சனி, 1 ஆகஸ்ட், 2015

சசிபெருமாள் கழுத்தில் இருந்த கயிறை அகற்றாதது ஏன்?: சக போராளி ஜெயசீலன் கேள்வி

மதுக்கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.இந்நிலையில் போராட்டம நடைபெற்றபோது உடனிருந்த உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவரும் பாஜக பிரமுகருமான ஜெயசீலன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மதுக்கடையை அகற்ற கோரி மது போதை ஒழிப்பு மக்கள் இயக்கம் சார்பில் இறுதிக்கட்ட போராட்டமாக தீக்குளிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காந்தியவாதி சசிபெருமாளும் நானும் கையில் மண்ணெண்ணை பாட்டிலுடன் செல்போன் டவரில் ஏறினோம். பாதி தூரம் ஏறியதும் உடல் சோர்வு காரணமாக நான் பாதியிலேயே நின்றுவிட்டேன். ஆனால் சசிபெருமாள் செல்போன் டவரின் உச்சிக்கு சென்றார்.
போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்தையில் ஈடுபடவில்லை. தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் வெயிலில் நாங்கள் அவதிப்படுவதை பார்த்த கீழே இருந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் 7 நாட்களில் மதுக்கடையை அடைப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
ஆனால் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கமுடியாத அளவுக்கு சோர்வாக இருந்த எங்களை தீ அணைப்பு வீரர்கள் மீட்க வந்தனர். முதலில் சசிபெருமாளை மீட்கும்படி நான் கூறியதால் தீயணைப்பு வீரர்கள் மேலே சென்றனர். அதற்குள் என்னை கீழே இறக்கினார்கள். அதன்பிறகு சசிபெருமாளை கீழே கொண்டு வந்தபோது அவரது வாய், மூக்கில் இருந்து ரத்தம் வந்து அவரது சட்டை ரத்த கரையுடன் காணப்பட்டது. மேலும் அவரது கழுத்தில் கயிறும் இருந்தது. அவரை மீட்கும்போது முதலில் கயிறை அகற்றாதது ஏன்?
மயங்கிய நிலையில் இருப்பதாகக் கூறி சசிபெருமாளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சசிபெருமாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தால் சசிபெருமாளை காப்பாற்றி இருக்க முடியும். எனவே சசிபெருமாள் மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக