வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் ! சுமார் 62 பேர் கொலை! நோ தற்கொலை???


ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.சுதிர் ஷர்மா – பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் இவரொரு சாதாரண ஆர்.எஸ்.எஸ். அனுதாபி. அம்மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்திவரும் சரசுவதி சிஷு மந்திர் என்ற பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்தவர். சுதிர் ஷர்மாவின் தந்தை கூட்டுறவு பால் சங்கத்தில் எழுத்தராகப் பணியாற்றிக்கொண்டே, மாலை நேரத்தில் வீடுவீடாகச் சென்று பால் ஊற்றிக் கிடைத்த வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்றியவர். ஆனால், இன்று சுதிர் ஷர்மாவின் அந்தஸ்தே வேறு. 20,000 கோடி ரூபாய் மதிப்புமிக்க நிறுவனங்களின் அதிபர் அவர். சுரங்கம், கல்வி என அவரது தொழில் சாம்ராஜ்யம் பரந்து கிடக்கிறது.
சுதிர் ஷர்மாவின் “நல்ல காலம் (அச்சே தின்)” 2003-ல், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த பிறகு தொடங்கியது.
அந்த ஆண்டில்தான் சுதிர் ஷர்மா தான் பார்த்துவந்த வேலைகளையெல்லாம் உதறிவிட்டு, மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசில் சுரங்கம் மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக இருந்த இலட்சுமிகாந்த் ஷர்மாவிடம் தனி உதவியாளராகச் சேர்ந்தார். அதன் பிறகு, மத்தியப் பிரதேசத்துக்கு வந்துவிட்டுத் திரும்பும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு எல்லாமுமாக இருந்து, அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளையும் செய்துகொடுக்கும் ‘தொண்டில்’ சுதிர் ஷர்மாதான் நம்பர் 1 ஆகத் திகழ்ந்தார்.
மத்திய அமைச்சராக உள்ள தர்மேந்திர பிரதான், பா.ஜ.க.வின் தேசியத் துணைத் தலைவர் பிரபாத் ஜா, அவரது இரு மகன்களான ஆர்.எஸ்.எஸ். கூடுதல் பொதுச் செயலர் சுரேஷ் சோனி, பா.ஜ.க. எம்.பி. அனில் தவே ஆகியோருக்கும் சுதிர் ஷர்மாவிற்கு இடையே கொடுக்கல் வாங்கல் இருக்கும் அளவிற்கு நெருக்கமுண்டு. இவர்கள் மட்டுமல்ல, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சௌஹான் குடும்பத்தினரோடும் சுதிர் ஷர்மாவிற்கு நெருக்கம் இருந்திருக்கிறது. இப்படி கடந்த பத்தாண்டுகளில் கிடுகிடுவென வளர்ச்சியடைந்த சுதிர் ஷர்மா இன்று வியாபம் ஊழல் வழக்கில் கைது செயப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஜகதீஷ் சாகர் – இந்தூரைச் சேர்ந்த அலோபதி மருத்துவர். இவரது வீட்டில் நோயாளிகளின் கூட்டத்தைவிட, மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தரச் சொல்லி, கையில் பணக்கட்டுகளோடு காத்திருக்கும் கூட்டம்தான் அதிகமிருக்கும். இவரது விரல் அசைந்தால் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்; அரசுத் துறைகளில் வேலை கிடைக்கும். அதற்கு ஏற்ப ஒரு வலைப்பின்னலையே உருவாக்கி இயக்கி வந்தவர்தான் ஜகதீஷ் சாகர்.
இலட்சுமிகாந்த் ஷர்மா, சுதிர் ஷர்மா
வியாபம் ஊழலின் சூத்திரதாரிகள் : ம.பி மாநில முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் இலட்சுமிகாந்த் ஷர்மா (இடது) மற்றும் அவரது முன்னாள் உதவியாளரும் ஆர்.எஸ்.எஸ் அனுதாபியுமான சுதிர் ஷர்மா.
இவருக்குப் போட்டியாக இன்னொரு வலைப்பின்னலை இயக்கி வந்தவன் சஞ்ஜீவ் ஷில்ப்கர். வியாபம் ஊழலின் முக்கிய புள்ளிகளான இருவரும் கைது செயப்பட்டுள்ளனர்.
நம்ரதா தமோர் – வியாபம் ஊழல் வழியாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நம்ரதாவின் உயிரற்ற உடல் இருப்புப் பாதை அருகே 2012-ஆம் ஆண்டு ஜனவரியில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டாலும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை மூடியது, ம.பி. போலீசு.
அக்ஷய் சிங் – ஆஜ் தக் இந்தி மொழி தொலைக்காட்சியின் செய்தியாளரான இவர், நம்ரதா கொலை குறித்து அவரது பெற்றோரை பேட்டியெடுத்து திரும்பும் வழியிலேயே வாயில் நுரை தள்ளி மர்மமான முறையில் இறந்து போனார்.
ம.பி முதல்வர் சிவராஜ் சௌஹான்.
வியாபம் ஊழலை விரிவாக்கி, நிறுவனமயமாக்கிய பெருமை கொண்ட ம.பி முதல்வர் சிவராஜ் சௌஹான்.
1000-க்கும் மேற்பட்டவர்கள் ஆள்மாறாட்டம், விடைத்தாளைத் திருத்துவது போன்ற மோசடியான வழிமுறைகளின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஏறத்தாழ 1,40,000 பேர் பல்வேறு மோசடிகளின் மூலம் அரசு வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள். ம.பி. அரசைச் சேர்ந்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்வி அதிபர்கள், தனியார் தனிப்பயிற்சி நிலைய அதிபர்கள், பெரு வியாபாரிகள், அரசு ஒப்பந்ததாரர்கள் என ஒரு பெரிய கும்பலே இந்த ஊழலை இயக்கிப் பலன் அடைந்திருக்கிறது. ஏறத்தாழ 9,000 கோடி ரூபாய் வரை இலஞ்சப் பணம் கைமாறியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஊழல் அம்பலமாகி விசாரணை தொடங்கிய பின், ஊழலோடு தொடர்புடைய 50-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்து போனார்கள். மருத்துவ மாணவர்கள், இடைத்தரகர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் எனப் பலரும் இறந்து போனவர்களில் அடக்கம். இதுதான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்து, இன்று நாடுதழுவிய அளவில் விவாதிக்கப்படும் வியாபம் ஊழலின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம். சுதிர் ஷர்மாவும், ஜகதீஷ் சாகரும், நம்ரதா தாமோரும், அக்ஷ சிங்கும் ‘பாரதத்தையே’ சற்று உலுக்கிப் போட்ட இந்த ஊழல் புராணத்தின் கதாபாத்திரங்கள்.
வியாபம் ஊழல் இரண்டு விஷயங்களை மிகவும் துலக்கமாக நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது. முதலாவதாக, அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தாமே வரையறுத்துக் கொண்ட தமது கடமைக்கு எதிராகத் திரும்பி, மக்கள் விரோத அமைப்பாக மாறியிருக்கும் கட்டமைப்பு நெருக்கடிக்கு எடுப்பான உதாரணமாக வியாபம் ஊழல் விளங்குகிறது. இரண்டாவதாக, இப்படி எதிர்நிலை சக்திகளாக மாறிவிட்ட நிறுவனங்களை ஆளும் உரிமை இந்து மதவெறிக் கும்பலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கையில் சிக்கும்பொழுது, அது எவ்வளவு தூரத்துக்கு அபாயகரமானதாகவும், முதுகுத்தண்டையே சில்லிட வைக்கும் கிரிமினல்தனமானதாகவும் மாறும் என்பதையும் வியாபம் ஊழல் நமக்குப் புரிய வைத்திருக்கிறது.
***
“இலஞ்சம் கொடுத்தும், ஆள் மாறாட்டம் செய்தும், விடைத்தாள்களைச் சட்டவிரோதமாகத் திருத்தியும் அரசுப் பணிகளிலும், தொழில் படிப்புகளிலும் சேருவது மற்ற மாநிலங்களில் நடைபெறவில்லையா” என்று மடக்குகிறார்கள், ஆர்.எஸ்.எஸ். சார்பாகப் பேசும் அறிவாளிகள். உண்மைதான்; தமிழகத்தில் தொகுதி-1 வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பணி நியமனம் சமீபத்தில் கேள்விக்குள்ளானது. அவர்களது விடைத்தாள்கள் மோசடியான முறைகளில் திருத்தப்பட்டு, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அம்பலமாகி, அவர்களது நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. பீகார் மாநிலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ்களைக் காட்டி அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செயப்பட்டனர். இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக சி.பி.எஸ்.இ. நடத்திய தேர்வில் மோசடிகள் நடந்திருப்பது அம்பலமாகி, அத்தேர்வு ரத்து செயப்பட்டது. இப்படி மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் மோசடிகள் நடப்பது நாடெங்கும் பரவலாகக் காணப்பட்டாலும், வியாபம் ஊழலோடு ஒப்பிடும்பொழுது இவையெல்லாம் பாச்சாக்கள் அல்லது ஜுஜுபிக்கள்.
ஜகதீஷ் சாகர், சஞ்ஜிவ் ஷில்ப்கர்.
வியாபம் ஊழலை ம.பி முழுவதும் விரிவாக்குவதற்கு ஏற்ற கிரிமினல் வலைப்பின்னலை உருவாக்கி இயக்கி வந்த ஜகதீஷ் சாகர் (இடது) மற்றும் சஞ்ஜிவ் ஷில்ப்கர்.
பீகார் மாநிலத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்களது உறவினர்களே பள்ளிக்கூட கட்டிடத்தில் ஏறி பிட்டைத் தூக்கிப் போடும் காட்சி சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகியது. இதனையொட்டி பொது அறம் இந்தளவிற்கு வீழ்ச்சியடைந்துவிட்டதே என்று அழுகாச்சி விவாதங்கள் தொலைக்காட்சிகளில் நடந்தன. மண்டலை ஆதரிக்கும் பிற்பட்ட சாதிக் கூட்டணி ஆளும் பீகாரில் நடந்த அந்த முறைகேடு ஒருவகையில் பாமரத்தனமானது. ஆனால், இப்படியான முறைகேட்டை பார்ப்பன பாசிசக் கும்பல் தலைமையேற்று நடத்தினால், அது எந்தளவிற்கு ஹை-டெக்காகவும், கிரிமினல்தனம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதை வியாபம் ஊழல் எடுத்துக் காட்டியிருக்கிறது.
ஒரு தொழில்முறை நேர்த்தியோடும், மாநிலம் தழுவிய அளவில் தரகர் வலைப்பின்னலை அமைத்துக் கொண்டும், மோசடிகளுக்குத் தக்கவாறு “ரேட்டை” நிர்ணயித்துக் கொண்டும் பா.ஜ.க. அரசின் ஆதரவோடு நடத்தப்பட்டிருப்பதுதான் வியாபம் ஊழல். போட்டித் தேர்வுகளை நடத்தி தொழில் படிப்புகளுக்கும் அரசுப் பணிகளுக்கும் ஆட்களை நியாயமான முறையில் தேர்ந்தெடுக்க உருவாக்கப்பட்ட “வியாபம்” என்ற அரசுக் கட்டமைப்பே, கோடிகளுக்கும் இலட்சங்களுக்கும் சீட்டுக்களை விற்கும் ஏஜெண்டாக மாறிப் போன அயோக்கியத்தனம்தான் வியாபம் ஊழல். இந்த ஊழலை அம்பலப்படுத்த துணிந்தவர்களையும், இந்த ஊழலுக்குச் சாட்சியங்களாக இருப்பவர்களையும் அடுத்தடுத்துக் கொன்றொழிப்பதன் மூலம் இந்த ஊழலை அடியோடு மறைத்துவிட முயலுவதோடு, இந்தக் கொலைகள் மூலம் ஊழலில் சம்பந்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் மேல்மட்டத் தலைவர்களைக் காப்பாற்ற முயலுகின்ற அதிபயங்கர சதியாகவும் வியாபம் ஊழல் பரிமாணம் எடுத்திருக்கிறது.
***
த்தியப் பிரதேச தொழில் தேர்வு வாரியம் என்பதன் (இந்தி மொழி) சுருக்கம்தான் வியாபம். இது தமிழ்நாடு அரசு தேர்வாணையத்துக்கு நிகரானது. வியாபம் 1970-களில் ஒரு சுயேச்சையான, சுயநிதி கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டு, முதலில் மருத்துவ படிப்புக்கும், பின்னர் பொறியியல் படிப்புக்கும், 40 அரசுத் துறைகளுக்கும் ஆளெடுப்பதற்கான நுழைவு/போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு அதனிடம் படிப்படியாக ஒப்படைக்கப்பட்டது. 1990-களின் பின் இந்நிறுவனத்தில் முறைகேடுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டாலும், மத்தியப் பிரேதசத்தில் 2003-ல் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்ட பிறகுதான், இந்த ஊழலும், முறைகேடுகளும் அசாதாரண முறையில் விரிவாக்கப்பட்டு, நிறுவனமயமாக்கப்பட்டது.
பங்கஜ் திரிவேதி, நிதின் மொஹிந்திரா.
வியாபம் முறைகேடு தடங்கலின்றி நடைபெறுவதை மேற்பார்வையிட்டு வந்த தேர்வுக் கண்காணிப்பாளர் பங்கஜ் திரிவேதி (இடது) மற்றும் நிதின் மொஹிந்திரா.
மத்தியப் பிரதேச மாநில முதல்வராக சிவராஜ் சிங் சௌஹான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, 2007-ல் வியாபம் தொடர்பாக ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். இதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், அனைத்து அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் அதிகாரம் கொண்ட ஒரே அமைப்பாக வியாபம் மாற்றியமைக்கப்பட்டது. இச்சட்டத் திருத்தத்துக்குப் பிறகான காலக்கட்டத்தில்தான் (2007 முதல் 2013 வரை) வியாபம் ஊழல் அதன் உச்சத்தை எட்டியது. இதேகாலக் கட்டத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் புற்றீசல் போலப் பெருகியது தற்செயலானதல்ல. அதேபோல இந்த ஊழலின் தலைமையாக ஷர்மாக்கள், திரிவேதிகள், மிஷ்ராக்கள் என்ற பார்ப்பன சாதிகளைச் சேர்ந்த அதிகார கும்பல் இருப்பதும் தற்செயலானதல்ல.
உயர் கல்வி அமைச்சர் இலட்சுமிகாந்த் ஷர்மாவின் தனி உதவியாளராகச் சேர்ந்த சுதிர் ஷர்மா, வியாபம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளும் மோசடிகளும் எவ்விதத் தடங்கலின்றி நடப்பதற்கு ஏற்றவாறு அதன் அதிகாரக் கட்டமைப்புக்குள் தனது தலையாட்டிகளை அமர வைத்தார். இத்திட்டத்தின்படி கல்லூரி விரிவுரையாளர் என்பதைத் தாண்டி வேறெந்த சிறப்பான தகுதிகளுமற்ற இந்தூரைச் சேர்ந்த பங்கஜ் திரிவேதி வியாபமின் தலைமை தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் எந்தெந்த வழிகளில் முறைகேடுகளைச் செவது என்பதற்கான மூளையாகச் செயல்பட்ட திரிவேதி, இதற்கு ஏற்ப வியாபமில் தனக்கு வேண்டப்பட்டவர்களை கீழ் அதிகாரிகளாக நியமித்துக் கொண்டார். இவரால் வியாபமின் கணினித் துறையில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிதின் மொஹிந்திரா, அஜய் சென் ஆகிய இருவரும்தான் இலஞ்சம் கொடுத்த மாணவர்களின் விடைத்தாள்களைச் சட்டவிரோதமாகத் திருத்தியும், ஆள் மாறாட்டம் செவதற்கு ஏற்ப தேர்வு எண்களில் முறைகேடுகளைச் செய்தும் இந்த மோசடிகளைத் தடங்கலின்றி நடத்திச் சென்றனர். சி.கே.மிஷ்ரா என்ற மற்றொரு அதிகாரி வியாபமிற்கும் இடைத்தரகர்களுக்கும் இடையேயான பாலமாகச் செயல்பட்டார்.
நம்ரதா தமோர், அக்ஷய் சிங்
கழுத்து நெறித்து கொல்லப்பட்ட வியாபம் ஊழலின் சாட்சிகளுள் ஒருவரும் மருத்துவ மாணவியுமான நம்ரதா தமோர் (இடது) மற்றும் நம்ரதா கொலையை விசாரித்துத் திரும்பும் பொழுது மர்மமான முறையில் இறந்து போன பத்திரிகையாளர் அக்ஷய் சிங்
இலட்சுமிகாந்த் ஷர்மா, சுதிர் ஷர்மா, பங்கஜ் திரிவேதி என மேல்மட்டத்தில் மட்டுமின்றி, கீழேயும் ஒரு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது. இந்தூரைச் சேர்ந்த அலோபதி மருத்துவர் ஜகதீஷ் சாகரும், சஞ்ஜீவ் ஷில்ப்கரும் அரசியல்வாதிகள், மருத்துவர்கள், வியாபாரிகள், அரசு ஒப்பந்ததாரர்களைக் கொண்ட வலைப்பின்னலை இயக்கும் பொறுப்பில் இருந்தனர். இந்தக் கீழ்மட்ட வலைப்பின்னல் “மார்கெட்டிங் பிரிவு”,- அதாவது இலஞ்சம் கொடுப்பதற்குத் தயாராக உள்ள மாணவர்களைத் தேடிப் பிடித்து, சலித்துத் தேர்ந்தெடுப்பது என்றும், போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்துவதற்கான பிரிவு என்றும் இரு பிரிவுகளாகச் செயல்பட்டது. இந்த ஊழலில் பல கோடி ரூபாய் பெறுமான பணப்புழக்கம் ஏற்பட்டதற்கு ஏற்ப இந்தக் கீழ்மட்ட வலைப்பின்னலின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போனது.
05-captionமருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்துவதுதான் வியாபம் ஊழலின் பணம் காச்சி மரமாக இருந்திருக்கிறது. எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வில் மோசடிகள் செவதற்கு மட்டும் 15 இலட்சம் முதல் 35 இலட்ச ரூபாய் வரையும், மருத்துவ மேல்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் செவதற்கு 40 இலட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையும் இலஞ்சம் பெறப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இந்த ஊழலை விசாரித்து வந்த சிறப்பு அதிரடிப் படை, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதற்கு 80 இலட்சம் முதல் 1.5 கோடி ரூபாய் வரை இலஞ்சம் பெறப்பட்டிருப்பதாக ம.பி. உயர்நீதி மன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் மோசடிகள் நடத்தப்பட்ட விதம் பார்ப்பன-பாசிசக் கும்பலின் கிரிமினல்தனத்தைப் புட்டு வைக்கிறது. இம்மோசடி, “முன்னாபாய் ஸ்டைல், ஆள்மாறாட்டம், ரயில் இன்ஜின்-பெட்டி முறை, விடைத்தாளைத் திருத்துவது” என நான்கு வழிகளில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. மாஃபியா கும்பல் ஸ்கெட்ச் போட்டு எதிரியின் கதையை முடிப்பது போல, ஸ்கெட்ச் போட்டு இந்த நான்கு வழிகள் மூலம் நுழைவுத் தேர்வு மோசடியை நடத்தி வந்திருக்கிறது, பார்ப்பன-பாசிச கும்பல். இலஞ்சத்தின் அளவுக்கு ஏற்ப இந்நான்கு வழிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு வழிகள் குறித்தும், இதனால் பலனடைந்த ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கே.எஸ். சுதர்சன் தொடங்கி சௌஹான் வரையிலான பா.ஜ.க. தலைவர்கள் குறித்தும்; இந்த ஊழலைத் திட்டமிட்டு நடத்திய இந்துமதவெறிக் கும்பலுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்கள், தனியார் தனிப்பயிற்சி நிறுவன அதிபர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்தும், இந்த ஊழல் அம்பலமான பிறகு அதனை மூடிமறைக்க சௌஹான் அரசு எடுத்த முயற்சிகள் குறித்தும், இந்த ஊழலின் முக்கிய சாட்சிகளான இலஞ்சம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களும், அம்மாணவர்களுக்கும் மேல்மட்ட அதிகார கும்பலுக்கும் பாலமாக இருக்கும் இடைத்தரகர்களும் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொன்றொழிக்கப்பட்டு வருவது குறித்தும் அடுத்த இதழில் காண்போம். வினவு.com

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக