செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தாய்லாந்து இந்து கோவிலில் குண்டு வெடிப்பு 27 பேர் உடல் சிதறி பலி 80 பேர் படுகாயம்


தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்து கோவில் வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 27 பேர் உடல் சிதறி பலியாயினர். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கின் மத்திய பகுதியில் சித்லோம் என்ற இடம் உள்ளது. இங்குள்ள ராஜ்பிரசாங் சந்திப்பில், பிரம்மதேவன் இந்து கோவில் அமைந்து இருக்கிறது.
இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த பகுதியில் 3 பெரிய வணிக வளாகங்களும், சில நட்சத்திர ஓட்டல்களும் இருப்பதால் இங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.

குண்டு வெடித்தது இந்த நிலையில், இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணி அளவில்(பாங்காக்கில் இரவு 7 மணி) பிரம்மதேவன் கோவில் வளாகத்தின் உள்ளே காம்பவுண்டு சுவர் அருகே மறைத்து வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கு பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது.
அப்போது மாலை நேரம் என்பதால் தங்களுடைய பணிகள் முடிந்து ஏராளமானோர் அந்த பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களில் 100–க்கும் மேற்பட்டோர் குண்டு வெடிப்பில் சிக்கி நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர்.
27 பேர் பலி இதில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 80–க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியே ரத்தக் காடாக காட்சியளித்தது. பலியானவர்களில் 4 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். எனினும், இறந்தவர்களில் பலருடைய உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்து கிடந்தன.
குண்டு வெடித்த சத்தத்தை கேட்டதும் பொதுமக்கள் உயிர் தப்பிக்க கூச்சலிட்டவாறே அங்கும் இங்குமாக ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், குழப்பமும் நிலவியது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும், போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்தனர். போலீசார் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். அங்கு பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் 2 குண்டுகள் அப்பகுதியில் இன்னும் குண்டுகள் வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ராஜ்பிரசாங் சந்திப்பில் மக்கள் நடமாட போலீசார் உடனடியாக தடை விதித்தனர்.
தவிர, உயிர் தப்பிக்க பல்வேறு இடங்களில் மறைந்து கொண்டவர்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் மேலும் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க வைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த குண்டுவெடிப்பில் இந்தியர்கள் யாரும் இறந்ததாக தகவல் இல்லை என்று அங்குள்ள இந்திய தூதர் தெரிவித்தார்.
சீர்குலைக்க சதி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தாய்லாந்து அரசு கருதுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தலைநகர் பாங்காக்கில் இதுவரை பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது   dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக