இளங்கோவனின் ஒரு வசனத்துக்காகத்தான்.....

jaya (1)ஜெயாவிடம் எகிறிய சு.சாமிக்கு இந்துஞான மரபின்படி அ.தி.மு.க. மகளிரணியை வைத்து கொடுத்த `வரவேற்பு’ இப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கிடைத்திருக்கிறது. “நாயே.. பன்றி.. ..மவனே!” இன்ன பிற ஜெயார்ச்சனைகள் தமிழகம் முழுவதும் எதிரொலித்து வந்தன. பிறகு போரடித்து விட்டதோ என்னமோ போதும் என்று அம்மாவே ஜாடை காட்ட ரத்தத்தின் ரத்தங்கள் நிறுத்தியுள்ளன.
சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் ஸ்டேசனில் பத்மினி என்ற பெண் காக்கி மிருகங்களால் குதறப்பட்டபோது “அந்தப் பெண் நடத்தை சரியில்லாதவர்” என்று கூறியவர் மாண்புமிகு அம்மா. அப்பேற்பட்டவர்கள் அறத்துக்காக சினமடைந்தனர் என்பதை அ.தி.மு.க அடிமைகளே கேலி செய்வர்.
பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் கள்ள உறவு வைத்திருக்கிறது எனும் இளங்கோவனின் ஒரு வசனத்துக்காகத்தான் பெண்ணினத்தயே தரக்குறைவாக்கிவிட்டார் என்று பெட்ரோல் குண்டு வீசி, கட்சி ஆபிசை கல்லால் அடித்து, சாலைகளை மறித்து கொடும்பாவி எரித்து,
நெல்லை மேயர் பாலத்திலிருந்தே குதித்துவிடுவேன் என்று போலீசு பாதுகாப்புடன் `அறவழியில்’ போராடியது அ.தி.மு.க அடிமைக் கூட்டம்.
பெட்ரோல் குண்டு வீசும் காலிகளை தடவிக் கொடுக்கும் தமிழகப் போலீசின் கைகள்தான் டாஸ்மாக் பாட்டிலை உடைத்த மாணவர்களின் கழுத்தை நெறித்து, சட்டம் ஒழுங்கை பாதுகாத்தது என்பதை மறந்துவிட வேண்டாம்!
“உன்னை பத்தி தெரியாதா? உன் கதைய எடுத்து விடவா? எங்க அம்மாவ சொன்ன… உங்க அம்மாவ சொல்லுவேன்? ” என்ற வசனங்கள்தான் ஓட்டுக்கட்சிகளின் கொள்கை முழக்கங்கள். இந்த கொடுக்கல் வாங்கல்தான் இவர்கள் மக்களுக்கு வழங்கும் பரபரப்பு அரசியல். இந்தக் கலாச்சாரத்தில் ஓட்டுக்கட்சிகள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.
jaya (3)
ஜானகி அணியிலிருக்கும் போது வளர்மதி பேசாத பேச்சா?
இருந்தாலும் இழித்துப் பேசப்பட்டவர் ‘அம்மா’ என்பதால் சும்மா இருக்குமா சட்டம்- ஒழுங்கு அது இஷ்டத்துக்கு அங்கங்கே ரோட்டில் வைக்கோல் பொம்மையாய் எரிய, அன்றாடப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட டீசன்டான நடுத்தரவர்க்கத்தின் மனசாட்சிக்கு பதில் சொல்லும் பொறுப்பும், சுமையும் ஊடகங்களை பற்றிக்கொண்டன. ஜனநாயகம் கருகும் வாசனை வரும்போது அதன் காவலர்களான நான்காவது தூண் வாளாயிருக்குமா?
என்ன இருந்தாலும் “அநாகரிமாக பேசுவதும் தவறு” ” அதற்காக ஆளும் கட்சியே சட்டம் – ஒழுங்கை சீர்குலைப்பதும் தவறு” என்று இரட்டை நாயனத்தால் காதுகளை கிழித்துவிட்டன காட்சி ஊடகங்களின் விவாத கச்சேரிகள். கொடும்பாவியையும் கொளுத்தி, அந்த ஆள் மேலேயே ஒரு கொலை மிரட்டல் கேசையும் கொளுத்திப் போட்டு, இளங்கோவனின் தீர்த்தயாத்திரை இப்போது தல்லாகுளத்தில்!
இளங்கோவனின் பேச்சு அதற்கு ஜெயா கும்பலின் பதிலடி என்ற பரபரப்பின் மூலம் தமிழகத்தின் தெருக்களில் ஒலிக்கும் டாஸ்மாக் ஒழிப்புக் குரலை பின்னுக்குத் தள்ளுவதில் அனைத்து ஊடகங்களும் தன்னியல்பாக பங்காற்றின. டாஸ்மாக் ஒழிப்பு போராட்டத்தின் வீச்சை உழைக்கும் பத்திரிகையாளர்களும், ஊடகவியல் உழைப்பாளிகளும் தொடர்ந்து ஆவணப்படுத்தினாலும், “இப்போதைக்கு இதுதான் பெரிய பிரச்சனை” என்று வோறொன்றின் பக்கம் மக்களின் கவனத்தை திருப்புவதில் ஆளும் வர்க்கத்தின் நோக்கம் ஒரு அனிச்சை செயலைபோல அவர்களின் பல்வேறு உறுப்புகளுக்குள் ஒருங்கிணைந்து செயலாற்றுவதை இந்தப் பிரச்சனையும் எடுத்துக்காட்டியது.
அதுமட்டுமின்றி அரசியல் பார்வையாளர்களுக்கு இவர்கள் விவாதப்பொருளாக்கும் விசயத்திலும் “முதலாளித்துவ ஜனநாயகம்” என்ற வரம்புக்குள்ளாகவே எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ள வலியுறுத்துவதும்தான், இவர்கள் நடந்ததாய் காட்டும் தரக்குறைவான அரசியலை விட தரம் தாழ்ந்ததாக உள்ளது.
உதாரணத்திற்கு இளங்கோவன் பேசியதை வைத்து ஜெயா கும்பல் உருவாக்கிய பரபரப்பை வைத்து இவர்கள் மக்களுக்கு சொல்ல வந்த அரசியல்தான் என்ன? முதலாவதாக முதல்வரையும், பிரதமரையும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசுவது சரியா? தனி நபர் தாக்குதல் ஆரோக்கிய அரசியலல்ல, இது நாகரிகமா?” என்றெல்லாம் செத்துப் போனவன் தலையில் பேன் பார்த்த கதையாய் இந்த இத்துப்போன ஜனநாயகத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக குழப்பினர்.
முதலாளித்துவ அரசியலுக்கும், நாகரிகத்திற்கும் துளியும் சம்மந்தம் கிடையாது என்பதை கோமாவில் கிடப்பவனே குறிப்பாக ஒத்துக்கொள்வான். அம்மா – ஐயா, கேப்ட்டன், மோடி என்று தன்னை மட்டுமே அரசியலாக முன்னிறுத்தும் தனிநபர்வாத அரசியல் கதாநாயகர்கள் தாக்குதல் வரும்போது மட்டும் தனிநபராக தாக்குவதா என அலறுவதற்கு முதலில் அவர்களுக்கு யோக்கியதை இல்லை. இதை பகிரங்கமாகப்பேச இந்த ஜனநாயக தினக்கூலிகள் தயாராயில்லை.
jaya (4)
அமைச்சர் அடிமைகளில் ஆபாசமாக பேசாவர் யாரேனும் உண்டா?
முதலாளித்துவ நிறுவனங்கள் ஒரு பொருளை சந்தைப்படுத்துவது போல எப்போதும் பவுசுபவுசாக தன் மூஞ்சியைக்காட்டுவதும், தினுசு தினுசாக தன் பெயரை காட்டுவதையுமே கவர்ச்சி அரசியலாக பரப்பிவிட்டு சீரழிப்பவர் யார்? இந்த ஜனநாயகத்தின் தரத்தில்தான், இவர்கள் தாக்குதல்களும் இருக்கும் என்ற அரசியல் உண்மையை பேசுவதற்கு எண்ணமின்றி, இதெல்லாம் சில தனி நபர்களின் தனிப்பட்ட பண்புகளால் வருவதுதான், மற்றபடி நமது ஜனநாயகம் மதிப்பு வாய்ந்தது என்று மாஞ்சா போட்டு கழுத்தறுப்பதுதான் ஆளும் வர்க்க அறிவாளிகளின் இலக்கு.
இந்த இடுக்கில் கடுக்கன் கழட்டுவது போல இந்த தரக்குறைவான அரசியலை தொடங்கி வைத்ததே திராவிடக்கட்சிகள்தான் , அதுவும் தி.மு.க. தான் என்று பார்ப்பன ஊடகக்கிருமிகள் நேரம் பார்த்து காதைக் கடிக்கின்றன. ரீலை பாதியிலேந்து ஓட்டும் இந்த பார்ப்பன பண்பாட்டாளர்களின் வரலாற்று யோக்கியதை என்ன? மனுவின் காலத்திலேயே உழைக்கும் மக்களின் பிறப்பை இழிவுபடுத்தியும், பகவத்கீதையில் பெண்களை தரக்குறைவாக ( பாவயோனி! ) பேசியும்; எதிர்க்கும் திராவிடப் பெண்களை பூதகிகள், ராட்சசிகள் என்று அநாகரிகமாக வருணிப்பதும் ‘அவாள்’ தொடங்கி வைத்த அரசியல் நாகரிகமாயிற்றே!
இடையில் உங்கள் ‘தகுதிக்கு’ வளர்ந்தவர்களை மட்டும் பாவிகளாக்கினால் எப்படி? சட்டமன்றத்திலேயே உங்கள் ‘தீரர்’ சத்தியமூர்த்தி தேவதாசி ஒழிப்பை முன்வைத்த டாக்டர் முத்துலட்மிரெட்டியை பார்த்து பேசாதா பேச்சா! முன்னேறியதாய் சொல்லும் முதலாத்துவ ஜனநாயகத்திற்கே கெட்ட வார்த்தைகளை வாரி வழங்கிய வேத கடாட்சம் இந்து கலாச்சாரமல்லவா?
எனவே, “அரசியல் நாகரிகம், தரம்” என்பதை தமிழகப் பார்ப்பனக் கும்பல் வருணபேதத்தால் வரையறுப்பதுபேல திராவிட இயக்கம் வந்துதான் இப்படி ஆனது என்பது புழுத்துப் போனவன் புண்ணைப் பார்த்து சிரித்த கதைதான். தனிநபரின் பண்புகளும், குறிக்கோளும் சேர்ந்து பண்பாட்டில் வெளிப்படுகிறது என்பது ஒரு உண்மை, என்றாலும் அது முதலாளித்துவச் சூழலின் மூலத்திலிருந்து வேறுபட்டதல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஒரே முதலாளித்துவ அரசியலில் இருப்பவர்களின் வேறுபட்ட மாற்றங்கள் , நடத்தைகளை வைத்து அவர்களை முதலாளித்துவ அரசியலிலிருந்தே வேறுபட்டவர்கள் என்று கருதுவது தவறானது. மாறாக இப்படி விதவிதமான, வேறுபட்ட ஒழுக்ககேடுகளின் தன்னிறைவுதான் முதலாளித்துவ அரசியலே. முதலாளித்துவத்தின் குரலை அதானி ஒரு மாதிரி பேசினால், ‘அம்மா’ ஒரு மாதிரி பேசுவார்! மோடியின் வாயிலிருந்து பிகாரின் டி.என்.ஏ. பற்றி வருவது ஒரு வகை, இளங்கோவன் வாயிலிருந்து வருவது இன்னேரு வகை, இவர்களுக்கு வாய்கள் வேறு, ஆனால் வர்க்கம் ஒன்று!
இந்த ஜனநாயகமே இப்படித்தான் என்ற முடிவுக்கு மக்கள் எதார்த்தமாக வருவதை தடுத்து இது தனிநபர்களின் வெளிப்பாடு என்பதாக மட்டும் பார்க்க பழக்கும் முதலாளித்துவ அறிவாளிகளின் வரம்பைக் கடந்து இந்த ஜனநாகத்தின் தரக்குரைவை நாம் விவாதிக்க முன் வர வேண்டும். சுரண்டல், அடக்குமுறை என்ற தரக்குறைவான உள்ளடக்கத்தையே கோட்பாடாகக் கொண்டிருக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து ஆரோக்கியமான அரசியல் பிறப்பது முடியாது. தனிநபரின் இயல்புகள் இந்த விகாரத்தை வீரியப்படுத்தலாம். ஆனால் தோற்றுவித்து தொற்று நோய் போல பரப்புவது முதலாளித்துவ ஜனநாயக அரசியல் என்பதே உண்மை.
அடுத்தவனை ஒழித்துவிட்டு ஆதாயத்தைப் பார் என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்த ஜனநாயகத்தின் தரத்தை விவாதிக்காமல், வெறுமனே தனிநபரின் தரமாக இதை வெட்டிச் சுருக்குவதும் அநாகரிக அரசியல்தான்.
பெண்ணை இழிவுபடுத்தும் பிரச்சனை மட்டுமல்ல, இந்த மண்ணையே இழிவுபடுத்தும் அன்னிய – கார்ப்பரேட் தரகுமுதலாளிகளின் அநாகரிக ஆக்கிரமிப்பிலிருந்தும் நாட்டை மீட்க இந்தப் போலி ஜனநாயகத்தால், குறிப்பாக முதலாளித்துவ ஜனநாயகத்தால் முடியாது என்பதுதான் நடைமுறை காட்டும் உண்மை. மக்களை அமைதியாக வளர்ச்சிப் பாதையில் வாழவைக்கும் என்று நம்பிக்கை ஊட்டிய உலக முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகி தோல்வியுற்று பல்லைக் காட்டி நிற்கிறது. இந்தியாவில் இந்த ஜனநாயகத்தின் அனைத்து அரசமைப்பு உறுப்பும் எதிர்சக்திகளாக மாறி தான் செய்வதாய் சொன்ன வேலைகளையே செய்ய லாயக்கற்றதாகி மக்களுக்கு பகை சக்தியாக பரிணமித்து விட்டது. சாராயத்தை ஒழிக்க வேண்டிய போலீசு சாராய கடைக்கு காவல் இருக்கிறது.
உச்சபட்சமாக நீதித்துறையே நீதியை விலைபேசும் துறையாக மாறியும் ‘மக்களுக்காக’ என்ற பெயரளவிலான திரைகளையும் களைந்துவிட்டு பச்சையாக முதலாளிகளின் அடியாளாக அரசு நிற்கிறது. இதுதான் இன்று நாம் காணும் ஆளும் வர்க்கத்தின் தரம்!
jaya (2)
சுயமரியாதையே இல்லாத கூட்டத்திற்கு நாகரீகம் குறித்து ஏன் கவலை?
இது இனி மக்களுக்கு உதவாது என்பது அன்றாட நடப்பாக ஆன பிறகு இதையே நிரந்தரமாக மக்கள் மீது திணிக்க ஆளும்வர்க்க உறுப்புகள், அதன் ஒரு பிரிவான ஊடகங்கள் முயலுகின்றன. தானே வகுத்துச் சொன்ன கடமையிலிருந்து தரமிழந்து, விலகிய இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் இனி மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே இதற்கு வெளியே மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை நிறுவிக் கொள்ளும் அடுத்த கட்ட அரசியலுக்கு முன்னேறுவதுதான் வரலாற்று வளர்ச்சி விதி.
இதை சட்டவிரோதம் ஜனநாக விரோதம் என்று சொல்லுவதற்க்கு தனக்குத்தானே விரோதமான இந்த அரசமைப்பிற்க்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் உலகத்திலேயே இறுதியான வடிவம் இன்று இருக்கும் முதலாளித்துவ ஜனநாகயகம்தான் என்று வரம்பிடுவதும் முட்டாள்தனமானது. இதுவே மாறதது, மாற்றக்கூடாதது என்பது அரசியல் தற்குறித்தனமும், வர்க்க நலனும் சார்ந்தது.
சமுதாய அமைப்பு, வரலாற்றில் பல வடிவங்களை கடந்துதான் முதலாளித்துவ ஜனநாயக அரசும் வந்துள்ளது. மன்னர் காலத்தில் மன்னர் ஆட்சிகூட மாறாதது மாற்ற முனைந்தால் சட்டவிரோதமானது என்றுதான் நிலைமை இருந்தது. பிரிட்டீஷ் ஆட்சிகாலத்திலும் அரசமைப்பை எதிர்பதை சட்டவிரோதம் என்றுதான் சொன்னது. ஆனால் மக்களின் ஜனநாயக வேட்கை முதலாளித்துவ அடக்கு முறைகளோடு முடிந்துவிடுவதில்லை. அது தங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் கொண்ட, வர்க்க நலன் சார்ந்த ஒரு அரசமைப்பை நோக்கி முன்னேறியே செல்லும்.! இந்த திசையில் ஆளும் வர்க்க வரம்பையும் , முதலாளித்துவ சர்வாதிகார இழிவையும் தாண்டி சிந்திப்பது்தான் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிறுவும் அரசியல் ஆரோக்கியத்தின், தரம் நோக்கிய முன்னேற்றத்திற்கான முதல்படி.!
இதை எதிரிவர்க்கம் தானாக வழங்காது . அன்றாட நடைமுறை பிரச்சனைகளின் வெளிப்பாட்டிலிருந்து மக்களுக்கு இந்த சிந்தனையை வழங்கும் அரசியல் நாகரிகத்தை உழைக்கும் வர்க்கமாகிய நாம் வழங்குவோம்.
–          துரை.சண்முகம் வினவு.com
படங்கள் நன்றி: outlook வார இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக