வியாழன், 6 ஆகஸ்ட், 2015

போர்ன் தடை- ஷோபாசக்தி: உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில்.........

நாளை நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில் ஈடுபடும் காட்சி இவ்வகை இணையத்தளங்களில் ‘லைவ்’வாக ஒளிபரப்பப்படுவதற்கு எல்லாவகையான சாத்தியங்களும் உண்டென்பதை மறவாதீர்கள்.
இந்தியாவில் ‘போர்ன்’ இணையத்தளங்கள் தடை செய்யப்படலாமா கூடாதா என்ற விவாதங்களைக் கவனித்தபோது ஒன்று சொல்லத் தோன்றுகிறது.
போர்ன் இணையத்தளங்களை தடைசெய்யக்கூடாது எனச் சொல்பவர்கள் தனிமனித சுதந்திரம், மேலைநாடுகளில் தடையில்லை, சிறுவர்கள் இவ்விணையங்களைப் பார்க்காமல் ஒழுங்குபடுத்தினால் போதுமானது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த சொல்விற்பன்னர்கள் அதிமுக்கியமான விடயங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.
இன்று உலகில் நடத்தப்படும் மனிதக் கடத்தல்களில் எண்பது விழுக்காடு கடத்தல்கள் பாலியல் வணிகத்திற்காகவே நடத்தப்படுகின்றன. ஜப்பானில் தொடங்கி இங்கிலாந்து அமெரிக்காவரை இந்தக் கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. சர்வதேச மாஃபியாக்களின் கையிலிருக்கும் இந்த வணிகம் போதைப்பொருள், ஆயுதக்கடத்தல் போன்றவற்றிற்கு இணையாகப் பணம் புழங்கும் தொழிலாகயிருக்கிறது.
போர்ன் இணையங்களில் வெளியாகும் காட்சிகளில் இவ்வாறாகக் கடத்திக்கொண்டு வரப்படும் பெண்களே பெரிதளவில் நடிக்கவைக்கப்படுகிறார்கள். இணையங்களின் வருகையோடு போர்ன் தொழிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப கடத்தப்படும் பெண்களும் சிறுமிகளும் அதிகரித்துள்ளார்கள்.
சிறுமிகளையும் சிறுவர்களையும் பாலியல் பண்டங்களாகக் காட்சிப்படுத்தும் ஏராளமான இணையத்தளங்கள் உள்ளன. இவற்றை அரசுகளால் இன்றுவரை கட்டுப்படுத்த முடியாமலேயே இருக்கின்றது. சிறுவர் பாலியல் இணையங்களும் பல்லாயிரக்கணக்கில் புதிது புதிதாகத் தோன்றியவண்ணமேயுள்ளன.
போர்னோவில் ‘அடிமைகள்’, ‘அடித்தல்’, ‘அவமானப்படுத்தல்’, ‘விலங்குகளோடு புணர்ச்சி’ என்றெல்லாம் ஏராளம் வகைப்பாடுகளுள்ளன. சட்டவிரோதமாக அல்லது ஏமாற்றி அழைத்துவரப்படும் பெண்களும் இந்தப் படங்களில் நடிக்க வைக்கப்படுகிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் உண்மையாகவே பெண்கள் மீது சித்திரவதையை நடத்தி அதை இரத்தமும் பாலும் வழிய இணையங்களில் போடுகிறார்கள்.
பாலியல் விடுதிகளிலே அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் சிறுமிகள் மத்தியில் ‘வன்முறை செக்ஸ்’ குறித்த அச்சத்தைப் போக்கவும் வாடிக்கையாளரின் எந்த விருப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே என்பதைச் சிறுமிகளின் மனதில் படியச் செய்யவும் போர்ன் படங்களே பெரிதும் உபயோகிக்கப்படுகின்றன. இத்தகைய அடிமைச் சிறுமிகள் இருக்கும் விடுதிகளில் இந்தப் போர்னோ படங்கள் இடைவிடால் ஓடவைக்கப்படுகின்றன.
போர்னோவில் நாம் காணும் காட்சிகள் பெரிதும் மிகையானவை மற்றும் போலியானவை. இத்தகைய காட்சிகளில் வன்முறை இருப்பது பொதுவானது. இக்காட்சிகள் மெதுமெதுவாக மனித மனதில் பாலுறவு குறித்த இயல்புக்கு மாறான வன்முறைச் சித்திரத்தைப் பதிய வைக்கிறது. அது குடும்ப வன்முறையாக நீட்சியும் பெறுகிறது. போர்ன் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது மனச்சமநிலையைச் சரித்துவிடுகிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
இவ்வகைப் போர்னோ இணையத்தளங்கள் எல்லாமே ‘Hidden camera’ என்றொரு வகையை வைத்துள்ளார்கள். குளியலறைகளில், படுக்கையறைகளில், தங்குவிடுதிகளில், மசாஜ் சென்டர்களில், ஆடை அங்காடிகளில் சம்மந்தப்படவர்களிற்குத் தெரியாமலேயே எடுக்கப்படும் படங்கள் இப்பிரிவில் இணையங்களில் பதிவிடப்படுகின்றன. பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண்களும் குடும்பங்களும் தூக்கிலே தொங்கியிருக்கின்றன. அவமானத்தால் உயிருடன் செத்தவர்கள் பல இலட்சம். இதற்கெல்லாம் எந்த அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
போர்ன் இணையத்தளங்களிற்குப் பின்பு இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது போர்ன் இணையங்களைத் தடைசெய்யக்கூடாது எனச் சொல்வதில் ஏதும் நியாயங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நம்முடைய சில நிமிட காட்சியின்பத்திற்காக பெண்களும் சிறுமிகளும் கடத்தப்படுவதும் வதைக்கப்படுவதும் மனநிலை சரிவதும் மறுபுறத்தில் மாஃபியாக்களும் இணைய முதலாளிகளும் கொழிப்பதும் எதுவிதத்திலும் நியாயமற்றதென்றே நினைக்கிறேன்.
நாளை நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில் ஈடுபடும் காட்சி இவ்வகை இணையத்தளங்களில் ‘லைவ்’வாக ஒளிபரப்பப்படுவதற்கு எல்லாவகையான சாத்தியங்களும் உண்டென்பதை மறவாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக