புதன், 5 ஆகஸ்ட், 2015

ம.பி.யில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்களின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..பயணிகள் 50 பேர் பலி ?

போபால்: மும்பையிலிருந்து வாரணாசி சென்ற காமயானி எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் ஹர்தா என்ற இடத்தில் இன்று அதிகாலை தடம் புரண்டன. இந்த 5 பெட்டிகள் தடம் புரண்டு மசாக் என்ற ஆற்றில் கவிழ்ந்தன. இந்த விபத்து நிகழ்ந்த சற்று நேரத்தில் ஜபல்பூரிலிருந்து மும்பை வந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் 10 பெட்டிகளும் அதே இடத்தில் தடம் புரண்டன. இந்த இரு விபத்துகளில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மும்பையிலிருந்து வாரணாசிக்கு காமயானி ரயில் நேற்று இரவு வழக்கம் போல் புறப்பட்டுச் சென்றது. அந்த ரயில் மத்தியபிரதேச மாநிலம் ஹர்தா என்ற பகுதியிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மசாக் ஆற்றின் மீதிருந்த பாலத்தை கடந்த போது அதன் 5 பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறினர். mp train தடம் புரண்ட வேகத்தில் ரயிலின் 5 பெட்டிகள் மசாக் ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்த ஹர்தா மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆற்றுக்குள் கவிழ்ந்த பெட்டிகளில் இருந்து சுமார் 60 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து கன மழை கொட்டி வருவதால், மசாக் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் பாலம் வலுவிழந்து இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பதற்றம் அடங்குவதற்குள் காமயானி ரயில் தடம் புரண்ட இடம் அருகே ஜபல்பூரிலிருந்து மும்பை நோக்கி வந்துகொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகளும் தடம் புரண்டன. இரு ரயில்கள் பெட்டிகள் தடம்புரண்டதையடுத்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கன மழையால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு 5 பெட்டிகள் கொண்ட ரயிலில் மூலம் மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதில் 25 மருத்துவர்கள் கொண்ட சிறப்பு குழு, போலீசார், மற்றும் மீட்புப் படையினர் சென்றுள்ளனர். கடும் இருள் மற்றும், கன மழை, வெள்ளத்தால் மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more at: tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக