வியாழன், 27 ஆகஸ்ட், 2015

குஜராத் கலவரம்! 10 பேர் பலி! இரண்டாவது நாளாக தொடர்கிறது..

அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் வன்முறை சம்பவம் இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு அரசுக்கு எதிராக நடத்திய பந்த், கலவரமாக வெடித்துள்ளது. இதனால் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முக்கிய நகரங்களில் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  9 காவல் நிலைய சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு கேட்டு ஹர்திக் பட்டேல் என்ற 21 வயது இளைஞன் சுமார் ஒரு லட்சம் பேரை ஒன்று திரட்டி போராட்டத்தை துவக்கினார். போராட்டத்தை தீவிரப்படுத்த நேற்று (புதன்கிழமை) முழு பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அதிகம் பதற்றம் நிறைந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
பந்த் தொடர்பாக வதந்திகள் பரவுவதை தடுக்க சமூக வலைதளங்களும், மொபைல் இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டது. நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் நூற்றுக்கணக்கான அரசு பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல இடங்களில் மோதல் சம்பவங்களும் கலவரங்களும் நிகழ்ந்தன. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆகமதாபாத்தில் 5 பேரும், பலன்பூரில் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த கலவரத்தில் ஒரு போலீஸ்காரரும் கொல்லப்பட்டுள்ளார். ADVERTISEMENT இதனால் சூரத், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் இன்றும் (வியாழன்) பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டை ராணுவத்தினரும், 53 துணை ராணுவ கம்பெனியினரும் மாநிலத்தின் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக பல முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் பட்டேல் சமூகத்தினர், கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 35 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும், காய்கறி, பால் போன்ற அத்யாவசிய பொருட்களை நகரங்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என வியாபாரிகளை வலியுறுத்தி உள்ளனர். வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என குஜராத் முதல்வர் ஆனந்திபன் பட்டேலும், பிரதமர் மோடியும் கேட்டுக் கொண்ட பிறகும் போராட்டம் ஓயவில்லை. மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் ஆனந்திபென் பட்டேலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். என்ன நடந்தாலும் போராட்டத்தை கைவிட பட்டேல் சமூகத்தினர் தயாராக இல்லை. அதே சமயம் குஜராத் அரசும், பட்டேல் சமூகத்தினருக்கு ஏற்கனவே 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதால், மேலும் இடஒதுக்கீடு வழங்க முடியாது என பிடிவாதமாக உள்ளது. இந்நிலையில் சம்பவம் குறி்த்து மாநில சட்டசபையில் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து துணை ராணுவப்படையினர் முக்கிய நகரங்களில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதனால் காந்தி பிறந்த பூமி, இன்று கலவர பூமியாக மாறி உள்ளது

Read more at:/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக