சனி, 1 ஆகஸ்ட், 2015

சசிபெருமாள் செல்போன் டவரில் போராட்டம் நடத்துவதற்கு காவல் துறை எப்படி அனுமதித்தார்கள்?


மதுவுக்கு எதிராக போராடிய காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, காந்தியவாதி சசிபெருமாள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலை கடையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது, செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் மயங்கி விழுந்து இறந்தார்.


காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி:-

சசிபெருமாள் ‘‘செல்போன் டவரில்’’ உயர ஏறி போராட்டம் நடத்துவதற்கு காவல் துறையினரும், அரசினரும் எப்படி அனுமதித்தார்கள், அவர் நீண்ட நேரம் உச்சியிலே நிற்கும் வரை எவ்வாறு பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் வேதனையாக இருக்கிறது. காவல் துறையினரோ, அரசினரோ விரைவில் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் கடையை மூடுவதற்கு விரைவில் ஒப்புதல் அளித்திருந்தால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்காது. ‘‘துன்பம் எப்போதும் துணையோடு வரும்’’ என்பார்களே, அதைப் போல காந்திய வாதியான இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்த துயருடன் நாம் இருக்கும்போதே மற்றொரு காந்தியவாதியான சசி பெருமாள் மறைந்தது மிகுந்த துயரத்தை அளிக்கின்றது.

அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், தேசிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் களுக்கும், நண்பர்களுக்கும் தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

மது ஒழிப்புக்காக போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் மார்த்தாண்டம் அருகே மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

சசிபெருமாள் இறப்புக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். சசிபெருமாளின் மறைவு மதுஒழிப்பு போராட்டத்திற்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். சசிபெருமாளின் விருப்பப்படி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, நீண்ட காலமாக தனி மனிதனாக போராடிவந்த காந்தியவாதி சசிபெருமாள், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டபோது, போராட்டக் களத்திலேயே அவர் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

இந்த சம்பவத்திற்கு பிறகாவது பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

இந்த உயிரிழப்பு, இந்த தியாகம், மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை எழுந்திருப்பதையே காண்பிக்கிறது. எனக்குள்ள வருத்தமெல்லாம் அவர் எந்த காரணத்திற்காகப் போராடினாரோ, அந்த மதுவில்லாத தமிழகத்தைப் பார்க்காமலே உயிரிழந்துவிட்டாரே என்ற வருத்தம் தான். அவர் செய்திருக்கும் இந்த தியாகத்திற்கு பதில், மது முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே. பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:-

தமிழகத்தில் நடைபெறுகிற ஆட்சி செயல்படாமல் முடங்கிப் போனதால் தான் மது ஒழிப்பு கோரிக்கைக்காக சசிபெருமாள் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. தியாகி சசிபெருமாள் உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-

தமிழக அரசின் கண்கள் இந்த உயிர்த் தியாகத்திற்குப் பிறகாவது திறக்கப்பட வேண்டும். நாட்டில் பூரண மதுவிலக்கு விரைந்து வரவேண்டும் என்பதற்கு இத்தகைய கடும் விலை தேவைதானா?. தமிழக அரசு மதுக்கடைகளை மூட உடனடியாக முன்வர வேண்டும்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-

சசிபெருமாள் கோரிக்கையை ஏற்று அங்குள்ள மதுக்கடைகளை மூடியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அவரது போராட்டத்தையாவது தடுத்திருக்க வேண்டும். ஆனால், இவற்றில் எதையும் செய்யாதது தான் சசிபெருமாளின் இறப்புக்கு காரணம் ஆகும். இதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இனியும் இந்த விஷயத்தில் பிடிவாதம் பிடிக்காமல் தமிழகத்தில் உடனடியாக முழு மதுவிலக்கை அரசு அறிவிக்க வேண்டும். அதுதான் அவரது மறைவுக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:-

காந்தியவாதியும், மதுவிலக்கு ஆர்வலருமான சசிபெருமாளின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். போராட்டக் களத்திலேயே உயிர் நீத்த சசிபெருமாளின் கனவான மதுவற்ற தமிழகம் உருவாகத் தொடர்ந்து போராடுவதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

இதேபோல், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ, அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பா.இசக்கிமுத்து, இளைய தலைமுறைக்கட்சி பொதுச் செயலாளர் இனியன், சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவர் வி.அன்பழகன் உள்பட பலர் காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக